புரூரவ சரிதை
புரூரவ சரிதை என்பது பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் ஒன்று. புரூரவன் என்பவனின் கதை இதில் சொல்லப்படுகிறது. இந்தத் தமிழ்நூலின் ஆசிரியர் ஐயம்பெருமாள் சிவந்த கவிராயர். இவரது இந்த நூலை வரராம வழுதி (வரதுங்கராம பாண்டியன்) கேட்டு மகிழ்ந்து பாராட்டினான்.
திருஞான சம்பந்தர் புரூரவா என்னும் இவனைப் பூசுரர் எனக் காட்டுகிறார். [1]
புரூரவன் என்னும் வடசொல்லுக்கு அதிகம் அழுபவன் என்பது பொருள். இவன் மகன் ஆயுஸ். இவன் வழியில் சந்திர குலம் தோன்றியது. [2]
புரூரவ சரிதை ஆசிரியர் ஐயம்பெருமாள் சிவந்த கவிராயர் இரும்புத்தொழில் செய்துவந்த கருங்கொல்லர். ஊர் தென்காசி. கச்சிப் பகுதியிலிருந்து வந்த காசிராமையன் என்பவரின் மைந்தர் மூவரில் அச்சுதன் என்பவன் வேண்டுகோளின்படி இவர் இந்த நூலைச் செய்திருக்கிறார். திருக்குறள், கம்பராமாயணம், சிந்தாமணி போன்ற நூல்களை இவர் நன்கு பயின்றவர் என்பதைப் பாடல்கள் காட்டுகின்றன.
கதை
- புரூரவன் கதை மகாபாரதத்திலுள்ள கிளைக்கதை. தமிழ்நூல் மச்சபுராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. [3]
- ஊர்வசி யை மணந்து சந்திர குலத்தைத் தழைக்கச் செய்தான்.
- புரூரவன் ஊர்வசியைக் கூடி ‘ஆயு’ என்னும் மகனைப் பெற்றுச் சந்திரகுலத்தைத் தோற்றுவித்தான்.
- புண்டரீகவல்லியை மணந்த்து
- பின்னர், கங்கைநாட்டு அரசன் மகள் ‘புண்டரீகவல்லி’ என்பவளைச் சுயம்வரத்தில் மணந்து வாழ்ந்துகொண்டிருந்தான்.
- சனிபிடித்த்து
- அப்போது ‘சனி பிடிக்கும் காலம்’ வந்ததை நாரதன் தெரிவித்தான். புரூரவன் சனிபகவானை நோக்கித் தவம் செய்தான். அப்போது புனலாடி மகிழும்போது வித்துமாலை என்பவன் புரூரவனின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான்.
- வயிற்றுப் பிழைப்பு
- பகைவன் நாட்டைக் கைப்பற்றியது சனியின் தாக்கம் என்று உணர்ந்த புரூரவன் காடு போந்து வாழ்ந்தான். அவன் மனைவி (அரசி) சந்திரகிரி நாட்டு வணிகன் ‘விச்சுவகுபுத்தன்’ என்பவனிடம் நெல் குத்தியும், அரசன் விறகு வெட்டியும் பிழைப்பு நடத்தினர். அப்போது அரசியை அடைய விரும்பிய வணிகன் அவனை வேற்றூரில் படகுக் குடிலில் தனிமைப்படுத்தினான்.
- வெள்ளம்
- மனைவியைக் காணாத விறகுவெட்டி அரசன் அவளைத் தேடிக்கொண்டு தன் இரண்டு மகன்களுடன் சென்றான். வழியில் வெள்ளம் அவர்களை அடித்துச் சென்றது. அந்த வழியே வந்த கும்பன் என்னும் ஆயன் ஒருவன் சிறுவர்களைக் காப்பாற்றி வளர்த்துவந்தான். தப்பிக் கரையேறிய அரசன் திரிகர்த்தன் என்னும் அரசன் நாட்டை அடைந்தான்.
- காந்திமதியை மணந்த்து
- திரிகர்த்தன் மகள் காந்திமதி. காந்திமதியை தன் தங்கை-மகனுக்குத் தரவேண்டும் என அரசன் நினைத்திருந்தான். அவளைத் தன் அண்ணன் மகனுக்குத் தரவேண்டும் என அரசி நினைத்திருந்தாள்.
- கயிலையில் பட்டிமன்றம்
- இடையில் கயிலை காட்சி வருகிறது. விதி பெரிதா, மதி பெரிதா எனப் பட்டிமன்றம். விதி பெரிது எனப் பிரமன் பேசுமிறான். மதி பெரிது எனத் திருமால் பேசுகிறார். இதில் காந்திமதியை யார் மணப்பான் என்றும் இடைச்செருகல் உரையாடலும் நிகழ்கிறது. அரசன் அரசி நினைக்கும் இருவரும் மணக்கப்போவதில்லை. செக்கடியிலுள்ள ஒரு நொண்டி மணப்பான் என்கிறான் பிரமன். திருமால் சினங்கொண்டு வெளியேறிவிடுகிறார்.
