பண்புத்தொகை
Jump to navigation
Jump to search
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்.[1] ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக,
- நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை
- வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம்.
- சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு
- குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை
- எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.
எடுத்துக்காட்டுக்கள் (முறையே):
- வெண்கரடி = வெண்மை + கரடி
- வட்டக்கோடு = வட்டமான கோடு
- புளிச்சோறு = புளிக்கும் சோறு
- பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல்
- மூவேந்தர் = மூன்று + வேந்தர்
- செங்காந்தள் = செம்மையாகிய காந்தள்
- வட்டத்தொட்டி = வட்டமான தொட்டி
- இன்மொழி = இனிமையான மொழி
புணர்ச்சி
பண்புப் பெயர் புணரும்போது எத்தகைய மாற்றங்களைப் பெறும் என்பதை நன்னூல் விளக்குகிறது. [2] [3]
பண்புத்தொகை | விரி | விளக்கம் | விதி |
---|---|---|---|
நல்லன், சிறுபொருள் | நன்மை+அன், சிறுமை+பொருள் | [மை] விகுதி போயிற்று | ஈறு போதல் |
கரியன், சிறியிலை | கருமை+அன், சிறுமை+இலை | விகுதி போய் உகரம் இகரம் ஆயிற்று | இடை உகரம் [இ] ஆதல் |
பாசி, மூதூர் | பசுமை+இ, முதுமை+ஊர் | விகுதி போய் ஆதி நீண்டது | ஆதி நீடல் |
பைந்தார் | பசுமை+தார் | [மை] விகுதி கெட்டது. 'பசு' என நின்றதில் 'சு' என்பதில் உகரம் இகரம் ஆயிற்று. ஆதியாகிய [ப], [பா] என நீண்டது | அடி அகரம் ஐ ஆதல் |
குற்றி, நட்டாறு | குறுமை+ஆறு, நடுமை+ஆறு | விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது | தன் ஒற்று இரட்டல் |
செய்யன், வெவ்வுயிர் | செம்மை+அன், வெம்மை+உயிர் | விகுதி போய் முன் நின்ற மெய் திரிந்தது | இனையவும்,தன்னொற்றிரட்டல் |
பார்க்க
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "தொகை வகைகள்". Archived from the original on 2007-04-13. பார்க்கப்பட்ட நாள் 2007-04-24.
பண்புப்பெயர்ச் சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும்.
- ↑
ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே - ↑ நன்னூல் காண்டிகை உரை தரும் விளக்கம்