தோனி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தோனி (திரைப்படம்)
கதைமகேஷ் மஞ்சரேக்கர்
திரைக்கதைபிரகாஷ்ராஜ் டி. ஞானவேல்
வசனம்டி. ஞானவேல் (தமிழ் வசனம்) மகேஷ் ராஜா (தெலுங்கு வசனம்)
இசைஇளையராஜா
ஒளிப்பதிவுகே.வி.குகன்
மொழிதமிழ் தெலுங்கு

தோனி (Dhoni) 2012 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்தியத் திரைப்படம் ஆகும்.[1][2] பிரகாஷ் ராஜ் உடன் ஆகாஷ் மற்றும் ராதிகா ஆப்தே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவேறு முரண்பட்ட விருப்பங்களை உடைய தந்தை மற்றும் மகனின் கதையாகும். தந்தைக்கு தன் மகன் எம். பி. ஏ படிக்க வேண்டும் என்று விருப்பம், மகனுக்கோ மகேந்திரசிங் தோனியைப் போல சிறந்த கிரிக்கெட் வீரராக விருப்பம். இது மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் வெளியான சிக்‌ஷ்னாச்சிய ஆய்ச்சா கோ என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது.[3] இத்திரைப்படம் 10 பிப்ரவரி 2012இல் வெளியானது.[4][5][6]

கதைச்சுருக்கம்

சுப்ரமணியன் (பிரகாஷ் ராஜ்) மனைவியை இழந்த இரண்டு குழந்தைகள் உள்ள நடுத்தரக் குடும்பத்தலைவர். அவருடைய மகள் காவேரி (ஸ்ரீதேஜா) மற்றும் மகன் கார்த்திக் (ஆகாஷ்) ஆகிய இருவருக்காகவே உழைக்கிறார். அவர் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தர விரும்புகிறார். குறிப்பாக அவர் மகனை எம்பிஏ பட்டதாரியாக உருவாக்க விரும்புகிறார்.

பதினான்கு வயது சிறுவன் கார்த்திக் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக விரும்புகிறான். மகேந்திரசிங் தோனியைப் போல சிறந்த குச்சக் காப்பாளர் மற்றும் அதிரடியான மட்டையாளராக வருவதே அவன் இலட்சியம்.

சுப்ரமணியன் ஒரு சிறந்த பள்ளியில் மகன் கார்த்திக்கை சேர்ந்திருந்தாலும் அவன் பெரும்பாலான பாடங்களில் தோல்வி அடைகிறான். ஆனால் அவனது துடுப்பாட்ட பயிற்சியாளர் (நாசர்) கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு தொடரை வென்றபோது அவன் திறமையைப் புரிந்துகொள்கிறார்.

சுப்ரமணியனின் மகள் காவேரி அவர்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் நளினி (ராதிகா ஆப்தே) யுடன் பழகுகிறாள். நளினி பாலியல் தொழில் செய்து சம்பாதிப்பதை அறிந்த சுப்ரமணியன் அதன் பிறகு காவேரி நளினியுடன் பழகுவதைத் தடை செய்கிறார். கார்த்திக் சரியாக படிக்காததால் பள்ளி முதல்வர் சுப்ரமணியனை அழைத்து கார்த்திக்கைப் பள்ளியை விட்டு நீக்கப்போவதாகக் கூறுகிறார்.

தன் மகன் சரியாக படிக்காததற்கு அவன் துடுப்பாட்டம் விளையாடுவதே காரணம் என எண்ணும் சுப்ரமணியன் அவனது துடுப்பாட்ட பயிற்சியை நிறுத்திவிட்டு பாடங்களுக்கானத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார். இருந்தபோதிலும் கார்த்திக்கின் படிப்பில் எந்தவித முன்னேற்றம் இல்லாததை அறிந்து சுப்ரமணியன் ஆத்திரமடைந்து அவனை அடித்ததில் அவன் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறான். தன் மகனின் இந்த நிலைக்கு தானே காரணமானதை எண்ணி மிகவும் வருந்துகிறார். மருத்துவச்செலவுகளுக்குப் பணம் தந்து உதவும் நளினியுடன் நட்பாகிறார்.