- கருடன் கருணை
- அரசி தன் மகளை நிறைந்த ஆடை அணிகலன்களுடன் பல்லக்கில் ஏற்றி அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். திருமால் தன் கருடனை அனுப்பி அந்த நொண்டியைத் தூக்கிச்சென்று தொலைவில் விடும்படி கூறுகிறார். கருடன் நொண்டி புரூரவனைக் கிரவுஞ்ச மலையில் விட்டுவிடுகிறது. அப்போது நொண்டி பசியால் துடிப்பது கண்ட கருடன் இரக்கம் கொண்டு அவனுக்கு இரை கொண்டுவரச் செல்கிறது. அரசி அனுப்பிய பல்லாக்கை இரை எனக் கருதி, கருடன் அந்தப் பல்லாக்கைத் தூக்கிக்கொண்டுவந்து மன்னன் முன் வைக்கிறது. அரசன் பல்லாக்கைத் திறந்தான். உள்ளை இருந்த காந்திமதி வெளிவந்து அரசனுக்கு மாலையிட்டாள். இந்தக் காட்சியை, சிவன், மால், பிரமன் ஆகிய மூவரும் முன்னின்று வாழ்த்தி வரம் கொடுத்தனர். திரிகர்த்தன் அவர்களுக்கு முறைப்படி மணம் செய்துகொடுத்தான். புரூரவன் காந்திமதியை மணந்துகொண்டு தன் நாட்டுக்கு மீண்டு தன் நாட்டைக் கவர்ந்த விந்துமாலியை வென்று முன்போல் அரசாண்டுவந்தான்.
- ஏமாங்கதன், கனகாங்கதன்
- கும்பன் என்னும் ஆயனிடம் வளர்ந்த புரூரவன் மக்கள் வில், வாள் பயிற்சி பெற்று அரசன் படையில் சேர்ந்தனர்.
- படகு
- அரசி வைத்து வணிகன் அனுப்பிய படகு புயலால் கரை ஒதுங்கிற்று. ஒற்றர் அரசனுக்குக் கூறினர். அரசன் புதிதாகப் படையில் சேர்ந்த இருவரையும் பாதுகாக்கும்படி அனுப்பிவைத்தான். அவர்கள் காவல்பணி செய்யும்போது தூக்கம் வராமல் இருக்கத் தன் விறகுவெட்டி தந்தையைப் பற்றியும், நெல்குத்தி தாயைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளே இருந்த அரசி அவர்களைத் தன் மக்கள் என உணர்ந்துகொள்கிறாள்.
- ஏமாங்கதனே! கனகாங்கதனே! என அழைக்கிறாள். மூவரும் புரிந்துகொள்கின்றனர். வணிகன் அரசியைத் தன் அடிமை என வாதிடுகிறான். பிள்ளைகள் தம் தாய் என்கின்றனர். அரசன் தன் மனைவி-மக்கள் என உணர்ந்துகொள்கிறான்.
- கற்பு - தீயில் இறங்கி மெய்ப்பித்தல்
- அரசியை அழைத்துவரப் பல்லாக்கு அனுப்புகிறான். அவள் அதில் ஏறாமல் நடந்தே வருகிறாள். அரசி தன் கற்பைத் தீயில் இறங்கி மெய்ப்பிக்கிறாள்.
- மங்கலம்
- மன்னன் அவளைக் கைப்பிடித்து மக்களோடு அரணமனை புகுகிறான்.
நூல்
1922 சனவரி முதல் 1925 செப்டம்பர் வரை, ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்த ‘புரூரவ சரிதை’ நூலில் 845 செய்யுட்கள் உள்ளன. 26 படலங்களாக இது அமைந்துள்ளது.
இது தமிழிலக்கிய உலகில் அதிகம் வழங்கப்படாத நூல். இடையே தொடர்ச்சியற்ற நிலையும் காணப்படுகிறது. நூல் அளவில் சிறியதாயினும் நயம் மிக்கது. சந்தம், மடக்கு, யாப்பு சொல்லப்படும் பொருளுக்கு ஏற்ப அமைந்து தமிழ் களிநடம் புரிகிறது.
அடுக்கு வருணனை
காக்கைமீது ஏறித் தன்முன் செல்லும் சனீசுவரனைப் புரூரவன் காணும் வருணனை
- ஒருங்காக நினைத்தவர்க்கு அழியாத ஆயுள்தரும் உரவோன் தன்னை
- முருங்காகத் தருஞ்சுடரோன் தருஞ்சேயை, காளிந்தி முன்னோன் தன்னை
- இருங்காக துண்டநறுஞ் செச்சையனைத், தென்திசைவாழ் இமையோர்க் கூட்டும்
- கருங்காகப் பரியோனை சவுரியானை இருகண்ணும் தெரியக் கண்டான் [4]
கெஞ்சும் நடை
அப்போது புரூரவன் கடவுளை வேண்டும் பாடல்
- மெய்யாய் அழியாத வெளிக்கிடையே
- பொய்யாய மாயை புகுத்தியவா!
