புலவர் குழந்தை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புலவர் குழந்தை
புலவர் குழந்தை
இயற்பெயர்/
அறியும் பெயர்
புலவர் குழந்தை
பிறந்ததிகதி (1906-07-01)சூலை 1, 1906
பிறந்தஇடம் ஈரோடு
இறப்பு செப்டம்பர் 22, 1972(1972-09-22) (அகவை 66)
பணி புலவர், எழுத்தாளர்
கல்வி நிலையம் சென்னைப் பல்கலைக்கழகம்
காலம் 1934
இலக்கிய இயக்கம் திராவிட இயக்கம்
துணைவர் முத்தம்மை
பிள்ளைகள் சமத்துவம், சமரசம்

புலவர் குழந்தை (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஈரோடு மாநகரத்தின் தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ”ஓல வலசு” என்னும் சிற்றூரில் முத்துசாமிக்கவுண்டர், சின்னம்மை ஆகியோருக்கு புலவர் குழந்தை பிறந்தார்.

கல்வி

பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவருடைய பொழுது போக்கு பாட்டெழுதுவது. 1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசில் இவருக்கு முன் படித்தவர் எவரும் இல்லை. அந்த காலத்தில் அந்த ஊரில் எவருக்கும் கையொப்பம் செய்யவும் தெரியாது. இவர் தாமாக தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று கொண்டிருந்த போது அந்த ஊரை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தார்.

ஆசிரியப்பணி

”புலவர்குழந்தை” ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். 38 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் 1924 முதல் 1962 முடிய 38 ஆண்டுகள் ஆசிரியராக தொண்டாற்றினார். 1941 முதல் 1962 வரை பவானி நகரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணிபுரிந்தார்.

இல்வாழ்க்கை

புலவர்குழந்தை முத்தம்மை என்பாரை திருமணம் புரிந்தார். சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண் பிள்ளைகளைப் பெற்றார். சமத்துவம் என்பவர் கோவையில் விவசாயக் கல்லூரியில் இள.அறி. (வேளா) பட்டம் பெற்றார். அந்தக் கல்லூரியிலேயே பணிபுரிந்து ஓய்வுபெற்றார். சமரசம் என்பவர் இரண்டாவது பெண் பி.ஏ.பி.எல். படித்து பவானியில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு உள்ளார்.

இலக்கியப்பணி

1926இல் புலவர் குழந்தை எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு, வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து, வீரகுமாரசாமி காவடிச்சிந்து, வெள்ளகோவில் வழிநடைச்சிந்து ஆகியவை அச்சாயின.

தந்தை பெரியாரின் மீது மரியாதையும், சுய மரியாதை கொள்கை மீது பற்றும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அறிஞர் குழு ஒன்றினை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர் குழந்தை. இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார். இந்த உரையுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது.

பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்கலக்காரிகை கற்று கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து, அதை முற்றிலும் எளிமையாக்கி ”யாப்பதிகாரம்” என்ற நூலை வெளியிட்டார். இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார். அதைப் போலவே தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் முழுமைக்கும் எளிய உரை எழுதி அனைவரையும் கற்கும்படி எளிதாக்கினார்.

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இன்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து தொடையதிகாரம் என்ற நூலும் வெளிவந்தது. கொங்குநாட்டின் மீதும் அங்கு வளர்ந்த தமிழ் புரவலர் மீதும் பற்றுகொண்ட குழந்தையவர்கள் கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறுகளைத் தொகுத்து கொங்குநாடும் தமிழும், கொங்குகுலமணிகள், கொங்கு நாடு ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டார்.

தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைப் பண்பு நலன்களை ஆராய்ந்து ”தொல்காப்பியர் காலத்தமிழர்” என்ற நூலையும் எழுதினார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம் முப்பத்திநான்கு. அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரிசையில் 3, இலக்கணப் பாங்கில் 3 , உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன.

குழந்தை எழுதிய நூல்களுள் ”இராவண காவியம்” புகழ் பெற்றது. இது 1948 இல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 17.05.1971 ம் நாளில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் தடை நீக்கப்பட்டது.[1][2]

இவரது நூல்கள் 2006 இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.[3]

புலவர் குழந்தையின் செய்யுள் நூல்கள்

  • இராவணகாவியம்
  • அரசியலரங்கம்
  • காமஞ்சரி
  • நெருஞ்சிப்பழம்
  • உலகப் பெரியோன் கென்னடி
  • திருநணா சிலேடை வெண்பா
  • புலவர்குழந்தைப் பாடல்கள்
  • கன்னியம்மன் சிந்து
  • ஆடி வேட்டை
  • நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
  • வெள்ளகோவில் வீரகுமாரசாமிரத உற்சவச்சிந்து
  • வீரகுமாரசாமி காவடிச்சிந்து
  • வெள்ளகோவில் வழிநடைச்சிந்து

உரை நூல்கள்

  • திருக்குறள் குழந்தையுரை
  • தொல்காப்பியபொருள்திகாரம் குழந்தையுரை
  • நீதிக்களஞ்சியம்

இலக்கணம்

  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்
  • இன்னூல்

உரை நடை நூல்கள்

  • தொல்காப்பியர் காலத்தமிழர்
  • திருக்குறளும் பரிமேலழகரும்
  • புவாமுல்லை
  • கொங்கு நாடு
  • தமிழக வரலாறு
  • தமிழ் வாழ்க
  • தீரன் சின்னமலை
  • கொங்குநாடும் தமிழும்
  • கொங்குகுலமணிகள்
  • அருந்தமிழ்விருந்து
  • அருந்தமிழ் அமிழ்து
  • சங்கத் தமிழ்ச் செல்வம்
  • ஒன்றேகுலம்
  • அண்ணல் காந்தி
  • தமிழ் எழுத்து சீர்திருத்தம்

பிற சிறப்புகள்

குழந்தை "வேளாண்" என்ற மாத இதழை 1946 முதல் 1958 வரை நடத்தினார். எழுத்து ஈடுபடுத்தியது போலவே பேச்சிலும் வல்லவராக விளங்கினார். "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற இயக்கத்தின் போது தமிழ்நாடு தமிழருக்கே என்ற எழுத்துக்கான அச்சு கட்டைகளை செய்து கொடுத்து ஒரு துணி வணிகம் கொண்டு வேட்டி, துண்டு, சேலை கரைகளில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.

மேற்கோள்கள்

  1. "Censorship of Dravidian Voices". April 2006. Archived from the original on 8 Jan 2018.
  2. "22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை". Tamil webdunia. Archived from the original on 19 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2019.
"https://tamilar.wiki/index.php?title=புலவர்_குழந்தை&oldid=5116" இருந்து மீள்விக்கப்பட்டது