தொல்காப்பியம் உவமவியல் செய்திகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழுக்குக் கிடைத்துள்ள மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியம் தமிழ்மொழியின் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என 3 பகுதிகளாகக் காட்டுகிறது. ஒவ்வொரு பகுதியும் 9 இயல்களைக் கொண்டது. தமிழரின் கருத்துக்கள் நூலில் அமையுமாற்றைக் கூறுவது மூன்றாவது பகுதியாகிய பொருளதிகாரம். இந்த அதிகாரத்தில் ஏழாவது இயல் உவமவியல்.

அறியாத ஒன்றை அறிந்த ஒன்றைக் காட்டி இதுபோன்றது என உணரவைப்பது உவமம். உவமம் இக்காலத்தில் உவமை எனப்படுகிறது.

உவம-வகை, உவம-உருபு, உவமப்போலி என்னும் உள்ளுறை உள்ளுறை உவமம் முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.

அணுகுமுறை

தொல்காப்பிய உரையாசிரியகளில் ஒருவர் பேராசிரியர்.
இவரது உரை பொருளதிகாரத்தில் உள்ள இறுதி 4 இயல்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது.
இவரது உரையில் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.
சில எடுத்துக்காட்டுகள் இவர் அறிந்தனவும், அமைத்தனவுமாக உள்ளன.
தொல்காப்பியத்தைத் தழுவி மேலும் இவர் தொகுத்துத்தரும் எடுத்துக்காட்டுகள் இவரது மொழிப்புலமையைக் காட்டுகின்றன.

இந்தக் கட்டுரை இவரது உரையைத் தழுவிச் செல்கிறது.

உவம-வகை

உவமம் 4 வகை. அவை வினை- உவமம், பயன்-உவமம் மெய்-உவமம், உரு- உவமம் என்பன. (1)

  1. வினை = தொழில் – புலி போலப் பாய்ந்தான் (புலிமறவன், புலிப்பாய்ந்தான் என வினை உவமத்தில் தொகைநிலை இல்லாதிருத்தல் சிறப்பு)
  2. பயன், = பயனிலை – மாரி அன்ன வண்கை
  3. மெய் = வடிவு, = பிழம்பு - துடியிடை
  4. வண்ணம் = நிறம் – பொன்மேனி
(இதனைப் பண்புவமை எனக் கூறுவது பொருந்தாது என்கிறார் பேராசிரியர்)
(அளவு, சுவை, தண்மை, வெம்மை, நன்மை, தீமை, சிறுமை, பெருமை – பொருள் பற்றிய உவமைகள் இந்த நான்கில் அடங்கும்)

இவை ஒன்றோடொன்று விரவியும் வரும் (2)

செவ்வான் அன்ன மேனி (வண்ணத்தாலும் வடிவாலும் ஒத்தது)

உயர்ந்த பொருளையே ஒப்புமைப்படுத்த வேண்டும் (3)

அரிமா அன்ன அணங்குடைத் துப்பு – வினை உவமம் (வலிமையில் அரிமா உயர்ந்தது)
மாரி அம்பின் மழைத்தோல் சோழர் – பயன் உவமம் (மாரி அம்பினும் உயர்ந்தது)
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பு – வடிவு (கடல்பரப்பு உயர்ந்தது)
பொன்மேனி – வண்ணம் (பொன்னின் வண்ணம் மேனி வண்ணத்தினும் உயர்ந்தது)

உவமைக்கு நிலைகளன்கள் 4. அவை சிறப்பு, நலன், காதல், வலிவு என்பன (4)

அரசன்போல் வீற்றிருந்தான் – சிறப்பு
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பு – செயற்கை-நலம்
பாவை அன்ன பலர் ஆய் மா கவின் – காதல் களனில் பிறந்தது
அரிமா அன்ன அணங்குடைத் துப்பு – வலிமைக் களனில் பிறந்தது

தாழும் நிலைகளனிலிருந்தும் உவமை பிறக்கும் (5)

கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே (கதிர் தலைவணங்கியது)

முதற்பொருள், சினைப்பொருள் என்னும் இரண்டிலும் உவமையும் பொருளும் பொருத்தப்படும் (6)

