தென்பரங்குன்றம், மதுரை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தென்பரங்குன்றம் என்பது இந்தியா வில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் மதுரையைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் என்னும் ஊரைச் சேர்ந்த மலையாகும். இவ்வூர் மதுரைக்கு தென்மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது ஆகும். திருப்பரங்குன்ற மலையில கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையில் சமணர் குடை வரை கோவில் உள்ளது. இம்மலை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
வரலாறு
2300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் சமண துறவிகள் வாழ்ந்தமைக்கான அடையாளமாக கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. தென்பரங்குன்ற மலையில் கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரருடைய குடை வரை கோவிலும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய மெய்கீர்த்தி கல்வெட்டுகளும் காணப்படுகிறது.
சமண மற்றும் சைவ மத சிற்பங்கள்
இங்கு தியான நிலையில், அமர்ந்த கோலத்தில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் காணப்படுகிறது. குடைவரைக் கோவிலின் வலப்பக்கம், நடராஜனும், சிவகாமியும் நடனம் ஆடியபடி சிற்பங்கள் காணப்படுகிறது. இவ்விரண்டு சிற்பங்களும் சேதமடைந்துள்ளன. நடராஜனின் உருவச் சிலைக்கு மேலே விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் எழிலுற விளங்குகின்றன. மேலும் சைவ சமயத்தை சேர்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரர் சிற்பங்களும் காணக் கிடைக்கிறது. இடப்பக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் புடைப்புச் சிற்பம் விளங்குகிறது.
குடை வரை கோவில்
இக்குடை வரை கோவில் அமைந்த காலம் கி.பி. முதல் நூற்றாண்டு ஆகும்.இக்குடை வரை கோவிலில் மூன்று பெரிய தூண்கள் உள்ளன. இக்கோவில் உள்ளே இடப்புறம் அமைந்துள்ள தனிச் சந்நதியில் அழகான கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. தெற்கு திசையைப் பார்த்த வண்ணம், மூலவரான தில்லைக் கூத்தனின் திருவுருவச் சிலை பாதி சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. கல்வெட்டுச் செய்திகளின்படி, இது உமையாண்டாள் கோவில் என அழைக்கப்படுகிறது.
மெய்கீர்த்தி கல்வெட்டுகள்
இங்கு இரு கல்வெட்டுகள் காணப்படுகிறது.அவற்றில் ஒன்று கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டை வென்று பாண்டிய நாட்டு ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதைக் குறிக்கும் விதமாக, அந்த மெய்க்கீர்த்தி கல்வெட்டு அமைந்துள்ளது