பள்ளியில் கார்த்திக்கின் காப்புப்பெட்டகத்தில் இருக்கும் பொருட்களை எடுக்கச்செல்லும் சுப்ரமணியன் அதிலுள்ள கார்த்திக் துடுப்பாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற கேடயங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைக் கண்டபின் அவனுடைய திறமையையும், விருப்பத்தையும் அறிகிறார். பள்ளி முதல்வரிடம் மாணவர்களுக்குப் படிப்பில் திறமை இல்லையென்றால் எதிலுமே திறமையற்றவர்கள் என்று நினைக்கக்கூடாது, ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும், அதை வளர்க்க, மதிப்பிட இன்றைய கல்விமுறையில் வாய்ப்புள்ளதா? என்று வாதிடுகிறார். கல்வி தொடர்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனுமதியின்றி கலந்துகொண்டதற்காக அவர் பணியாற்றும் அரசு அலுவலகத்தில் தண்டிக்கப்படுகிறார். அவர் மகனின் மருத்துவச்செலவுகளுக்காக விண்ணப்பித்திருந்த கடன்தொகை மறுக்கப்படுகிறது. தொடர்ச்சியான தொந்தரவுகளால் மனம் கொதிக்கும் சுப்ரமணியன் மாநில முதலமைச்சர் பங்கேற்கும் விழாவில் நேரடியாக முதல்வரிடம் சென்று தன் பாதிப்புகளை எடுத்துக்கூறுகிறார். முதலமைச்சர் இனிமேல் சுப்ரமணியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கிறார் மேலும் கார்த்திக்கிற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிடுகிறார். கார்த்திக்கிற்கு அறுவைசிகிச்சை முடிந்து குணமடைகிறான். கார்த்திக் பள்ளியில் நடக்கும் துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் கடைசிப்பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்து தன் அணியை வெற்றி பெறச்செய்கிறான். அவனது தந்தையும், பயிற்சியாளரும் கார்த்திக்கை தோளில் தூக்கிக் கொண்டாடுவதோடு படம் நிறைவடைகிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

பிரகாஷ் ராஜ் இன்றைய கல்விமுறையில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம், பிரச்சனைகள் போன்றவற்றை மையமாகக் கொண்ட திரைப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்கப் போவதாக அறிவித்தார். தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் இதில் ப்ரகாஷ்ராஜின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆகஸ்ட் 2011 இப்படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது . நவம்பர் 2011 நடிகர்- நடன இயக்குனர் பிரபுதேவா கௌரவத் தோற்றத்தில் 5 நாட்கள் நடித்தார்.

வரவேற்பு - விமர்சனம் மற்றும் பாராட்டுகள்

தோனி திரைப்படம் மிகுந்த பாராட்டைப் பெற்றது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5 க்கு 3.5 மதிப்பெண் வழங்கியது. ஒன் இந்தியா பிரகாஷ் ராஜ் மிகச்சிறப்பாக இயக்கி, நடித்ததாக பாராட்டியது. தோனி "படம் அல்ல பாடம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், தற்போதைய கல்விமுறைக்கும் ஒரு படம் என்றால் மிகையல்ல" என்று தினமலர் பாராட்டியுள்ளது. www.giriblog.com இணையதளம் "தோனி நடுத்தர மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்துள்ள திரைப்படம்" என்று பாராட்டியது.[7]

பாடல்கள்

தோனி திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. படத்தின் பாடல்கள் 28 ஜனவரி 2012 அன்று இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியோடு வெளியானது. இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெருமளவில் பாராட்டு பெற்றது.

தமிழ்ப் பாடல்கள்

வ.எண் பாடல்கள் பாடகர்கள் பாடலாசிரியர்
1 சின்னக் கண்ணிலே ஷ்ரேயா கோசல், நரேஷ் ஐயர் நா. முத்துக்குமார்
2 வாங்கும் பணத்துக்கும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 தாவித் தாவிப் போகும் இளையராஜா
4 விளையாட்டா படகோட்டி ஹரிஹரன்
5 விளையாட்டா படகோட்டி ஷ்ரேயா கோசல்,

தெலுங்கு பாடல்கள்

தெலுங்கில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஸ்ரீவெண்ணீல சீதாராம சாஸ்திரி

வ.எண் பாடல்கள் பாடகர்கள்
1 சிட்டி சிட்டி ஆடுகா ஷ்ரேயா கோசல், நரேஷ் ஐயர்
2 மாட்டிலோனி சேட்டு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 எந்தக்க நீ பயணம் (பெண் குரல்) சுர்முகி ராமன்
4 காயம் தகிலி இளையராஜா
5 எந்தக்க நீ பயணம் (ஆண் குரல்) சத்யன்

விருதுகள்

விழா பிரிவு பரிந்துரைக்கப்

பட்டவர்

முடிவு
2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் பிரகாஷ் ராஜ் பரிந்துரை
சிறந்த துணை நடிகை ராதிகா ஆப்தே பரிந்துரை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தோனி_(திரைப்படம்)&oldid=34455" இருந்து மீள்விக்கப்பட்டது