பக்த துளசிதாஸ் (1937 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பக்த துளசிதாஸ்
இயக்கம்ராஜ சந்திரசேகர்
தயாரிப்புமுருகன் டாக்கி பிலிம்சு
இசைடி. கே. ஜெயராம ஐயர்
நடிப்புஎம். கே. ராதா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
பஃபூன் சங்கரஜயர்
கே. எஸ். சபிதா தேவி
செல்லம்
டி. ஏ. மதுரம்
கே. எஸ். அங்கமுத்து
வெளியீடுசெப்டம்பர் 11, 1937
நீளம்20000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பக்த துளசிதாஸ் 1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 இல் வெளிவந்த 20000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். முருகன் டாக்கி பிலிம்சு தயாரித்து, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, கே. எஸ். சபிதா தேவி, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. கே. ஜெயராம ஐயர் இசையமைத்திருந்தார்.[1]

நடிகர்கள்

கதைச் சுருக்கம்

தில்லியில் பேரரசர் அக்பரின் அரண்மனையில் மத ஆய்வுக்காக நியமிக்கப்பட்டிருந்தவர் ராஜப்பூரைச் சேர்ந்த வைணவரான ஆத்மாராம். அவர் தீர்த்தயாத்திரை சென்றுவர அக்பரிடம் விடைபெற்று, தனது இடத்தில் தனது மகன் துளசிராமை (எம். கே. ராதா) நியமித்து விட்டுப் போகிறார். துளசிராம் ஓருநாள் பெருமாள் கோவிலில் கண்ட தாசி ஜம்னாபாயின் மேல் மோகங் கொண்டு அவளிடம் சிக்கிக்கிடக்க, இதையறிந்து தாயார் உலுஜிபாய் வந்தழைக்க வர மறுத்து விடுகிறான். யாத்திரை சென்றிருந்த, ஆத்மாராம் வீடுதிரும்பி துளசிராமின் துர்நடத்தை தெரிந்து, தாசி ஜம்னா வீட்டிற்குப் போய் புத்திமதிகள் கூறி அவனை அழைத்து வந்து, துளசிராமின் மனைவி மமதாவுடன் (கே. எஸ். சபிதா தேவி) சேர்த்து வைக்கிறார்.[2]

துளசிராமும், மமதாவும் இணைபிரியாத தம்பதிகளாய் இருந்து வரும் நாளில் அக்பர் துளசிராமை அழைத்துவர, மந்திரி மான்சிங்கை அனுப்புகிறார். துளசிராம் தன் மனைவியின் மேல் வைத்த அன்பினால் பிரிய மனமில்லாதவனாயும், அக்பர் உத்தரவை மீற முடியாதவனாயும், வருந்தி நிற்க, உலுஜிபாயும், மமதாவும் அவனை தில்லிக்குப் போய்வரும்படி வற்புறுத்த துளசிராம் மான்சிங்குடன் தில்லிக்குப் புறப்பட்டுப்போக, உலுஜி தன் மருமகள் மமதாவை தாய் வீடு போய்விட்டு வரும்படி அனுப்புகிறாள். மான்சிங்குடன் போய்க்கொண்டிருந்த துளசிராம் தன் மனைவியின் நினைவால் வழியில் பைத்தியம் கொண்டவன் போல் திரும்பி வீட்டை அடைந்து பார்க்க, மமதா தாய்வீடு சென்றதை அறிந்து, அந்த இரவே புறப்பட்டு மமதாவைப் பார்க்க மாமனார் வீட்டிக்குப் போய்க்கொண்டிருக்கையில், வழியில் இருள், காற்று, மழை, இடி, மின்னல் முதலிய ஆபத்துக்குள்ளாகி மாமனார் வீடடைந்து கதவைத்தட்ட திறக்கப்படாமையினால் விசனத்து டன் சோர்ந்து போயிருக்க, துளசிராமின் காமவெறியை நீக்கி அவன் நன்மார்க்கத்தை அடையும் பொருட்டு அங்கு, மஹாவிஷ்ணு தோன்றி பெரிய பாம்பு ஒன்றை சாளரத்தில் தொங்க விட, அது துளசிராம் கண்களுக்கு கயிறாகத்தோன்ற அதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறி சாளரத்தின் வழியாய் உள்ளே குதிக்க, அங்குபடுத்திருந்தவர்கள் திருடன் என்று உதைக்க, அந்த சப்தத்தைக் கேட்ட மமதா ஓடிவந்து பார்த்து தன் கணவன் எனத் தெரிந்து அழைத்துச்சென்று, வந்தவிபரம் அறிந்து, கேவலம் இந்த சரீரத்தின் மேலுள்ள அன்பாலல்லவா இவ்வளவு கஷ்டங்களுக்குள்ளானீர்? இந்த அன்பை ஸ்ரீராமனிடத்தில் செலுத்தினால் பேரின்ப பரமானந்தமடையலாமே என்று சொல்ல, அது துளசிராயருக்கு ஞானக்கண்ணைத் திறக்கிறது. அங்கிருந்து ராமரைத் தேடிக்கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல் வெளிக்கிளம்ப மமதா எவ்வளவோ தடுத்தும் கேளாமல், கடைசியில் காசியடைந்து காசியில் ஒரு பிராமணர் ஆச்சிரமத்தில் இருந்து ராமனைத் துதி செய்து கொண்டிருக்கிறார். மமதாவும் உலுஜிபாயும் காசி அடைந்து துளசிராமை அழைத்தும் வரமறுக்க, உலுஜி மமதாவை காசியிலேயே ஓரு மடம் கட்டிக்கொண்டு தங்கியிருக்கச் செய்து தன் கணவர் ஆத்மாராமிடம் நடந்த சம்பவங்களைச் சொல்ல, அவரும் ஆனந்தத்தால் இறக்கிறார். உலுஜிபாயும் தன் கணவன் சென்ற இடத்திற்கே செல்லக்கருதி கங்கையில் விழுந்து விடுகிறாள்.[2]

