பகீரதன் (எழுத்தாளர்)
பகீரதன் எழுத்தாளர். இதழாசிரியர். புதினங்கள். சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் எழுதியவர். விடுதலைப் போராட்ட வீரர். பகீரதன் தொடங்கிய "சத்திய கங்கை' என்ற இதழ் தொடர்ந்து 33 ஆண்டுகள் வெளிவந்து சாதனை படைத்தது. 18 ஆண்டுகள் கல்கியில் துணையாசிரியராகவும், "ஓம் சக்தி' மாத இதழில் 14 ஆண்டுகள் ஆசிரியராகவும், "கிசான் வர்ல்ட்' என்ற ஆங்கில வேளாண்மை இதழில் 4 ஆண்டுகள் இணையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 14 புதினங்கள், 4 சிறுகதைத் தொகுதிகள். தவிர, தாம் சென்ற இடத்தைப் பற்றியெல்லாம் அவர் எழுதிய எண்ணற்ற பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை.இராமலிங்கர் பணிமன்றம், பாரதியார் சங்கம் ஆகிய இலக்கிய அமைப்புகளில் பல்லாண்டுகள் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் பகீரதன்.
படைப்புகள்
கல்கியில் வெளிவந்த இவருடைய பயணக் கட்டுரைகளை வாசித்த அறிஞர் அண்ணாதுரை."திராவிட நாடு' இதழில் இவரது எழுத்தை மனமாரப் பாராட்டினார். பகீரதனின் நூல்களில் மிகுந்த மதிப்போடு பேசப்பட்ட நூல்கள் என்று "சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கை வரலாறு', "ஜோதி வழியில் வள்ளலார்', "முல்லை வனத்து மோகினி', "கல்கி நினைவுகள்' முதலியவற்றைச் சொல்லலாம். எதை எழுதினாலும் ஆதாரங்களைத் தேடி, கடுமையாக உழைத்து எழுதுவது பகீரதனின் பாணி. அவர் எழுத்தைப் படிக்கும் போதே தகவல் திரட்டுவதில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பு வாசகர்களுக்கு நன்கு புரியும்.
விற்பனையில் சாதனைபடைத்த நூல்கள்
இவர் எழுதிய புத்தகங்கள் விற்பனையிலும் பெரும் சாதனை படைத்தவை. அழகப்ப செட்டியார் பற்றி இவர் எழுதிய "அதிசய மனிதர் அழகப்பர்' என்ற வாழ்க்கை வரலாற்று நூல் 30,000 பிரதிகளும், சுதந்திரப் போராட்ட வீரர் "சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கை வரலாற்று' நூல் 25,000 பிரதிகளும் விற்று சாதனை படைத்தன. தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பொன்றை (ஆயிரம் பக்கங்களுக்கு மேல்) வெளியிட்டு இலக்கண உலகிலும் முத்திரை பதித்தார். வள்ளலாரின் தீவிர அடியவர். சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ஆங்கில நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ஆன்மிக உலகிற்கும் தொண்டாற்றியுள்ளார்.
தேன்மொழியாள்
இவர் எழுதிய "தேன்மொழியாள்' என்ற புதினம், அதே தலைப்பில் நாடகமாக்கப்பட்டு, இந்தியா முழுவதும் சுமார் இருநூறு தடவைகளுக்கு மேல் மேடையேறியது. அதில் ராமசாமி என்ற நடிகர் ஒருவர் ஒரு நகைச் சுவைப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்தப் பாத்திரத்தின் பெயர் "சோ'. பிறகு அதுவே அந்த நடிகருக்குப் பெயராக மாறிவிட்டது.அந்த நடிகரின் பெயர் ராமசாமி இப்பெயர் பெயர் மக்களுக்கு மறந்தே போய்விட்டது. பத்திரிகையாளர் "சோ'வுக்குப் பெயர் பெற்றுத்தந்தது பகீரதனின் "தேன்மொழியாள்' நாடகம்.
விடுதலைப் போரில் ஈடுபாடு
இளம் வயதிலேயே காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தன் மனைவி சரோஜாவைக் கைப்பிடித்தபோது பெற்ற சீதனங்கள், மனைவிக்கான கதர்ப் புடவையும், மஞ்சள் சரடும் மட்டுமே. அவ்விதம் சொந்த வாழ்விலும் காந்தியத்தை அனுசரித்து வாழ்ந்தவர். சுதந்திரப் போரில் ஈடுபட்ட பகீரதன், எப்போதும் கதராடைகளையே அணிந்தார். வார்தாவில் மகாத்மாவிடம் மூன்று மாதம் லோகசேவா சங்கப் பயிற்சி பெற்ற பகீரதன், இறுதிவரை காந்தி அன்பராக வாழ்ந்தவர். 'காந்தியம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்திற்கே நல்லது' என்ற தீவிரமான கருத்துடையவர். ராஜாஜி, பெரியார், காமராஜ், திரு.வி.க., டி.கே.சி., கல்கி போன்றவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார்.
சிறப்புகள்
முத்தமிழ்க் காவலர், செந்தமிழ்ச் செல்வர், கலைமாமணி, ஞான பாரதி முதலிய பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமையுடையவர்.
காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த, காந்தி யுக எழுத்தாளர்கள் வரிசையில் சி. சு. செல்லப்பா, கல்கி, ஆர்.வி., அ. கி. கோபாலன், அ. கி. ஜெயராமன் போன்ற சுதந்திரத் தியாகிகளோடு சேர்த்து பகீரதனையும் வரிசைப்படுத்துவர். "சத்திய கங்கை'யை மண்ணுலகுக்கு வழங்கிய பகீரதன், 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி காலமானார்.[1]
உசாத்துணை
திருப்பூர் கிருஷ்ணன் 'எழுத்துலகில் ஒரு "சத்திய கங்கை' [1][தொடர்பிழந்த இணைப்பு]