பாலைப் பண்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழர் பொருள் இலக்கணத்தை அகப்பொருள் புறப்பொருள் என இரண்டாகப் பகுத்துக்கொண்டனர். அகப்பொருளை முதல், கரு, உரி என மூன்றாகப் பகுத்துக்கொண்டனர். கருப்பொருளைத் தொல்காப்பியர் தெய்வம், உணா, மா, மரம், புள், செய்தொழில், பறை, யாழின் பகுதி முதலானவை எனக் குறிப்பிடுகிறார். [1] நம்பி அகப்பொருள் கருப்பொருள் 14 என வரையறுத்துக்கொண்டுள்ளது. [2] இவற்றில் பறை, யாழ், பண் என்பன தமிழரின் இசை பற்றியவை. இதன் வழி ஐந்தொழுக்கப் பண்பாட்டுக்கும் ஐந்து வகையான பறைகளும், யாழிசைகளும், பச்களும் தோன்றின. இவற்றில் பாலைப்பறை, பாலையாழ், பாலைப்பண் என்பன பிரிவை உணர்த்துவன.

தலைவன் பரத்தை வீட்டில் வாழும்போது அவன் பிரிவைத் தலைவிக்குச் சொல்வதுபோல் காலை வேளையில் தலைவி வீட்டு வாயிலில் நின்றுகொண்டு பாலைப்பண் பாடுகிறான். இந்தப் பண் பிரிவை உணர்த்துவதைத் தலைவி உணர்ந்துகொள்கிறாள். இந்தப் பண்ணைப் பரத்தை வீட்டில் பாடிவிட்டு, என் வீட்டுக்கு முன் ‘மாலைப்பண்’ (முல்லைப்பண்) பாடக்கூடாதா என்று பாணனிடம் கேட்கிறாள். மாலைப்பண் ஆயர் ஆனிரைகளுடன் மாலை வேளையில் இல்லம் மீள்வதை உணர்த்தும் பண். [3]

மாதவி நடனம் ஆடும்போது ஆடல், இசை, நூல், தண்ணுமை, குழல், யாழ் ஆகியவற்றில் வல்ல ஆசிரியர்கள் அரங்கில் இருந்து இசை கூட்டித் தந்தனர். யாழிசைப் புலவன் 14 நரம்பு கொண்ட ‘செம்முறைக் கேள்வி’ என்னும் செங்கோட்டு யாழில் இசைத்தான். அவன் படுமலை, செவ்வழி, அரும்பாலை, மேற்செம்பாலை, மேற்பாலை ஆகிய பண்களைக் கூட்டிப் பாடினான். [4]

அடிக்குறிப்பு

  1. தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை, செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ, அவ் வகை பிறவும் கரு' என மொழிப தொல்காப்பியம் அகத்திணையியல் 20
  2. ஆரணங்கு , உயர்ந்தோர் , அல்லோர் , புள் , விலங்கு, ஊர் , நீர் ,பூ , மரம் , உணாப் , பறை , யாழ் , பண், தொழில் ; எனக் கரு ஈர்-எழு வகைத்து ஆகும். – நம்பி அகப்பொருள் 19
  3. பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு
    மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ்
    செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு
    நையும் இடம் அறிந்து, நாடு. - திணைமாலை நூற்றைம்பது 133

  4. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை 70-94
"https://tamilar.wiki/index.php?title=பாலைப்_பண்&oldid=20127" இருந்து மீள்விக்கப்பட்டது