தெ. ஞானசுந்தரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தெ. ஞானசுந்தரம் (24 செப்டம்பர் 1941) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர் ஆவார்.

பிறப்பும் படிப்பும்

மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் ஞானசுந்தரம் பிறந்தார். கும்பக்கோணம் அரசு கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர்ச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். வைணவ உரைவளம் என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாராய்ச்சி மணிப்பவழ நடையில் அமைந்த திவ்யப்பிரபந்த உரைகளைப் பற்றியதாகும். இவர் பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவர் ஆவார்.

பேராசிரியப் பணிகள்

பச்சையப்பன் கல்லூரி, பரமத்தி வேலூர்க் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, சென்னைக் கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றிலும் ஈராண்டுகள் அயற்பணியாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலுமாக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணிசெய்துள்ளார். இறுதியாக 1993இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவரானார். ஈராண்டுகள் மாலைக்கல்லூரிப் பொறுப்புப் பேராசிரியராகவும் மூன்று மாதங்கள் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு அடைந்தார். புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியராக 2009 முதல் 2011 வரை பணியாற்றினார். 2018 ஜூலை முதல் 2021 ஜூலை வரை மூன்றாண்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். தினமணி போன்ற செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

எழுதிய நூல்கள்

  • வைணவ உரை வளம்
  • காப்பிய விருந்து (கம்பர்-வால்மீகி ஒப்பீடு)
  • குறுந்தொகைத் தெளிவு
  • கற்பக மலர்கள் (திருக்குறள் கட்டுரைகள்)
  • மாணிக்கவாசகர்
  • மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி விளக்கம்.
  • கம்பநாடர்-புதிய வெளிச்சம்
  • கம்பராமாயணத்தில் சகோதரத்துவம்
  • இராவணனைச் சந்திப்போம்
  • கம்பர் போற்றிய கவிஞர் (திருவள்ளுவர்)
  • இராவணனின் மைந்தர்கள்
  • இராம காதை-முதலும் வழியும் பால
 காண்டம் 
  • இராம காதை-முதலும் வழியும்
 அயோத்தியா காண்டம் 
  • இராம காதை-முதலும் வழியும்
 ஆரணிய காண்டம்
  • இராம காதை-முதலும் வழியும்
 கிட்கிந்தா காண்டம்
  • இராம காதை-முதலும் வழியும்
 சுந்தர காண்டம்
  • இராம காதை-முதலும் வழியும்
 யுத்த காண்டம்
  • சொல் தேடல் (தினமணியில்
 தமிழ்மணிப் பகுதியில் 50 வாரம் 
 வந்த கட்டுரைகள்)
  • திருமங்கையாழ்வாரின் பெரிய
 திருமொழி-மூலமும் உரையும்- 
 தமிழாக்கம் (முதல் இருநூறு  
 பாசுரங்கள்)
  • திருமங்கையாழ்வாரின் பெரிய
 திருமொழி-மூலமும் உரையும்- 
 தமிழாக்கம் (201 முதல் 400 
 பாசுரங்கள் வரை)
  • வைணவக் கலைச்சொல் அகராதி
  • என் இலக்கியத் தேடல்

பிற பணிகள்

சென்னை, கோவை கம்பன் கழகங்களும் கங்கைப் பதிப்பகமும் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்புகளின் பதிப்பாசிரியர் குழுவில் ஞானசுந்தரம் இடம்பெற்றார். அஞ்சல் வழிக் கல்வி பயிலும் சிங்கப்பூர் வாழ் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்பிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது. மும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூரு, கொல்லம் ஆகிய நகரங்களுக்குச் சென்று இலக்கிய, சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று தமிழ்ப் பணி ஆற்றியுள்ளார்.

விருதுகள்

  • நல்லாசிரியர் விருது (கோவை நன்னெறிக் கழகம்)
  • சிறந்த தமிழ்ப் பேராசிரியர் விருது (சென்னைச் சேக்கிழார் ஆராய்ச்சி மையம்)
  • தமிழறிஞர் விருது (சென்னைக் கம்பன் கழகம் )
  • சடையப்பர் விருது (மதுரைக் கம்பன் கழகம்)
  • கபிலவாணர் விருது (திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம்)
  • இராசா சர் முத்தையா செட்டியார் விருதும் உருபா இரண்டு இலக்கம் பரிசும் (இராசா சர் முத்தையா செட்டியார் அறக்கட்டளை)
  • கவிஞர் வாலி விருது.
  • சாதனையாளர் விருது- கொல்கொத்தா பாரதி தமிழ்ச் சங்கம்.

*திருச்சித் தமிழ்ச் சங்க மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை விருது

  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சுப்புரெட்டியார் இலக்கியத திறனாய்வாளர் விருது.
  • மா அரங்கநாதன் தமிழறிஞர் விருது (2024)
  • திருவல்லிக்கேணி நகைச்சுவை மன்றத் தென்கச்சி கோ. சாமிநாதன் வாழ்நாள் சாதனையாளர் விருது.

சான்று ஆவணம்

திருக்குறள் கட்டுரைகள், அல்லையன்சு பதிப்பகம், சென்னை-600004 (நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள்)

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தெ._ஞானசுந்தரம்&oldid=26070" இருந்து மீள்விக்கப்பட்டது