பாலச்சந்திர நெமதே
இயற்பெயர் | பாலச்சந்திர நெமதே |
---|---|
பிறந்ததிகதி | 1938 |
பிறந்தஇடம் | சங்கவி, ரேவர், மகாராட்டிரம் |
பணி | மராத்திய எழுத்தாளர் |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | ஞானபீட விருது, பத்மசிறீ (2011), சாகித்திய அகாதமி விருது |
பாலச்சந்திர நெமதே (மே 27, 1938) என்பவர் மராட்டியப் புதின ஆசிரியர், கவிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் எனப் பன்முகம் கொண்டவர். இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது (2014) இவருக்கு வழங்க முடிவு செய்து பாரதிய ஞானப் பீட விருதுத் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
பிறப்பும் கல்வியும்
மராட்டிய மாநிலத்தில் சங்கவி என்னும் சிற்றுரில் பிறந்தார். புனேயில் பெர்குசன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். டெக்கான் கல்லூரியில் மொழி நூலில் முதுவர் பட்டமும், மும்பைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துப் பட்டமும், வட மகாராட்டிரப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டமும் இலக்கிய ஆய்வுப் பட்டமும் பெற்றார்.
பணி
அகமது நகர், துலே, அவுரங்கபாது ஆகிய பல்கலைக் கழகங்களில் ஆங்கிலம் மராத்தி மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியராகப் பாலச்சந்திர நெமதே பணி புரிந்தார். ஒப்பீட்டு இலக்கியங்களையும் கற்பித்தார்.
படைப்புகள்
1963 இல் பாலசந்திர நேமதே கோசலா (கூட்டுப் புழு) என்னும் புதினம் எழுதி புகழ் பெற்றார். இந்தப் புதினம் மராட்டிய உலகிற்குப் புதிய வடிவம் கொடுத்தது. ஹூல், சரிலா, பிதார், சூல் ஆகியவை இவர் எழுதிய பிற புதினங்கள் ஆகும். இவையன்றி கவிதைத் தொகுப்புகளும் திறனாய்வுக் கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டன.
விருதுகள்
1991இல் சாகித்திய அகாதமி விருது தீகஸ்வயம்வர என்னும் விமர்சன நூலுக்காக வழங்கப்பட்டது. 2011 இல் பத்மசிறீ விருதைப் பெற்றார். 2014 ஆம் ஆண்டுக்குரிய ஞானப் பீட விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருது வரும் ஏப்ரல் மாதம் எழுத்தாளருக்கு வழங்கப்பெறும். இதற்குமுன் மராத்தியில் இவ்விருதினை 1974ல் வி. ச. காண்டேகர், 1988ல் ஷிர்வாத்கர் (எ) குஸ்மகராஜ் மற்றும் 2003ல் கோவிந்த் கராண்டிகார் (எ) விந்தா கராண்டிகார் ஆகியோர் பெற்றுள்ளனர்.
உசாத்துணை
- http://timesofindia.indiatimes.com/india/Jnanpith-Award-for-Marathi-litterateur-Nemade/articleshow/46146887.cms
- Marathi novelist Bhalchandra Nemade chosen for Jnanpith award, தி இந்து, நாள்: பிப்பிரவரி 7, 2015
- மராத்திய நாவலாசிரியர் பாலச்சந்திர நெமதேவுக்கு 2014க்கான ஞானபீட விருது, தி இந்து (தமிழ்), நாள்: பிப்பிரவரி 6, 2015