த. துரைசிங்கம்
த. துரைசிங்கம் | |
---|---|
முழுப்பெயர் | தம்பிராசா |
துரைசிங்கம் | |
பிறப்பு | 09-04-1937 |
பிறந்த இடம் | புங்குடுதீவு, |
இலங்கை | |
மறைவு | 23-08-2021 |
கொழும்பு, | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | எழுத்தாளர், கவிஞர் |
பணி | ஆசிரியர் |
பெற்றோர் | தம்பிராசா, |
சிவபாக்கியம் |
த. துரைசிங்கம் (9 ஏப்ரல் 1937 – 23 ஆகத்து 2021) ஈழத்து எழுத்தாளரும், கவிஞரும், ஆசிரியரும் ஆவார்.[1] இவர் 44 சிறுவர் இலக்கிய நூல்களையும், 15 கட்டுரை நூல்களையும், ஏராளமான பாடநூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
துரைசிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில்[2] தம்பிராசா, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தார். புங்குடுதீவு மேற்கு அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். இளமையிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார்.[1] நல்லூர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைச் சிறப்புப் பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார்.[1] புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்ற்னார். பின்னர் கோட்டக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்விப் பணிப்பாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளா.[1] நல்லூர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை கலாசாலை வெளியீடான 'கலா விருட்சம்' இதழின் ஆசிரியராகவும் (1957–1958) பணியாற்றினார். ஈழப்போர்க் காலத்தில் 1995-97 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2]
விருதுகளும் பட்டங்களும்
சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய (சாகித்திய) விருது இவருக்கு நான்கு முறை கிடைத்துள்ளது. வட-கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. இலக்கிய வித்தகர், கலாபூசணம் ஆகிய பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.[1]
பிற சேவைகள்
1953-இல் புங்குடுதீவில் 'பாரதி கழகம்' என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.[2] யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தின் வெளியீடான 'சமூகத் தொண்டன்' மாத இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[2]
மறைவு
துரைசிங்கம் தனது 2021 ஆகத்து 23 அன்று 84-வது அகவையில் கொழும்பில் காலமானார். இவரது இளைய சகோதரர்கள் நாவேந்தன், வி. ரி. தமிழ்மாறன், வி. ரி. இளங்கோவன் ஆகியோரும் எழுத்தாளர்கள் ஆவர்.[1]