பிரியா இரவிச்சந்திரன்
பிரியா இரவிச்சந்திரன் Priya Ravichandran | |
---|---|
பிறப்பு | சேலம் |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | |
பணி | தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை இணை இயக்குநர் |
விருதுகள் | இந்திய குடியரசுத் தலைவர் விருது (2013) & தமிழ் நாடு முதலமைச்சர் விருது (2012 & 2013) |
பிரியா இரவிச்சந்திரன் (Priya Ravichandran) என்பவர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைத் துறையின் இணை இயக்குநர் ஆவார்.[1] இவர் பெண் தீயணைப்பு அலுவலர்களில் முதல் அதிகாரியாகவும், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதல் பெண் அதிகாரியாகவும் உள்ளார். அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் தீயணைப்பு வீரரும் இவரே ஆவார்.[2] பிரியாவின் தன்னலமற்ற சேவையும் துணிச்சலும் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றால் மிகையல்ல.
இளமையும் கல்வியும்
பிரியா தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நல்லியப்பன் பட்டய கணக்காளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை தன்னுடைய வெற்றிக்கு உந்துதலாக இருந்ததாகவும், அரசு அதிகாரிக்குச் சேவையாற்ற வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் வாய்ப்பைப் பற்றி பேசுவது தானும் ஒரு அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டியதாகக் கூறுகிறார். தன்னுடைய வீட்டில் பாலின பாகுபாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள குளுனி மெட்ரிக்குலேசன் பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் ஆய்வு நிறைஞர் பட்டமும் பெற்றார்.[2] இவர் 1999ஆம் ஆண்டு பொதுச் சேவைகள் தேர்வை எழுதினார். தனது 26ஆவது வயதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முகமையின் (தொகுதி -1) பிரிவு அலுவலராக, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் 2003ஆண்டில் பணியினைத் தொடங்கினார். இவர் தனது பணியினைத் துவங்கும் போது இரண்டு மாதக் கைக் குழந்தையின் தாயாக இருந்தார்; இருப்பினும் இத்துறையில் கடுமையான உடல் பயிற்சியினைப் பெற்றார். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு சேவைக் கல்லூரியில் தனது பிரிவு அலுவலர் பயிற்சியினைச் சிறப்பான முறையில் முடித்தார். இங்கிலாந்தின் க்ளூசெஸ்டர்ஷையரில் உள்ள மோர்டன்-இன்-மார்ஷ் தீ சேவை கல்லூரியிலும் பயிற்சி பெற்றார்.
அரசுப் பணி
பிரியா தனது முதல் பணி நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் பதவியேற்பதற்கு முன்னதாக கோவை மண்டலத்தில் பணியாற்றினார்.[3] கோயம்புத்தூர் -நீலகிரி மாவட்டங்களின் கோட்ட அலுவலராகவும் பணியாற்றினார். கோவையில் ஒரு கட்டிட இடிபாடுகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுச் செயலாற்றியதைக் கண்ட இப்பகுதி மக்கள் இவரை வெகுவாக பாராட்டினர். இப்பகுதியின் அனைத்து மக்களின் நன்மதிப்பினைப் பெற்றார். பின்னர் அவர் தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். இங்கு இவர் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்குத் தீயணைப்பு திறன்களைப் பயிற்றுவித்தார். மாநில பொதுச் சேவை ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட மகளிர் நிலைய அதிகாரிகளின் உடல் சரிபார்ப்பு உட்படப் பல அரசு குழுக்களின் உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு தேர்வானைத் துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கான குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.[3]
இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பிரதிநிதிகளில் பிரியாவும் ஒருவர், தொழில்துறை இடர் மேலாண்மை படிப்பிற்காக ஜெர்மனிக்குச் சென்ற குழுவில் இருந்த ஒரே பெண்மணியும் இவரே ஆவார். 2012 சனவரியில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது, சென்னையில் பாரம்பரிய அரசு கட்டிடமான எழிலகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மத்திய சென்னையின் கோட்ட அதிகாரியான பிரியா அந்த இடத்திற்கு விரைந்தார். இந்த தீயைச் சமாளிக்க அதிக அளவில் தீயணைப்புத் துறை வீரர்களும் நவீன கருவிகளும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. கலாசு மகால் பாரம்பரிய மையத்தில் மீட்பு நடவடிக்கையின் போது பிரியா தனது சக அதிகாரியுடன் பலத்த காயமடைந்தார். இவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தீவிபத்தில் மீட்பு நடவடிக்கையில் பலியானார்.[2][4] பிரியா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்து அரசின் ஆதரவினை தெரிவித்தார். இவரது துணிச்சலான செயலை அங்கீகரிக்கும் விதமாக, இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு வீரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கமும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்ற முதல் பெண் அதிகாரியும் இவரே ஆவார்.
தமிழ்நாட்டின் வடக்கு மண்டல இணை இயக்குநராகப் பதவி உயர்வு மற்றும் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது மீட்புப் பணியில் இவரது மேற்பார்வை மற்றும் பணியினை கண்ட ஊடகங்கள் இவரது செயலினை வெகுவாக பாராட்டினர். பிரியா மாநிலத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான அர்ப்பணிப்பு, ஆற்றல் மற்றும் தைரியத்தின் சின்னமாக மாறிவிட்டார்.
விருதுகள்
- தன்னலமற்ற துணிச்சலான செயலுக்கான தமிழ்நாடு முதலமைச்சரால் 2012ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம்[5]
- 2013ஆம் ஆண்டில் இந்திய குடியரசுத் தலைவர் விருது[6]
- பெமினா பெண் சக்தி விருது (2013)
- தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவைக்கான தமிழக முதல்வர் விருது (2014)
மேற்கோள்கள்
- ↑ "Fire drill". தி இந்து. 18 April 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125052613/http://www.hindu.com/2011/04/18/stories/2011041861230400.htm. பார்த்த நாள்: 18 August 2012.
- ↑ 2.0 2.1 2.2 "NATIONAL / TAMIL NADU : Valiant officer suffers 40% burns". The Hindu. 2012-01-17. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2806944.ece?css=print. பார்த்த நாள்: 2012-03-23.
- ↑ 3.0 3.1 "SP assumes charge". தி இந்து. 13 October 2005 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125083028/http://www.hindu.com/2005/10/13/stories/2005101316070300.htm. பார்த்த நாள்: 18 August 2012.
- ↑ "Injured Divisional Fire Officer responding well to treatment". The Hindu. 24 January 2012. http://www.thehindu.com/news/cities/chennai/article2826487.ece. பார்த்த நாள்: 18 August 2012.
- ↑ "Chennai marches ahead on Republic Day". தி டெக்கன் குரோனிக்கள். 27 January 2012 இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120130162449/http://www.deccanchronicle.com/channels/cities/chennai/chennai-marches-ahead-republic-day-279. பார்த்த நாள்: 18 August 2012.
- ↑ "President’s medal for Fire Officer". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 18 August 2012. http://newindianexpress.com/cities/chennai/article591171.ece. பார்த்த நாள்: 18 August 2012.