வரை புரையும் மழகளிற்றின்மிசை (வரை, களிறு – இரண்டும் முதற்பொருள்)
தாமரை புரையும் காமர் சேவடி (தாமரை, அடி – இரண்டும் சினை)
அடைகரை ஆயிதழ்ப் போதுபோல் கொண்ட குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காண வந்தேன் (தாமரைப்போது – சினை, அரசன் – முதல்)
இலங்கு-பிறை அன்ன விலங்குவால் வெள்ளெயிறு (பிறை – முதற்பெயர், வெண்பல் – சினைப்பெயர்)

உவமச் சொல்லால் சுட்டாவிட்டால் எதிர்மறைப் பொருளும் கொள்ளப்படும் (7)

பவளம் போல் செந்துவர் வாய் (இதில் செம்மை என்பது சுட்டிக் காட்டப்படாவிட்டால் பவளம்போல் கெட்டியான வாய் என எடுத்துக்கொள்ள நேரும்)

இதில் உவமையும் பொருளும் ஒத்திருக்க வேண்டும் (8)

மயில் தோகை போலும் கூந்தல்

பொருளையே உவமம் ஆக்குதலும் உண்டு (9)

வருமுகை அன்ன வண்முகை உடைந்து, திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை (முகத்தாமரை என அமையும் இதனை உருவகம் என்று சொல்வது பொருந்தாது என்கிறார் பேராசிரியர்)

உவமையிலும் பொருளிலும் உள்ள பெருமை சிறுமைகள் குறிப்பால் உணரப்படும் (10)

அவாப்போல அகன்ற தன் அல்குல் மேல், சான்றோர் உசாப் போல உண்டே நுசும்பு – (அவள் அல்குல் ஆசை போல விரிந்துள்ளது, அதன் மேல் சான்றோர் காணும் நுட்பம் போல் இடை நுழைந்துள்ளது)

உவம உருபுகள்

உவம உருபுகள் 36. அவை
அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, -6- ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப -12- எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப -18- காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப -24- புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ -30- நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய -36- என்பன (11)

தொல்காப்பியர் இவற்றைப் பொருள் நோக்கில் வரிசைப்படுத்தித் தொகுத்துள்ளார். நாம் சொல்நோக்கில் இவற்றை அகர-வரிசை செய்தால் அவை இவ்வாறு அமையும்.

உவம உருபுகளின் அகரவரிசை

அன்ன, ஆங்க, உறழ, எள்ள, என்ன, ஏய்ப்ப, ஒட்ட, ஒடுங்க, ஒப்ப, ஒன்ற, ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, புரைய, புல்ல, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மாற்ற, மான, வியப்ப, விழைய, விறப்ப, வீழ, வெல்ல, வென்ற,

வகைப்பாடு மேலும் விரிதல்

வினைப்பால் உவமம் 8. அவை அன்ன, ஆங்க, மான, விறப்ப. என்ன, உறழ, தகைய, நோக்க – என்பன (12)

எரி அகைத்து அன்ன தாமரை – அன்ன
கயம் நாடு யானையின் முகம் அமர்ந்து ஆங்கு – ஆங்கு
கயம் மூழ்கு மகளில் கண்ணின் மானும் – மான
புலி விறப்ப ஒலி தோன்றலின் – விறப்பு
புலி என்ன கலி சிறந்து உராஅய் – என்ன
மின் உறழ் இமைப்பு – உறழ்
பொருகளிற்று எருத்திற் புலி தகையப் பாய்ந்தான் – தகைய
மானோக்கு நோக்கு மடநடை ஆயத்தார் – நோக்கு

(பேராசிரியர் மேலும் காட்டுவன)

கார்மழை முழக்கிசை கடுக்கும் – கடுப்ப
யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் – கெழு
வயப்புலி போலப் பாய்ந்தான் – போல
ஒழுகிசை நோன்பகடு ஒப்பக் குழீஇ – ஒப்ப
குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கஃ திவவு - ஏய்ப்ப

அன்ன என்னும் உவமச்சொல் பிற உவமைப்பாலோடும் வரும் (13)

மாரி அன்ன வண்கை – பயன்
இலங்குபிறை அன்ன விலங்குவால் எயிறு – மெய்
செவ்வான் அன்ன மேனி - உரு

