புரசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புரசு
இந்தியாவின் பெங்களூரில்
புரசின் இலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. monosperma
இருசொற் பெயரீடு
Butea monosperma
(Lam.) Taub.
வேறு பெயர்கள்

Butea frondosa Roxb. ex Willd.
Erythrina monosperma Lam.[1]
Plaso monosperma

புரசு, பலாசு, பொரசு, புரசை, முருக்கன், புனமுருக்கு (butea monosperma) என்ற பெயர்களால் அழைக்கப்படுவது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளைச் சேர்ந்த பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது ஒன்பதாம் நூற்றாண்டுவரை பலாசம் என்றே அழைக்கப்பட்டது.[2]

திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது.[3][4] இதனை கிளி மூக்கு பூ என்றும் அழைப்பார்கள். இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான சார்க்கண்ட்டின் மாநில மலராக இப்பூ விளங்குகிறது.[5]

இந்த மரம் வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாக்கித்தான், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா, மேற்கு இந்தோனேசியா முழுவதும் காணப்படுகிறது.[1]

விளக்கம்

புரசு மரம் சிறிய அளவிலான வறண்ட இலையுதிர் மரமாகும். இது 15 மீ (49 அடி) உயரம் வரை வளரும். இது மெதுவாக வளரும் தன்மை கொண்டது. இதன் கிளைகள் சீராக வளர்வதில்லை. இளம் மரங்கள் ஆண்டிற்கு சில அடிகள் வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. இதன் இலைகள் கூட்டிலைகளாக 8–16 செ.மீ (3.1–6.3 அங்குலம்) இலைக்காம்பு மற்றும் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட சிறகு வடிவானவையாக இருக்கும். ஒவ்வொரு சிற்றிலையும் 10–20 செ.மீ (3.9–7.9 அங்குலம்) நீளம் கொண்டவை. இதில் தனித்திருக்கும் இலை பெரிதாக இருக்கும். இளம் இலைகளின் அடியில் வெள்ளி நிற முடிபோன்று காணப்படும். பூக்கள் 2.5 செ.மீ (0.98 அங்குலம்) நீளத்தில், பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினைக் கொண்டவை. பூக்கள் களிமூக்கு வடிவில் செங்கல் நிறச் சிவப்பில் மலர்ந்திருக்கும். இதன் காய்கள் தட்டையானவையாக 15–20 செ.மீ (5.9–7.9 அங்குலம்) நீளமும் 4–5 செ.மீ (1.6–2.0 அங்குலம்) அகலமும் கொண்டவை.[6]

பூக்கள் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை கண்கவர் பூக்களைக் கொண்டிருக்கும், இருப்பினும் மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பூப்பதில்லை.[7] குளிர்காலம் மிகவும் குளிராகவோ, மிகவும் வறண்டதாகவோ அல்லது அதிக மழையாகவோ இருந்தால், மரங்கள் பூக்காமல் போகலாம்.

பயன்கள்

இம்மரம் அழகுக்காகத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப்பயன் உடையவை. இந்த மரம், பிசின், தீவனம், மருந்து, சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த மரப்பகுதியானது அழுக்கு வெள்ளையாகவும் மென்மையானதாகவும் இருக்கும். நீருக்கடியில் நீடித்து உழைக்கக்கூடியதாக இருப்பதால், கிணற்று ஓரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மரத்தால் செய்யப்பட்ட மரக் கரண்டிகள் பல்வேறு இந்து சடங்குகளில் வேள்விகளில் வளர்க்கப்படும் தீயில் நெய்யை வார்க்கப்பப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்து நல்ல கரியைப் பெறலாம். விவசாயிகள் பொதுவாக வயல் வரப்புகளில் இந்த மரங்களை நட்டு மண் அரிப்பைக் குறைக்க பயன்படுத்துகின்றனர். இம்மரத்தின் இளம் தளிர்கள் எருமைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் இலைகளைக் கொண்டு தையல் இலை, தொன்னை போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

பலாசத்தின் மற்றொரு முக்கியப் பயன் இதைத் தாக்கும் அரக்குப் பூச்சியான கெர்ரியா லக்காவால் உண்டாகிறது. இந்த பூச்சி மரத்தின் தண்டுப் பகுதியில் வளர்ந்து அரக்கை உண்டாக்குகிறது. ஷெல்லாக் எனப்படும் இந்த அரக்கில் மணமுள்ள பிசின், நிறப் பொருளில் மெழுகு, புரதங்கள், கனிம உப்புகள், மணப் பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த மெழுகை ஆப்பிள், ஆரஞ்சு பழங்களின்மேல் பூசப்படுவதால், அவற்றின் சேமிப்புக் காலம் அதிகரிக்கப்படுகிறது. அரக்கு உற்பத்திக்காகவே இந்தியாவின் மத்திய மாநிலங்களில் இந்தத் தாவரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.[8] இம்மரத்தின் கிளை, வேர் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் நார், கயிறு திரிக்கப்பயன்படுகிறது. இதன் மலரில் இருந்து தயாரிக்கப்படும் வண்ணப் பொடியை பொட்டு இடவும் ஹோலிக்கும் வட இந்தியாவில் பயன்படுத்துவர். துணிகளுக்கு காவி நிறமேற்ற இயற்கை சாயமாக இதன் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காட்சியகம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Butea monosperma (Lam.) Taub". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-05-18. Archived from the original on 2009-05-08. Retrieved 2009-10-24.
  2. "கிழக்கில் விரியும் கிளைகள் - 26: கிளிமூக்கு மலர்". தி இந்து. 16 ஏப்ரல் 2016. Retrieved 17 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. http://www.shaivam.org/sv/sv_purasu.htm
  4. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.18
  5. விரியும் கிளைகள் - 26: கிளிமூக்கு மலர் தி இந்து தமிழ் 16 ஏப்ரல் 2016
  6. Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-47494-5.
  7. Tandon, Rajesh; Shivanna, K. R.; Mohan Ram, H. Y. (November 2003). "Reproductive Biology of Butea monosperma (Fabaceae)". Annals of Botany 92 (5): 715–723. doi:10.1093/aob/mcg193. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-7364. பப்மெட்:14500327. 
  8. "அரசனை நம்பி, கைவிடப்பட்ட புரசம்". தி இந்து (தமிழ்). 23 ஏப்ரல் 2016. Retrieved 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=புரசு&oldid=444263" இலிருந்து மீள்விக்கப்பட்டது