- செய்யா! செயலற்றவர் சிந்தைவிடா
- ஐயா! எளியேன் உன் அடைக்கலமே.[5]
மடக்கு நடை
நாட்டை மீட்டு அரசனான புரூரவன் மக்களிடம் நடந்துகொள்ளும் முறை
- பார்த்தான் சிலரை, சிரங்கோடல் பயின்றான் சிலரை, வம்மின்என
- நேர்ந்தான் சிலரை, கரந்தொட்டு நின்றான் சிலரை, நெஞ்சழுந்தச்
- சேர்ந்தான் சிலரை, எதிர்கொண்டு சென்றான் சிலரை, வம்மின்என
- ஆர்த்தான் சிலரை, சிலரைஅடி தொழுதான் தொழுதற் கரியோனே [6]
நீதி நிரல்
- ஈதல் அறிவூக்கம் இன்சொல் பொறையுடைமை
- பேதம் அறப்புணர்த்தல் வாய்மை பிறழாமை
- ஓதல் பைபயிற்றல் ஒன்னார் உரனடங்க்க்
- காதல் நிரைகோடல் – ஈதன்றோ மன்னர்கடன் [7]
கம்பன்நடை
- பஞ்சிகுடி கொண்டபத பங்கய மிலங்க
- மஞ்சுகுடி கொண்டகுழல் மாலைபுடை வீழ
- நெஞ்சுகுடி கொண்ட அறி வோரும்நிலை பேர
- நஞ்சுகுடி கொண்டவிழி நன்குழைகள் தாவ [8]
உருப்பசி(ஊர்வசி) திருமகள் வேடம் பூண்டு இப்படி நடனம் ஆடினாளாம்.
புரூரவச் சக்கரவர்த்தி நாடக வாசகப்பா
- அரிச்சந்திரன் கதை போலப் புரூரவச் சக்கரவர்த்தி கதையும் தமிழ்நாட்டுத் தெருக்களில் நாடகமாக நடிக்கப்பட்டுவந்தது.
- புரூரவச் சக்கரவர்த்தி நாடகம் என்னும் நூல் இந்த நூலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நடிப்பதற்கென்றே பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இதனைப் புதுவை அப்பாசாமிப் பிள்ளை மகன் பெரியசாமிப் பிள்ளை நான்கு பாகங்களாகச் செய்தார். நான்கும் நான்கு இரவில் நடிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டவை. புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பா என்பது இவற்றிற்குப் பெயர். [9]
இதனையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர் – திரிவீழிமிழலைப் பதிகம்
- ↑ புருதுஷ்யந்தன், பரதன், சந்தனு, திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர் சந்திர குலத்தவர்.
- ↑ அத்தியாயம் 103-ல் 12 பாடல்கள்.
- ↑ மன ஒருமைப்பாட்டுடன் நினைப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் தரும் பெருமானின் மகன். காளிந்திக்கு அண்ணன். செச்சை எனப்படும் வெட்சி மாலை அணிந்தவன். இறந்தவர்கள் தென்திசையில் வாழ்வர். அவர்களுக்கு இடும் சோற்றை உண்ணும் காக்கைமேல் ஏறி வருபவன். இந்தச் சனி தன்முன் செல்லக் கண்டான்.
- ↑ கடவுளுக்கு வெட்டவெளி மெய்.அந்த மெய்க்குள் இருப்பது மாயை. மாயை உருவாகவும் உள்ளமாகவும் இயங்குகிறது. அது பொய்யானது. கடவுள் மெய்க்குள் பொய்யைப் புகுத்தியிருக்கிறான். அவன் செம்மையானவன். செயலற்றவர் நெஞ்சுக்குத் துணை அவனே. இறைவா! உன்னிடம் நான் அடைக்கலம்.
- ↑ இதில் மடக்கு மட்டுமல்லாது 'சிலரை' என்னும் சொல் மேலும் பயின்று வரும் எளிய இனிய நடை உள்ளது.
- ↑ இதில் நீதிகள் அடுக்கப்பட்டுள்ளன.
- ↑ செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய காலடிகளில் தாமரை தெரிந்ததாம். மேகம் குடியிருப்பது போன்ற கூந்தலில் மாலை சுழன்று ஆடியதாம். நெஞ்சைத் தன்பால் அடக்கியவர்களும் அவள் ஆட்டத்தைக் கண்டு நிலை தடுமாறினார்களாம். நஞ்சு போன்ற அவள் விழிகள் காதுக் குழைகள் ஆட்டத்தோடு சேர்ந்து ஆடினவாம்.
- ↑ 1112 பாடல்களைக் கொண்ட இந்த நூல் டெம்மி 250 பக்கம் கொண்டது.
மேற்கோள்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005