பயனிலை உவமச் சொற்கள் 8. – எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ, (14)

எழிலி வானத்து எள்ளினன் தரூஉம் – எள்ள
மழைவிழை தடக்கை மாவாள் எழிலி – விழைய
புத்தேள் உலகின் பொன்மரம் புல்ல – புல்ல
விண்பொருபுகழ் விறல்வஞ்சி – பொருவ (புறம் 11)
கார் களவு உற்ற பேரிசை உதவி – கள்ள
இருநிதி மதிக்கும் வெருவள் ஈகை – மதிப்ப
வீங்குசுரை நல்லான் வென்ற ஈகை – வெல்ல
விருபுனல் பேர்யாறு வீழ யாவதும், வரையாது சுரக்கும் உரைசால் தோன்றல் – வீழ

(இவை எட்டும் பெருவரவு எனக் கூறிவிட்டுப் பேராசிரியர் மேலும் சில காட்டுகிறார்)

அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின் – போல (அகம் 1)
மகன்தாய் ஆதல் புரைவதால் எனவே – புரைய (அகம் 16)
ஊறுநீர் அதிழ்து ஏய்க்கும் எயிற்றாய் – ஏய்ப்ப (கலி 20)
(திங்களைப் பாம்பு கொண்டு அற்று) – அற்று (குறள் 1146)
உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு – என (அகம் 61)
யாழ்கொண்ட இமிழிசை – கொள்ள (கலி 20)
யாழ் செத்து இருங்கால் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – செத்து (அகம் 88)
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை – தேய்த்த (முருகு 5)
விண் அதிர் இமிழிசை கடுப்பப் பண் அமைத்து – கடுப்ப (மலைபடுகடாம் 2)

மெய்ப்பால் உவமச்சொல் 8 – கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப (15)

நீர்வார் நிகர்மலர் கடுப்ப – கடுப்ப (அகம் 11)
மோட்டிரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – ஏய்ப்ப (அகம் 5)
வேய் மருள் பணைத்தோள் – மருள (ஐங்குறுநூறு 318)
உரல் புரை பாவடி – புரைய (கலி 21)
முத்துடை வான்கோடு ஒட்டிய முலைமிசை – ஒட்ட
பாம்புரு ஒடுங்க வாங்கிய நுசும்பு – ஒடுங்க
செந்தீ ஓட்டிய வெஞ்சுடர்ப் பரிதி – ஓட்ட
கண்ணொடு நிகர்க்கும் கழிப்பூங் குவளை - நிகர்ப்ப

உருவின் உவமச்சொல் 8 – போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த (16)

தன்சொல் உணர்ந்தோர் மேனி பொன்போல் செய்யும் ஊர் கிழவோனே – போல (ஐங்குறுநூறு 41)
மணிநிறம் மறுத்த மலர்ப்பூங் காயா – மறுப்ப
ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம் – ஒப்ப
வெயிலொளி காய்த்த விளங்குமணி அழுத்தின – காய்த்த
பொன் நேர் புதுமலர் – (கொன்றை) – நேர
தண் தளிர் வியப்பத் தகைபெறு மேனி – வியப்ப
(நளிய, நந்த – இக்காலத்து அரிய போலும் – என்பது பேராசிரியர் குறிப்பு)

உவமச்சொல் இந்த 4 வகையான மரபில் பொருளை உணர்த்தும் (17)

இந்த 4 வகையானது 8 வகையாகவும் பிரியும் (18)

பெருமை, சிறுமை என்னும் மனப்பான்மை 8 வகையான மெய்ப்பாட்டால் தோன்றும் (19)

உவமப்பொருளால் வேறு பொருளும் தோன்றும் (20)

உழுத நோன்பகடு அழி தின்றாஅங்கு,
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண் நறவே (புறம் 125) இதில் அழி என்னும் வைக்கோல் உவமை. நறவு உவமேயம். அமிழ்து ஆதல் வேறுபொருள்

உவமப்பொருள் மருவிய வழக்குமொழியால் உணர்ந்துகொள்ளப்படும் (21)

களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா – (அகம் 16) – இதில் களவு உடம்படுதலை வழக்கத்தால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

உவமச்சொல் இரட்டைச் சொற்களால் அமையின் உவமப்பொருளும் இரட்டைச் சொற்களால் அமையும் (22)

