தேவகன்யா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவகன்யா
பாட்டுப்புத்தக முகப்பு அட்டை
இயக்கம்ஆர். பத்மநாபன்
திரைக்கதைஆர். பத்மநாபன்
இசைபலவான்குடி வி. சாமா ஐயர்
நடிப்புசி. ஹொன்னப்ப பாகவதர்
யூ. ஆர். ஜீவரத்தினம்
டி. ஆர். இராமச்சந்திரன்
வி. என். ஜானகி
ஒளிப்பதிவுடி. மார்க்கோனி
கலையகம்பிரக்ஜோதி, அடையார்
விநியோகம்சவுத் இந்தியா பிக்சர்சு, காரைக்குடி
வெளியீடு16 சனவரி 1943 (1943-01-16)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவகன்யா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மநாபனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பல மாயாஜாலக் காட்சிகளைக் கொண்டது. ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அடையாறு பிரக்ஜோதி ஸ்டூடியோவில் சென்னை பத்மா பிக்சர்சாரினால் தயாரிக்கப்பட்டது.[1]

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சூரவர்மராஜனின் (ஈ. ஆர். சகாதேவன்) புதல்வி சித்திரலேகா (வி. என். ஜானகி) பல கலைகளில் தேர்ச்சி பெற்றவள். சங்கீத சாகித்யத்திலும் தேர்ச்சி பெறவேண்டி, தன் குரு மந்திரஞானியின் (ஜோக்கர் ராமுடு) புதல்வன் உமாபதியைக் (சி. ஹொன்னப்ப பாகவதர்) குருவாக நியமித்து இருவரும் சந்திக்க முடியாதபடி ஒரு திரையைக் கட்டி பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்கிறான். அரசன், சித்ரலேகைக்கு மந்திரிகுமாரன் துற்புத்தியை மணம் முடிக்க நிச்சயிக்கிறான். மந்திரஞானியும் தன் பிள்ளை உமாபதிக்கு நிமித்தகர் (சக்ரபாணி ஐயங்கார்) பெண் சுந்தரியை (டி. எஸ். ஜெயா) மணம் செய்ய நிச்சயிக்கிறார். உமாபதியும் சித்ரலேகையும் இரகசியமாய் காதல் கொண்டு ஒருவரும் அறியாமல் ஓடிவிடுகிறார்கள். அரசன் பெருந்துக்கம் கொள்கிறான். மந்திரஞானி, உமாபதிமேல் கோபங்கொண்டு சுந்தரியை முட்டாள் ரங்கனுக்கு (டி. ஆர். ராமச்சந்திரன்) மணம் செய்து வைக்கிறார்.[2]

ஓடிப்போன உமாபதி, சித்ரலேகா பசியைத் தீர்க்கும் பொருட்டு காட்டில் பழங்கள் சேகரிக்கச் செல்ல, அக்காட்டில் ஒரு மரத்தில் ஒரே ஒரு பழம் இருப்பதைக் கண்டு அதைப் பறிக்க மரத்தில் ஏறுகிறான். அப்போது அங்கு வரும் ரத்னமாலா (யூ. ஆர். ஜீவரத்தினம்) என்ற சப்தகன்னி தனது நைவேத்தியத்திற்குப் பழம் பறிக்க அக்காட்டிற்கு வருகிறாள். உமாபதியிடம் இருந்து அப்பழத்தைப் பறித்துச் சென்று பூசை செய்துவிட்டு மீண்டும் பூலோகம் திரும்பி அந்தப் பழத்தை உமாபதியிடம் கொடுத்துச் சாப்பிடச் செய்ய, அப் பழத்தின் மகிமையால் உமாபதி சித்ரலேகையை மறந்து ரத்னமாலாவிடம் காதல் கொள்ளுகிறான். ரத்னமாலாவும் தன் சக்தியால் ஒரு நகரத்தை ஏற்படுத்தி, உமாபதியை அரசனாக்கி வாழ்ந்து வருகிறாள்.[2]

