நன்பலூர்ச் சிறுமேதாவியார்
Jump to navigation
Jump to search
நன்பலூர்ச் சிறுமேதாவியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. இரண்டுமே அகப்பொருள் முல்லைத் திணையைச் சேர்ந்தவை.[1] மேலான அறிவுள்ளவரை மேதாவி எனக் குறிப்பிடுவது வழக்கம். இவரது ஊர் நன்பலூர்.
இவர் சொல்லும் செய்திகள்
- ஆடுகளை ஒன்று திரட்ட இடையன் வீளை என்னும் வாய்ஊதல் ஒலியை எழுப்புவான். அந்த ஒலியைக் கேட்டுப் பயந்து முயல் பயந்து ஓடிப் புதருக்குள் ஒடுங்கிக்கொள்ளுமாம்.
- வினை முற்றி மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். இடையன் விளைந்து கிடக்கும் முதைபுனம் காவல்புரியும் ஊர்தான் என் தலைவி வாழும் ஊர். (விரைந்து தேரைச் செலுத்துக)
- முசுண்டைச் செடி குவிந்த இலைகளையும், வெண்மையான பூக்களையும் கொண்டது. வானத்தில் மீன்கள் பூத்துக் கிடப்பது போல இது மழைக்காலத்தில் பூத்துக் கிடக்கும்.
- இடையன் முல்லைப் பூவையும், தோன்றிப் பூவையும் இதனோடு விரவி வரும்படி கண்ணியாகக் கட்டி அணிந்துகொள்வான். தன் வன்புலம் என்னும் ப்ன்செய் நிலத்தில் விளைந்திருக்கும் விளைச்சளை மேயவரும் காட்டுப் பன்றிக்கு இரவில் காவல் புரிவான். அப்போது அவன் கையில் கொள்ளி என்னும் தீப்பந்தம் வைத்திருப்பான். கையில் வைத்திருக்கும் கொம்பை ஊதுவான். அந்தக் கொம்பு ஊதலைக் கேட்டுக் குள்ளநரிகள் உளம்பும்(ஊளையிடும்).
- தலைமகளைத் திருமணம் செய்துகொண்டு விருந்தாளியாக வருக, இரவில் வரவேண்டாம் என்று தோழி தலைமகனுக்கு அறிவுறுத்துகிறாள்.
- துரு என்னும் ஆட்டுப் பாலில் விளைந்த தயிர், புற்றில் விளைந்து பறக்கும் ஈசலைப் பிடித்துப் போட்டுச் சமைத்த புளிச்சுவை கொண்ட வரகரிசிச் சோறு, அத்துடன் ஆவின் பாலில் காய்ச்சிய வெண்ணெய் ஆகியவை இடையர் தரும் விருந்தாகும். திருமண விருந்தில் பால்சோறும் உண்டு.
- முள்வேலி, முடம்பட்ட பந்தல்கால், புதுப்பானை போல் செந்நிறம் கொண்ட வீட்டுச்சுவர் - இவற்றைக் கொண்டது இடையர் சிற்றில்.
பழந்தமிழ்
- ஐதுபடு கொள்ளி = எரியாமல் புகைந்துகொண்டே இருக்கும் தீப்பந்தம்
- கருங்கோடு = கொம்பு என்னும் ஊதல்
- பம்பிய = செடிகொடிகள் புதராகிக் கிடக்கின்ற
- முதைபுனம் = விளைந்திருக்கும் முல்லைநிலம்
அடிக்குறிப்பு
- ↑ அகநானூறு 94, 394