நந்தவனம் சந்திரசேகரன்
த. சந்திரசேகரன் (D. Chandrasekaran) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளராவார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவருகிறார். பொதுவாக நந்தவனம் சந்திரசேகரன் என்ற பெயரால் அறியப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் வடமாகாணத்தின் வவுனியா சின்னப் புதுக்குளத்தில் 1971 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதி இவர் பிறந்தார். கோவில் புதுக்குளத்தில் வளர்ந்து 1981ஆம் ஆண்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்தார். திருச்சியில் நிரந்தரமாக வசித்துவரும் இவரின் தாத்தா இலங்கைக்கு வந்து சுமார் 70 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். சந்திரசேகரனின் பெற்றோர் செ. தனவந்தன், சின்னம்மாள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவரின் மனைவி சங்கீதா. சந்திரசேகரன் சங்கீதா தம்பதியருக்கு முகிலன் என்றொரு மகன் உள்ளார்.
தனது ஆரம்பக்கல்வியை கோவில் புதுக்குளம் சிறீமாக வித்தியாலயத்தில் நான்காம் தரம் வரை கற்றார். 1981ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த பின்னர் திருச்சியில் தாயகம் திரும்பியோருக்கான உயர் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்பு தொழில்சார் கல்வித் துறையில் ஆர்வம்காட்டி தொழில்சார் கல்வித்துறையை நிறைவு செய்தார். தொழில் ரீதியாக இவர் இந்திய வேதியியல் நிறுவனத்தின் விற்பனை முகவராகப் பணியாற்றி வருகின்றார்.
இலக்கிய ஈடுபாடு
கற்கும் காலத்திலிருந்தே இலக்கிய சஞ்சிகைகளையும், புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும், உத்வேகமும் இவருள் ஏற்பட்டது. சுயமாக எழுத ஆரம்பித்தார். 1990 ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து வெளிவரும் ‘புதிய தோணி’ எனும் சஞ்சிகையில் இவரது முதல் கவிதை ‘காகிதக் கப்பல்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து இலக்கியத்துறையில் கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதிவருகின்றார். கவிதைகள், ஐக்கூ கவிதகள், சிறுகதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புகளை இவர் ஆக்கியுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் ராணி, தினகரன், பாக்கியா, கண்மணி, பூக்காரி, கல்வெட்டு, காவேரி, ஆனந்த விகடன், குமுதம், மாலை மலர், தினத் தந்தி, காலைக்கதிர் உட்பட்ட 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இலக்கிய சிற்றேடுகளிலும், பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. திருச்சி வானொலியிலும் இவரின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
எழுதிய நூல்கள்
- காகிதப்பூவின் தேன்துளிகள்,
- நான் கண்ட இந்தோனேசியா,
- இன்னொரு முறை முயற்சி செய்யுங்கள்,[1]
- சுகமாய் ஒரு ஞானம்,
- நான் கண்ட மியான்மா
- மலேசியப் படைப்பாளுமைகள்
- அச்சத்தை அடித்து நொறுக்கு
- இரகசிய உரையாடலில் வெட்கப்படும் கவிதைகள்
- வாங்க மனம்விட்டுப் பேசலாம்
- நான் கண்ட அந்தமான்
இனிய நந்தவனம்
த. சந்திரசேகரனின் இதழியல் பணிக்கு சான்றாக திகழ்வது இவரால் வெளியிடப்படும் இனியநந்தவனம் எனும் கலை, இலக்கிய பத்திரிகையாகும். மக்கள் மேம்பாட்டு இதழாக வெளிவரும் இனியநந்தவனம் 1997ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நான்கு பக்கங்களுடன் தொடங்கப்பட்டு தற்பொழுது 64 பக்கங்களாக வெளியிடப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. இனிய நந்தவனம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளதோடு சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளுக்கான சிறப்பிதழையும் வெளியிட்டு இவர் பன்னாட்டு தமிழறிஞர்களாலும் அறியப்பட்டார்.
சமூகச் செயல்பாடுகள்
நந்தவனம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்து வரும் பெண்களைக் கண்டறிந்து மகளிர் நாளன்று அவர்களுக்கு சாதனைப் பெண் என்ற விருது வழங்கி சிறப்பிக்கிறார். பொருளாதாராத்தில் பின்தங்கிய ஏழைப் பெண் ஒருவரைக் கண்டறிந்து மாதம் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கி உதவுகிறார். இதைத்தவிர வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களும் கொடுத்து ஆதரித்து வருகிறார். இலக்கிய அடையாளமாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் மாத இதழின் ஏற்பாட்டில் பல்வேறு இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வருகிறார். இத்தகைய சந்திப்புகளில் இலக்கிய ஆளுமைகளும் சமூக சேவகர்களும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர்.
விருதுகள்
- சிற்றிதழ்செம்மல் விருது
- மொழிக்காவலர் விருது
- சர்வதேச தமிழ்த்தூதன் விருது