நயந்தரா சாகல்
இயற்பெயர் | நயந்தாரா சாகல் |
---|---|
பிறந்ததிகதி | 10 மே 1927 |
பிறந்தஇடம் | அலகாபாத் |
பணி | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 20ஆம் நூற்றாண்டு |
கையொப்பம் |
நயந்தரா சாகல் (பிறப்பு:மே 10, 1927) ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். அரசியல், வரலாறு போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். புதினங்கள் சிலவும் எழுதியிருக்கிறார். இலக்கியத்துக்கான சாகித்திய அகாதமி விருது (ஆங்கிலம்) 1986 ஆம் ஆண்டில் Rich Like Us (1985) என்ற இவரது ஆங்கிலப் புதினத்திற்கு வழங்கப்பட்டது[1] . இவர் காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் தங்கை விசயலக்குமி பண்டிட்டின் மகள் ஆவார். நயந்தரா சாகல் தாம் எழுதிய கதைகளில் இந்தியப் பெண்களின் அறியாமையையும் அடிமைத்தனத்தையும் சித்திரித்துக் காட்டியுள்ளார். 1970-80 களில் இந்தியன் எக்சுபிரசு போன்ற இதழ்களில் அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளைப் பற்றி எழுதி வந்தார்.
நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் நெருங்கிய உறவினராக இருந்தபோதும் நயந்தரா சாகல் தமக்கென சில கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருந்தார். அவற்றை வெளிப்படையாக எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது. ஒன்பது புதினங்களும் எட்டு பிற நூல்களும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக டேராடூனில் வாழ்ந்து வருகிறார்.
பிறப்பும் படிப்பும்
நயந்தாரா சாகலின் தந்தை ரஞ்சித் சீதாராம் பண்டிட் ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார்.இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காக அன்றைய ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது. அச்சிறையிலேயே ரஞ்சித் சீதாராம் பண்டிட் இறந்து போனார். நயந்தரா லாந்தர் என்னும் மலைப் பகுதியில் உள்ள உட்ஸ்டாக் என்னும் பள்ளியிலும் பின்னர் வெச்லீ என்னும் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சிப் பெற்றார்.
மதவாத எதிர்ப்பு
நாட்டில் மத தீவிரவாதிகளால் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ம. ம. கலபுர்கி போன்ற எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்தும், தத்ரி கொலை நிகழ்ச்சியைக் கண்டித்தும், நாட்டில் விமர்சனங்களைச் சகித்துக் கொள்ளும் தன்மை குறைந்து வருவதாக வருந்தியும் தமக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதினை நயன்தாரா சாகல் 2015 அக்டோபர் ஆறாம் பக்கல் அன்று திருப்பிக் கொடுத்தார்.
பதவிகள்
- சாகித்திய அகாதமி போர்டில் (ஆங்கிலம்) அறிவுரையாளராகப் பணி புரிந்தார். (1972-75)
- வானொலி, தொலைக்காட்சி. ஆகியவற்றுக்குத் தன்னாட்சி கிடைக்க அமைக்கப்பட்ட வர்க்கீசு குழுவில் உறுப்பினராக இடம் பெற்றார். (1978)
- ஐ.நா. பொதுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தூதுக் குழுவில் பணியாற்றினார்.
- மனித உரிமைகள் அமைப்பிலும் உதவித் தலைவராக இருந்துள்ளார்.
- அமெரிக்கன் கலை அறிவியல் அகாதமியில் உறுப்பினராக இருந்தார்.
- வாசிங்டன் உட்ரோ வில்சன் நடுவத்தில் மேதகு உறுப்பினர் (1981-82).
பரிசுகள்
- புதினங்களுக்காக சின்கிளேர் பரிசு (1985)
- சாகித்திய அகாதமிப் பரிசு (1986)
- காமன்வெல்த்து எழுத்தாளர்கள் விருது (1987)
- லீட்சு பல்கலைக் கழகத்தில் மதிப்பு மிகு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.