பஞ்சவன் (வானவர்கோன் ஆரம் பூண்டவன்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வானவர் கோன் என இந்திரனைக் குறிப்பிடுவர். இவன் கழுத்திலிருந்த மாலையைப் பஞ்சவன் என்னும் பெயர்கொண்ட பாண்டியன் ஒருவன் பூண்டிருந்தான் என்று பாராட்டப்படுகிறான். இந்திரனை வென்று பெற்றான் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தெய்வமாகிய கண்ணகியை வள்ளைப்பாட்டுப் பாடி வாழ்த்தும் மகளிர் இவ்வாறு வாழ்த்துகின்றனர்.[1] [2]

இந்திரன் எதற்காகப் இந்தப் பாண்டியனுக்குத் தன் ஆரத்தைக் கொடுத்தான் என்பதையும் சிலப்பதிகாரம் குறிப்பால் உணர்த்துகிறது. பாண்டியன் இந்திரனோடு போரிட்ட போது இந்திரன் தலையிலிருந்த மணிமுடிச் சங்கினை உடைத்தெறிந்தானாம். அதனால் சினம் கொண்ட இந்திரன் தன் கட்டுப்பாட்டில் இருந்த மழை மேகங்களைப் பாண்டியன் நாட்டில் பெய்யாமல் தடுத்துவிட்டானாம். பாண்டியன் மழை பெய்யாமல் தன் நாட்டின்மீது சென்றுகொண்டிருந்த மழைமேகங்களைக் கட்டி இழுத்து தன் நாட்டில் மட்டும் மழை பெய்யும்படிச் செய்தானாம். இதனைக் கண்ட இந்திரன் பாண்டியனுக்குத் தன் ஆரத்தைக் பொடுத்துச் சமாதானம் செய்துகொண்டான் போலும். [3]

அடிக்குறிப்பு

  1. பாடல் சால் முத்தம் பவள உலக்கையால்
    மாட மதுரை மகளிர் குறுவரே
    வானவர்கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்
    மீனக் கொடி பாடும் பாடலே பாடல்
    வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் - சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக்காதை வள்ளைப்பாட்டு

  2. இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த தொடித் தோள் தென்னவன் (சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை)
  3. முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி” என்று இடி உடைப் பெரு மழை எய்தாது ஏக, பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப, மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க!’ (சிலப்பதிகாரம் 11 - காடுகாண் காதை 26 முதல்)