தூங்கலோரியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தூங்கல் ஓரியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 3 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை குறுந்தொகை 151, 235, நற்றிணை 60[1]

ஓரி என்பது சிக்கு இல்லாமல் படிந்து தொங்கும் தலைமயிர். இப் புலவரது தலைமுடி அழகாகப் படிந்து தொங்கியதால் மக்கள் இவரைத் தூங்கல் ஓரியார் என்று அழைத்தனர்.

பாடல் சொல்லும் செய்திகள்

குறுந்தொகை 151

  • திணை - பாலை

பொருள் தேடச் செல்ல எண்ணிய தலைவன் தன் மறப்பருங் காதலியை விட்டுவட்டுச் செல்லுதல் தன் இளமைக்கு முடிவாக அமைந்துவிடும் என்று எண்ணுகிறான்.

ஆண் வங்காவை அடித்துச் சென்று பருந்து தின்றுவிட்டதை எண்ணிப் பெண் வங்கா குழல் போலக் குரல் கொடுத்துக்கொண்டு அழும் காட்டு வழியில் பொருள் தேடச் செல்வது தன் இளமைக்கு மட்டுமல்லாது தன் காதலியின் இளமைக்கும் முற்றுப்புள்ளியாய் அமைந்துவிடும் என்று காதலன் எண்ணுகிறான்.

விலங்கினம்

வங்கா

வங்காப் பறவை குரல் எழுப்பினால் அது புல்லாங்குழல் ஊதுவது போல இருக்கும். பருந்து இதனை அடித்துச் சென்று உண்ணும்.

எழால்

  • எழால் = பருந்து, கழுகு

குறுந்தொகை 235

  • திணை - மருதம்

ஓரான் வல்சி

ஒரே ஒரு பசுவை வைத்துக்கொண்டு அதன் வருவாயில் வாழ்க்கை நடத்தும் வாழ்க்கைதான் ஓரான் வல்சி.

ஏழைக் குடும்பத்துத் தலைவி

தலைவி இத்தகைய சிற்றில்லில் பிறந்து வாழ்பவள்.

தழையாடை

தழையாடையை மகளிர் இடையில் உடுத்திக்கொள்வர். மேலாடையாக மாட்டித் தொங்கவிட்டுக் கொள்வர். அணிகலன் போலப் பூண்டுகொள்வர். தம் நூலாடையின் மேல் செருகிக்கொள்வர்.

நற்றிணை 60

  • திணை - மருதம்

தலைவன் விடியல் வேளையில் வரால் மீனும் பொங்கல் சோறும் வயிறாரத் தின்றுவிட்டு நாற்று மகளிரிடையே சென்று பார்வையிடுகிறான். நாற்று நடுவோர் வயலிலுள்ள சாய் என்னும் கோரையையும், நெய்தல் பூக்களையும் களைந்து சேற்றில் அழுத்திவிட்டு நாற்று நடுகின்றனர்.

சாய்க்கோரையும், நெய்தலும் தலைவனின் மனைவி அணிவன. எனவே அவற்றைக் களைய வேண்டாம் என்று தோழி சொல்கிறாள்.

புதுப் பெண்களோடு பழகும்போது பழைய மனைவியைத் தலைவன் மறந்துவிடக் கூடாது என்பது தோழியின் வேண்டுகோள்.

இப்பாடல் ஊடலுக்கு ஏதுவான நிகழ்ச்சியின் மேல் வந்த மருதத் திணை.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தூங்கலோரியார்&oldid=12496" இருந்து மீள்விக்கப்பட்டது