மமதா மடம் கட்டிக்கொண்டு துளசிராமருக்கு பன்னிரண்டு ஆண்டு காலம் பணிவிடை செய்து கொண்டிருக்க, ஒரு நாள் துளசிராமின் பாதஜலம் பட்ட கல் ஒன்று பெண்ணுருக்கொண்டு தோன்றி ராமரைத் தரிசிக்க ஆஞ்சநேயரின் உதவியால் தான் முடியுமென்றும், ஆஞ்சநேயர் கிழப்பிராமண உருவத்தில் ராமாயண காலட்சேபம் நடக்கும் இடத்தில் இருப்பார் என்றும் சொல்லி மறைய, துளசிராம் ராமாயண காலட்சேபம் நடக்கும் இடத்திற்குப்போய் ஆஞ்சநேய கிழப்பிராமணரை ஸ்ரீராம தரிசனத்தைக் காண்பிக்கும்படி வற்புறுத்த, ஆஞ்சநேயர் இவருடைய பக்தியை சோதித்து முடிவில் ஸ்ரீராம தரிசனம் அருளுகிறார். இதை அறிந்த அவ்வூர் மக்கள் துளசிராமரை மிகவும் கொண்டாடி துளசிதாஸர் என்றழைக்க, மமதா மடத்தில் பாகவதர்கள் கூட்டம் பெருகி சகல வைபவங்களுடன் ஸ்ரீ ராமரின் பக்திப் பிரவாகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.[2]

துளசிதாஸரின் உண்மை பக்தியை சோதிக்க ஸ்ரீமந் நாராயணன் பிரம்மஹத்தி பிராமண உருவத்துடன் தோன்றி, மமதாவுக்கு மோட்சமளித்ததும், துளசிதாஸ், முன் ஜன்மத்தில் வால்மீகியாக இருந்து வடமொழியில் இராமாயணம் பாடியதை, இப்போது இந்தியில் பாடி மக்களுக்கு நன்மார்க்கத்தை போதிக்க வேண்டுமென்று சொல்லி மறைகிறார். அவ்வூரில் இறந்துபோன பிராமணரின் மனைவிக்கு அளித்த ஆசீர்வாதம் பொய்க்காமலிருக்க, ஸ்ரீமந் நாராயணன், துளசிதாசராக உருக் கொண்டு, இறந்த பிராமணரை எழுப்பித் தந்து மறைகிறார். ஸ்ரீமந் நாராயணன் அருளியபடி, இந்தியில் ராமாயணம் இயற்றி, சுத்த வைகுண்ட ஏகாதசியன்று அரங்கேற்றி, நாராயணன் திருவடி சேர்ந்து, வால்மீகியாக உருமாறி அங்கு கூடி இருந்த முனிவர்கள் கூட்டத்தில் என்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றார்.[2]

பாடல்கள்

இத்திரைப்படத்தில் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2]

பக்த துளசிதாஸ் பாடல்கள்
எண் பாடல் பாடியவர்கள் (கதாபாத்திரங்கள்) இராகம் தாளம்
1 ஸ்ரீகணபதி வரதா ஜய ஜய குழுவினர் பூர்வகல்யாணி ஆதி
2 துளசி அம்ம கல்யாணி சுபகரி மமதா கல்யாணி ஆதி
3 ஹரிநாராயன ஜரிநாராயண ஆத்மாராம் காபி ஆதி
4 நானினி பாக்யவதி - இனிமேலென்ன ஜமுனா - -
5 சண்டாளி அடியே துரோகி தாசி வீட்டுக் கிழவன் - -
6 இது மனோ ரம்ய காலமே துளசிதாஸ் தன்யாசி ஆதி
7 காதல் நாயகி கணிகா மணியே பட்டர் - -
8 கணிகை மாதவன் வச மயங்கிட மமதா காம்போதி ரூபகம்
9 மானங்கெட்டுப் போனாயடி பட்டர், பட்டர் மனைவி - -
10 ஜோதிவர்ணமே - எங்கு தோணுதே துளசிதாஸ், மமதா - -
11 ராமா எல்லாம் நீயே துளசிதாஸ் யமுனாகல்யாணி மிசுரம்
12 மாயா உலகக் கூட்டம் துளசிதாஸ், மமதா பந்துவராளி, சிந்துபைரவி, ஆனந்தபைரவி, எதுகுலகாம்போதி, செஞ்சுருட்டி ஆதி
13 ஜெய மாருதி ராஜா துளசிதாஸ் கோகுலத்வனி ஆதி
14 ராகவன் தரிசனமே காண்பேன் துளசிதாஸ் ஆபோகி ஆதி
15 நாயகன் புகல்வதே மனுவாக்யம் மமதா செஞ்சுருட்டி ஆதி
16 ஸ்ரீரகுராம் ஜானகிராம் குழுவினர் சுத்தசாவேரி சதுர்நடை
17 ஸ்ரீராம ரவிகுலேந்தரா ஜய ஜய துளசிதாஸ் கேதார், மால்கோஷ், மோகனம் -
18 ஜகம் புகழ மகுடாபிசேகம் கொண்டான் துளசிதாஸ் நாட்டக்குறிஞ்சி சாபு
19 ஜய ஜய துளசிதாச வாழி குழுவினர் சிறீராகம் -

மேற்கோள்கள்

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 பக்த துளசிதாஸ் பாட்டுப்புத்தகம், சிலோன் பிரின்டேர்ஸ், கொழும்பு, 1937

வெளி இணைப்புகள்