சித்ரலேகா உமாபதியைக் காணாமல் காட்டிலிருக்கும் காளி கோவிலை அடைகிறாள். அப்போது அங்கு வரும் ஒரு கழைக்கூத்தாடி (எம். ஆர். சாமிநாதன்) 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு விழாவில் காணாமற்போன தன் மகள் கும்பாயி தான் சித்திரலேகா என நம்பி, அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று, தனது தொழிலைக் கற்றுத் தருகிறான். அரசன் சூரவர்மன் தன் மகள் திரும்பி வராததைக் கண்டு, ஏங்கி ராஜ்யபாரத்தை வெறுத்து காட்டில் தவம் செய்யச் செல்கிறான்.[2]

கழைக்கூத்தாடி தேவிபுரத்தில் கூத்து நடத்துகிறான். மந்திரிகுமாரன் சித்ரலேகாவைக் அவள் பெயரைச் சொல்லி அழைக்க அவள் பயந்து கழைக்கூத்து ஆடிக்கொண்டிருந்த கழியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறாள். கூத்தாடிக்கும் மந்திரிகுமாரனுக்கும் சண்டை உண்டாக, கூடியிருக்கும் மக்கள் கோபங் கொண்டு மந்திரிகுமாரனை அடிக்க ஆரவாரம் செய்ய, அவ்வூர் அரசனின் சிப்பாய்கள் மந்திரி குமாரனையும், கூத்தாடியையும் பிணத்துடன் அரசன் முன் கொண்டு போகிறார்கள். அரசன் உமாபதி சித்ரலேகாவின் உடலைக் கண்டவுடனே பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வர, தன்னை நொந்து, தேவகன்னிகையை வெறுத்து தன் உயிரை நீக்கிக்கொள்ள யத்தனிக்கிறான். சூரவர்மனும், மந்திரஞானியும் சித்ரலேகா இறந்ததை அறிந்து, வருந்தி தேவிபுரம் அடைகிறார்கள். ரத்னமாலா உமாபதியின் துக்கத்தை அறிந்து சித்ரலேகாவை உயிர்ப்பித்து, அரசன், மந்திரஞானி முதலியோர்களுக்கு தேவரகசியத்தின் மகிமையை அறிவித்து தேவலோகம் செல்கிறாள்.[1][2]

நடிக, நடிகையர்

நடிக, நடிகையரின் பட்டியல் 1943 பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[2]

நடிகர்கள்

தேவகன்யா திரைப்பட நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
சி. ஹொன்னப்ப பாகவதர் உமாபதி
டி. ஆர். இராமச்சந்திரன் ரங்கன்
எம். ஆர். சாமிநாதன் கழைக்கூத்தாடி
எம். எஸ். முருகேசன் இயமன்
டி. வி. சேதுராமன் சித்திரகுப்தன்
ஈ. ஆர். சகாதேவன் சூரவர்மன்
ஜோக்கர் ராமுடு மந்திரஞானி
வி. பி. எஸ். மணி நீதிவர்மன்
எம். ஏ. கணபதிபட் மகா விட்டுணு
கே. பி. ஜெயராமன் கொட்டாப்புளி
எஸ். ஏ. பத்மநாபன் பரமசிவன்
பி. பி. ஸ்ரீநிவாசன் கோபு
சக்ரபாணி ஐயங்கார் நிமித்தகர்

துணை நடிகர்கள்: லூஸ் ஆறுமுகம், வைத்தியநாதசர்மா.

நடிகைகள்

தேவகன்யா திரைப்பட நடிகைகள்
நடிகை பாத்திரம்
யூ. ஆர். ஜீவரத்தினம் ரத்னமாலா
வி. என். ஜானகி சித்திரலேகா
டி. எஸ். ஜெயா சுந்தரி
கல்யாணி குருபத்தினி
கே. எஸ். அங்கமுத்து கழைக்கூத்தாடினி

