பழ. கோமதிநாயகம்
பழ. கோமதிநாயகம் (Pazha. Gomathinayagam, இறப்பு: டிசம்பர் 29, 2009, அகவை 63) தமிழர் பாசன வரலாறு என்ற ஆய்வு நூலை படைத்தவர். பாசனப் பொறியியல் வல்லுநர். தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் நீர்வளம் மற்றும் மேலாண்மைப் பணிகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியபின் பாசன வடிவமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் இளநிலைப் பொறியியல் பட்டமும் (1968), அண்ணா பல்கலைக்கழகத்தில் நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் (1980) பெற்றவர். அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகத்திலும், ஊட்டா பல்கலைக்கழகத்திலும், நீர்மேலாண்மையிலும், கற்பித்தலிலும் சிறப்புப் பட்டயம் பெற்றவர்.
பாசன விஷயங்களில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, தமிழகத்தில் முதன்முதலில் பாசன மேம்பாட்டுக்காகத் தற்போதைய காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் மோகனகிருஷ்ணனை முதல்வராகக் கொண்டு, திருச்சியில் பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தைத் தமிழக அரசு தொடங்கியபோது, அதனுடன் இணைந்து அங்கே அயல்பணிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர் வள மையத்திலும் அயல்பணிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
சங்க காலந்தொட்டே பாசனத் தொழில்நுட்பங்களில் வேறெந்த மேலை நாட்டையும் விடத் தமிழர்கள் மிகுந்த முன்னேற்றம் கண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளைச் சங்கத் தமிழ்ப் பாடல்களில் தொடங்கி, மாநிலம் முழுவதும் ஆறுகளிலும் ஏரிகளிலும் மேற்கொண்ட கள ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் மூலம் நிறுவி வந்தவர். இந்த வகையில் இவர் எழுதிய "தமிழர் பாசன வரலாறு' என்ற நூல், தமிழில் ஒரு முன்னோடி நூல். இப்போதும் பாசனத் தொழில்நுட்பம் கற்கும் பலருக்கும் ஆதார நூலாக விளங்குகிறது இந்த நூல்.
பூர்வீகத்தில் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவரான இவருடைய முனைவர் பட்ட ஆய்வும்கூட, தாமிரவருணி ஆற்றைப் பற்றியதுதான்.
தாமிரபரணி ஆற்றை முன்வைத்து "நதிநீர்ப் பிரச்னைகளில் சமூகப் பொருளாதாரப் பின்னணி' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
விருப்ப ஓய்வுக்குப் பின் சுவீடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பவானி ஆறு பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டார். ஸ்வீடன் பல்கலைக்கழக அழைப்பின்பேரில் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற தண்ணீர் பற்றிய உலகளாவிய ஆய்வரங்கில் பங்கேற்றுத் தன் ஆய்வில் கண்டவற்றை விளக்கினார்.
சாயத் தொழிற்சாலைகளால் நொய்யல் ஆறு, மற்றும் அமராவதி ஆறுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் களைய உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுக்களிலும் இடம் பெற்றிருந்தார். தான் படித்த மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் பாடத் திட்டக் குழுவிலும் உறுப்பினராகச் செயல்பட்டார்.
ஆய்வு நூல்கள், கட்டுரைகள்
பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான ஆய்வுக் கருத்தரங்குகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
இவர் எழுதியுள்ள 17 நூல்களில் - தமிழக பாசன வரலாறு, நிலவரை திருநெல்வேலி மாவட்டம், பெரியாறு அணை மறைக்கப்பட்ட உண்மைகள், தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை, ஆங்கிலத்தில் தமிழக ஏரிப் பாசன முறைமைகளில் பாரம்பரிய நீர் மேலாண்மை நடைமுறைகள், இந்திய ஏரிகளில் புனரமைப்பு மற்றும் மேலாண்மை சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், பழைமையின் அறிவைத் தேடி பாசன ஏரிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
இவர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தம்பியாவார்.
மேற்கோள்கள்
- ↑ Staff (2009-12-30). "பழ. நெடுமாறன் தம்பி கோமதிநாயகம் சென்னையில் மரணம்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
வெளி இணைப்புகள்
- தமிழர் பாசன வரலாறு படைத்தவர், தினமணி, டிசம்பர் 30, 2009