பாலைக் கௌதமனார்
பாலைக் கௌதமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 11 பாடல்கள் சங்கநூல்களில் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ள 10 பாடல்களும், புறநானூற்றில் 366 எண்ணுள்ள பாடலும் இவரால் பாடப்பட்டவை.
பாலை என்பது இக்காலத்தில் கேரள மாநிலத்தில் பாலக்காடு என்னும் பெயருடன் விளங்கும் ஊரைக் குறிக்கும். கௌதமன் என்னும் பெயர் வடமொழித் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. புலவர் அந்தணர்.[1]. இமயவரம்பன் தம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் மீது இவர் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்தில் உள்ளன. தருமபுத்திரன்மீது இவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.
பதிற்றுப்பத்துப் பாடல்கள்
இவர் பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியதற்காக அரசன் பரிசளிக்க விரும்பி வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். புலவர் 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகவேண்டும்' என்றார். அரசன் பார்ப்பாரில் பெரியார் யார் எனக் கேட்டறிந்து அவரைக் கொண்டு வேள்வி செய்தான். ஒன்பது வேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்த புலவரும் அவரது பார்ப்பனியும் பத்தாவது வெள்விக்குப்பின் காணாராயினர் என்று அவருடைய பத்துப் பாடல்களுக்கு இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள பதிகம் கூறுகிறது.
இவர் தன் பாடல் ஒன்றில் பரிவேட்பு என்று குட்டுவன் இப்போது ஐயப்பன் மலை என்று கூறப்படும் சங்ககால அயிரை மலையில் செய்த அஸ்வமேத யாகத்தைக் குறிப்பிடுகிறார்.(21)
மற்றொரு பாடலில் (24) அந்தணர் ஆறு தொழில் புரிந்து ஒழுகுவர் என்று குறிப்பிட்டு அரசன் அவர்களை வழிமொழிந்து நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். 'ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், எற்றல்' என்பன அந்தரின் ஆறு தொழில்கள் என்று விளக்குகிறார். தம்மபத ஓதுதல், பிறரை தம்மபதம் ஓத உதவுமாறு செய்தல், யாசகம் செய்தல், பிறரை யாசகம் செய்ய உதவுமாறு செய்தல், பிறருக்குக் கல்வி புகட்டல், பிறர் தருவனவற்றை ஏற்றுக்கொள்ளுதல் என்பன அந்த ஆறு தொழில்கள். 'ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்' என்று வரும் திருக்குறளில் 'அறுதொழிலோர்' என்னும் தொடருக்கு இது விளக்கமாக அமைந்துள்ளது.
ஒரு பாடலில் (21) கடவுளுக்குச் செய்யும் பெரும்பெயர் ஆவுதி, மக்களுக்குச் செய்யும் அடுநெய் ஆவுதி என்னும் வேள்விகளைக் குறிப்பிடுகிறார்.
தருமபுத்திரனைப் பாடியது - புறநானூறு 366
இந்தப் பாடல்களின் சில அடிகள் சிதைந்துள்ளன. பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்த இந்தப் பாடலில் நிலையாமை பற்றிப் பேசப்படுகிறது. முரசு முழக்கத்துடன் தன் பெயரை நிலைநாட்டிக்கொண்டு வாழ்ந்த தனிப்பெருஞ் சிறப்புடையோரும் சென்று மாய்ந்தனர் என்று பாடல் குறிப்பிட்டுச் செல்கிறது.
பாடலில் 'அறவோன் மகனே' என விளிக்கும் தொடர் காணப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இந்தத் தொடரைக்கொண்டு 'தருமபுத்திரன்' என்னும் பெயரை உருவாக்கியுள்ளார்.
பாடப்பட்ட தருமபுத்திரன் ஒரு வள்ளல். அவன் சோறு வேண்டியவர்களுக்கு மாட்டை வெட்டிக் கறி சமைத்துச் சோறு போட்டான். கள் விரும்பியவர்களுக்குக் கள் தந்தான். பகல் வேளையில் பிறர் முயற்சிகளுக்கு உதவினான். இரவு வேளையில் மறுநாள் செய்யவேண்டியதை எண்ணிப்பார்த்துக் கொள்வான். இப்படி அவன் பண்புகள் பாராட்டப்பட்டுள்ளன.
அடிக்குறிப்பு
- ↑ பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் (பதிற்றுப்பத்து பதிகம் 3)