துணை நடிகைகள்: ராஜபாலா, காந்தா, சுலோசனா, ராஜம், சாந்தா, பத்மா

தயாரிப்பு

தேவகன்யா திரைப்படம் பத்மா பிக்சர்சு சார்பில் ஆர். பத்மநாபன் தயாரித்து இயக்கியிருந்தார். அடையாறு பிரக்ஜோதி கலையகத்தில் தயாரிக்கப்பட்டது. இக்கலையகம் இரண்டாம் உலகப் போரின் பின்னர் மூடப்பட்டது. ஆர். பத்மநாபனே சுந்தர பாகவதரின் உதவியுடன் திரைக்கதை, வசனத்தை எழுதியிருந்தார்.[2] டி. மார்க்கோனி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இவர் இத்தாலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பத்மநாபனின் திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரே ஒளிப்பதிவைக் கவனித்தார். இவர் கோர்க்குழம்பை விரும்பி உண்டதால் நண்பர்களால் போர்க்குழம்பு மார்க்கோனி என அழைக்கப்பட்டார்.[1] நடிகர் ஜெயராமன் இத்திரைப்படத்தில் நடித்ததன் பின்ன்னரே கொட்டாப்புளி ஜெயராமன் என அழைக்கப்பட்டார்.[1]

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்

எஸ். ஜி. செல்லப்பா ஐயர் இயற்றிய பாடல்களுக்கு பலவான்குடி வி. சாமா ஐயர் இசையமைத்திருந்தார்.[2]

தேவகன்யா திரைப்படப் பாடல்கள்
எண். பாடல் பாடியவர் இராகம் தாளம் நீளம் (நி:செசெ)
1 சங்கீதமே சர்வஜீவநாத ஹொன்னப்ப பாகவதர் வாசஸ்பதி ஆதி 02:57
2 எல்லோரும் உணவு கொள்ளீரே வி. என். ஜானகி, தோழி சுத்தசாவேரி ஆதி
3 வசந்த காலமிது நலமே வி. என். ஜானகி கமாஸ் ரூபகம்
4 இன்று உனது எழில் காணக் கிடைத்தது வி. என். ஜானகி காம்போதி ஆதி
5 பஜரே கோபாலம் மானச குரு பௌனி ஆதி
6 நலுங்கிட வாடி பெண்ணே டி. ஆர். இராமச்சந்திரன் நலுங்குப் பாட்டு -
7 ஆகா இதே ஆனந்தம் யூ. ஆர். ஜீவரத்தினம் இந்தோளம் ஆதி 02:37
8 பங்கஜ நேத்ரா பரம பவித்ரா யூ. ஆர். ஜீவரத்தினம் நாயகி மிச்ர ஏகம்
9 உலகினை யார் வகுத்தாரே முதலில் ஹொன்னப்ப பாகவதர் செஞ்சுருட்டி, கானடா, செஞ்சுருட்டி ஆதி 03:11
10 என் மனம் கொள்ளை கொண்டாய் நீயே ஹொன்னப்ப பாகவதர் ஆபோகி ஆதி 02:54
11 ஸ்ரீதரன் அருள் காதலன் நீ ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம் - -
12 எனதருமை சிங்காரா வா வா யூ. ஆர். ஜீவரத்தினம் யமுனாகல்யாணி திச்ரலகு
13 வேரிலே வெடித்த கனியே டி. ஆர். இராமச்சந்திரன், டி. எஸ். ஜெயா - -
14 மாசிலாமணியே மதனரதியே ஹொன்னப்ப பாகவதர் குந்தலவராளி ஆதி
15 யாரடா புதிய எமன் எம். எஸ். முருகேசன் அடாணா ஆதி
16 புவன மாதி அண்ட சராசரம் நடுங்க டி. ஆர். இராமச்சந்திரன் மோகனம் ஆதி
17 தாயுந் தந்தையும் நீயே ஹொன்னப்ப பாகவதர் விருத்தம் -

வரவேற்பு

சிறந்த திரைக்கதைக்காகவும், ஹொன்னப்ப பாகவதர், ஜானகி, ஜீவரத்தினம் ஆகியோரின் சிறந்த நடிப்பிற்காகவும், இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தேவகன்யா&oldid=34376" இருந்து மீள்விக்கப்பட்டது