பொன்காண் கட்டளை கடுப்ப சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் (பெரும்பாணாற்றுப்படை 220) – இதில் உள்ள உவமத்தில் பொன்காண் கட்டளை 2 சொல், உவமேயத்தில் சண்பகக்காயின் சுண்ணம் 2 சொல்

உவமையையும் உவமைகொள்ளும் பொருளையும் (உவமேயத்தையும்) பொருத்திப் பார்க்கும்போது முன் சொல்லப்பட்ட 4 வகைக்குள் அடங்குவதைத் துணிவுடையோர் நுட்பமாக உணர்ந்துகொள்வர் (23)

உவமப்போலி என்னும் உள்ளுறை உவமம்

உவமப்போலி (உள்ளுறை உவமம்) 5 வகை (24)

வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு – என்பன அந்த 5 உள்ளுறை உவமம் (25)

கிழவி கூற்றில் அமையும் உள்ளுறை உவமம் அவள் அறிந்த நிலத்துக் கருப்பொருள்களால் அமையும். தோழி கூற்றில் அமையும் உள்ளுறை உவமம் அந்த நிலத்துப் பொருள்கள் எல்லாவற்றலும் சொல்லப்படும் (26)

கிழவன் கூற்றில் அமையும் உள்ளுறை உவமம் அவனது பெருமை தோன்றும்படி சொல்லப்பட்டிருக்கும். ஏனையோர் கூற்றில் அமையும் உள்ளுறை உவமம் இருப்பிட எல்லையைக் கடந்த பொருள்கள்மீதும் அமையும். (27)

கிழவன் கூற்றில் உள்ள உள்ளுறை உவமங்கள் இன்பம் பயப்பதாகவும், துணிவை வெளிப்படுத்துவதாகவும் அமையும் (28)

கிளவி கூற்றில் வரும் உள்ளுறை உவமங்கள் (மருதம், நெய்தல் என்னும்) இரண்டு திணைகளுக்கு உரிமை பூண்டதாக இருக்கும் (29)

கிழவன் கூற்றில் வரும் உள்ளுறை உவமங்களுக்கு நிலத்திணை வரையறை இல்லை (30)

தோழி, செவிலி ஆகியோர் கூற்றுகளில் வரும் உள்ளுறை உவமம் காலத்துக்கும், இடத்துக்கும் பொருந்துமாறு அமையும் (31)

உள்ளுறை உவமம் வேறுபட வந்தால் பொருந்தும் வழியில் கூறுதற்கும் உரிமை உடையவை (32)

உவமை இல்லை எனப் பொருத்திக் காட்டினாலும் உவமை எனவே கொள்ளவேண்டும் (33)

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,
காதலை வாழி மதி (குறள் 1118)

உவமை கூறாமல் பயனிலையால் உவமையைப் பெறவைத்தாலும் உவமையாகக் கொள்ளப்படும் (34)

பாரி பாரி எனப்பல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டு ஈண்டு உலகு புறப்பதுவே (புறம் 107)

அதுவா இதுவா என்று தடுமாற வைத்தும் உவமை கூறப்படும் (35)

அரிமலர் ஆய்ந்தண் அம்மா கடைசி
திருமுகமும் திங்களும் செத்துத் – தெருமந்து
வையத்தும் வானத்தும் செல்லா(து) அணங்காகி
வையத்து நின்ற(து) அரா. – (பொய்கையார்)

உவமை அடுக்கம்

உவமைகள் அடுக்கிக் கூறப்பட்டால் அவற்றை விரித்து உணர்ந்துகொள்ள வேண்டும் (36)

(“விடுத்தல்” = விடுவித்துக்கொள்ளல்)
மதியத்து அன்ன வாள்-முகம் போலும்
பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை

இதில் முகம் என்பது மதியம் என்றும், தாமரை என்னும் உவமைகளால் விளக்கம் இல்லாமல் காட்டப்பட்டுள்ளது.

உவமையைத் தனியாகவும் பொருளைத் தனியாகவும் நிரல்பட நிறுத்தி அடுக்குவது நிரல்நிலை உவமம். சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று என்னும் மூன்றில் அடுக்கு வரும். (37)