பன்ட்ரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பன்ட்ரி
இயக்கம்நாகராஜ் மஞ்சுளே
தயாரிப்புநவலகா ஆர்ட்ஸ்
ஹோலி பேசில் புரொடக்‌ஷன்ஸ்
இசைஅழகானந்தா தேஷ்குப்தா
அஷைய்-அதூல்(கரு பாடல்)
நடிப்புகிஷோர் கடம்
சோம்நாத்
ஷாயா கடம்
ராஜேஷ்வரி ஹாரத்
நாகராஜ் மஞ்சுளே
ஒளிப்பதிவுவிக்ரம் அம்லாடி
படத்தொகுப்புசந்திரன் அரொரா
விநியோகம்ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ்
ஜீ எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு17 அக்டோபர் 2013 (2013-10-17)(MIFF)
14 பெப்ரவரி 2014 (India)
ஓட்டம்104 நிமிடங்கள்
மொழிமராத்தி

பன்ட்ரி அல்லது ஃபன்ட்ரி (மராத்தி: फॅंड्री, ஆங்கிலம்: Fandry) என்பது மராத்தி மொழியில் உள்ள கிளை மொழியான கைக்காடி மொழியில் எடுக்கப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ள படமாகும். கைக்காடி மொழியில் பன்ட்ரி என்றால் பன்றி என்று அர்த்தம். கைக்காடி மொழியானது ஒரு திராவிட மொழியின் தாக்கத்தைக் கொண்ட மொழியாகும். இத் திரைப்பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவிற்கு இதுவே முதல் படம். இப்படத்தின் கதை சாதி அடிப்படையில் அமைந்து ஒருதலைக்காதலை மையமாக வைத்து நகருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் தலித் குடும்ப இளைஞனைப் பற்றிய கருக்கதையைக்கொண்டதாகவும், சாதிய வன்கொடுமையை எதிர்ப்பதாகவும் அமைந்துள்ள படம்.[1][2]

இந்த திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14, 2014 அன்று வெளியிடப்பட்டது.[3] மும்பையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி விருது பெற்றது.[4] 61 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இதன் இயக்குனருக்கு சிறந்த முதல் திரைப்படத்திற்கான இந்திரா காந்தி விருது கிடைத்தது.[5]

கதையமைப்பு

அகோல்நர் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள குடிசையில் ஜாபியாவின் குடும்பம் கடும் உழைப்பைச் செலுத்தி வாழ்க்கையைக் கழிக்கிறது. ஜாபியாவை சத்ரபதி சிவாஜி வித்யாலயாவில் கல்வி கற்க அனுப்புகின்றனர் குடும்பத்தினர். பல தொழில் செய்து வாழும் அவன் குடும்பத்தினர், ஊரெல்லாம் சுற்றி அலையும் பன்றியையும் வளர்க்கின்றனர். அவனது மூத்த அக்கா வரதட்சணையின் காரணமாக வீட்டோடு இருக்க, இரண்டாவது அக்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மணமகனின் வீட்டார் கேட்கும் வரதட்சணையைக் கொடுக்க அவன் அப்பா கடுமையாக உழைக்கிறார். ஆனால் ஜாபியாவிற்கு இதுபற்றிய கவலை ஏதும் இல்லை. அவனுடன் படிக்கும் மேல் சாதிப்பெண்ணான ஷாலுவோடு ஒருதலைக்காதல் வசப்படுகிறான். அவளைப்போல் தானும் சிவப்பாக இருந்தால் தன்னைக் காதலிப்பாள் என்று கருதி, கருங்குருவியின் சாம்பலைப் பூசினால் தான் சிகப்பாகவும், வசீகரமாகவும் மாறிவிடலாம் என தொன்மக் கதையில் சொல்லப்பட்டது போல் கருங்குருவியை தினமும் மரத்துக்கு மரம் தேடி அலைகிறான். கருங்குருவியையும், ஷாலுவையும் தன் நண்பனோடு பின்தொடர்கிறான். இதற்காக பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ஒருநாள் அந்த ஊரின் திருவிழா நடக்கும்போது, அவர்கள் வளர்க்கும் பன்றி, சாமியின் பிரதிமை ஊர்வலத்திற்குள் வந்து தீட்டை ஏற்படித்திவிட்டதாக ஊர் ஆதிக்க சாதியினர் கூற, அப்பன்றியைப் பிடிக்க முற்படுகிறார்கள்.

இந்தக் காட்சியை மற்றவர்கள் ஏளனம் செய்து இழிவுபடுத்துகிறார்கள். அப்போது அவர்களைத்தட்டிக் கேட்கும் ஜாபியா, அவர்களின் மேல் கல்லை எடுத்து எறிகிறான், அதோடு காட்சிகள் முடிகிறது. இழிவாகப் பேசும் மக்களின் மேல் எறியும் கல்லை சாதியின் மீது எறிவதாக இயக்குனர் காட்டியிருக்கிறார்.

வரவேற்பும் வெற்றியும்

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த திரைப்படம் பல்வேறு திரைத் திருவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் நாகராஜ் மஞ்சுளேவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.[6]

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=பன்ட்ரி&oldid=29587" இருந்து மீள்விக்கப்பட்டது