நெ. மு. நூர்தீன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
என். எம். நூர்தீன் |
---|---|
பிறந்ததிகதி | ஏப்ரல் 28 1938 |
பிறந்தஇடம் | கொழும்பு |
பெற்றோர் | நெய்னா முஹம்மது |
நெய்னா முஹம்மது நூர்தீன் (பிறப்பு ஏப்ரல் 28 1938) இலங்கையில் கலை, எழுத்து, ஊடகம் ஆகிய துறைகளில் பங்களிப்பு நல்கி வரும் பல்துறைக் கலைஞர், கவிஞர், இசையமைப்பாளர்.
வாழ்க்கைச் சுருக்கம்
கொழும்பில் நெய்னா முகம்மது தம்பதியினரின் பிள்ளைகளில் ஆறாவதாகப் பிறந்த நூர்தீன் கொழும்பு சாகிரா கல்லூரியில் படித்தவர். தற்போது தனியார் நிறுவனமொன்றி்ன் உரிமையாளரான இவரின் மனைவி ஹவ்வா பீபி. பிள்ளைகள் முகம்மத் பசுல் சாஜஹான், உம்மு சரீனா, முகம்மத் சலீம், முகம்மத் அஸ்வர், முகம்மத் ஷிராஸ் ஆவா். பழம்பெரும் பாடகா் என்.எம்.முஹம்மது அலீ இவரது சகோதரருமாவார்.
இசைத்துறை ஈடுபாடு
"...வாழ்க நம் தாய் நாடு... வையமும் வாழ்ந்திட..." எனும் பாடலே இவரின் கன்னிப்பாடலாகும். கொழும்பு வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிக்காக ஒலிபரப்பான இவரின் இப் பாடல் 1948.02.04-ம் திகதி இலங்கைக்குச் விடுதலை கிடைத்த நாளன்று ஒலித்தது.
அதிலிருந்து என்.எம். நூர்தீன் 2000க்கும் அதிகமாக பாடல்களை எழுதியும், இசையமைத்தும், பாடியும் உள்ளார். இந்நாட்டின் பிரபல பாடகர்களாலும், தென்னிந்தியப் பாடகர்களாலும், பாடகிகளாலும் இவரின் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இலங்கைத் தொவைக்காட்சிகள, துபாய் 'சங்கமம்' ரேடியோ போன்றவற்றில் ஒலி/ ஒளிபரப்பாகியுமுள்ளன.
தேன்துளிகள்
இலங்கையின் பல மாவட்டங்களிலும் இலை மறைக் காய்களாய் இருந்து 'தேன்துளிகள்' என்ற தொடர் இசை நிகழ்ச்சி மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக அறிமுகப்படுத்தப் பட்ட சுமார் 116 கலைஞர்கள் இவரின் பாடல்களைப் பாடியுள்ளனர். எம்.ஏ. ஹஸன், அலியார் மாஸ்டர், எஸ்.எம். ஹஸைன் மாஸ்டர், கலாசூரி மொஹிதீன் பேக், எஸ்.ஏ. லத்தீப் பாய், இசையமைப்பாளர் எம்.எச். முஹம்மத் சாலி, மற்றும் ஏ.எச்.எம். மொஹிதீன், எம்.ஐ.எம். அமீன், கலாசூரி ஏ.ஜே. கரீம், நிஸாம் கரீம், எம்.எஸ். முஹம்மது அலி, பி.எம். நியாஸ்தீன், டி.எப். லத்தீப் மாஸ்டர், சுஜாதா அத்தநாயக்க, எஸ். சரளா (தமிழ் நாடு), நூர்ஜஹான் மர்சூக், குமாலா சௌர்ஜா, ரொஷானா இப்திகார், முயினாபேகம், ரூபியாஜலீம், சௌதுல் அந்தலீப், மஸாஹிரா இல்யாஸ், டி.ஏ. மோதி போன்றோர் இவர்களில் அடங்குவர்.
வான் அலைகளில் தேன்துளிகள்
1948 - 2000 ஆண்டு வரை வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும், வர்த்தக இசைத்தட்டுக்களிலும் இடம்பெற்ற மனதைக் கவர்ந்த இஸ்லாமிய கீதங்கள்(ISBN 955-97374-0-6), பொதுப்பாடல்கள் 125 ஐத் தொகுத்து வெளியிட்ட நூல் இது.
ஊடகத் துறையில்
ஊடகத்துறையில் தீனுல் இஸ்லாம், தமிழன், அருவி ஆகிய மாதாந்த சஞ்சிகைகளின் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
ஏனைய சில பங்களிப்புகள்
- வானொலியில் இசைச்சித்திரம், நாடகம், கவிதை, மெல்லிசைப் பாடல்கள், இஸ்லாமிய கீதம், பொப்பிசை போன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியமை.
- இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளை தாயகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், துபாய், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் நடத்தியமை.
- சென்னையில் தனியார் ஒலிப்பதிவுக் நிறுவனங்களுக்காகப் பாடியமை
- ஏழு இறுவட்டுகள் வெளியிட்டுள்டுள்ளமை.
கலைத்துறை சார்ந்த அமைப்புக்களில் பொறுப்புகள்
- கொழும்பு இளம்பிறை இசைமன்றத்தின் தலைவர்
- ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியின் தலைவர்.
- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்.
- ஸ்ரீலங்கா தொலைக்காட்சி, வானொலி, ஊடகத்துறை ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்.
- ஸ்ரீலங்கா சமாதான நீதவான்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்.
- இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளர்.
பட்டங்களும், கௌரவங்களும்
- இசைத்திலகம், 1978-ம் ஆண்டில் தென்னிந்தியாவில் டாக்டர் எம்.ஏ. வாஹிட் ரஹ்மான் மூலம் வழங்கப்பட்டது.
- இசைக்கோ, 1981-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பெருங்கவிக்கோ சேதுராமன் புலவர் மூலம் மலேஷியாவில் வைத்து வழங்கப்பட்டது.
- மூஸிக் நூரி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டது.
- இசைக்கலாநிதி, ஜப்பான் அசைவுறு கலைகளுக்கான சர்வதேச பல்கலைக் கழகம் (International University for Martial Arts) 1998ல் வழங்கியது.
- சாமஸ்ரீ இசைவாணன், 1999ல் 'அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம்' (United Organisation of All Communities)
- இசைப் பேராசிரியர் (Honorary Professorate),ஜப்பான் அசைவுறு கலைகளுக்கான சர்வதேச பல்கலைக் கழகம் (International University for Martial Arts) 1999ல் வழங்கியது.
- கலாபூஷணம், இலங்கை அரசு 2005ல் வழங்கியது.
வெளி இணைப்புகள்
- இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 08 - புன்னியாமீன்
- வான் அலைகளில் தேன்துளிகள் - என். எம். நூர்தீன்