தி. சு. நடராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மார்க்சியத் திறனாய்வாளராக அறியப்படும் தி.சு. நடராசன் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர். தமிழில் மார்க்சியத் திறனாய்வுக்கு அடிப்படைகளை உருவாக்கித் தந்த பாளையங்கோட்டை நா.வானமாமலையின் ஆய்வு வட்டத்தில் பயிற்சி பெற்று முழுமையான திறனாய்வாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டவர்

வாழ்க்கைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்னும் சிறுநகரில் பிறந்த நடராசன் முதுகலைத் தமிழ்ப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும், முனைவர் பட்டத்தை மதுரைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தவர்.

ஆசிரியப்பணி

திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரியில் 1971 இல் தமிழ் விரிவுரையாளராக பணியைத் தொடங்கிய நடராசன் 2000 இல் பணி நிறைவு பெறும் வரை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக 4 ஆண்டு(1987-1990)களும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு அழைப்புப் பேராசிரியராக ஓராண்டு (1997-98)ம் அழைக்கப்பெற்றார்.. அவரது வழிகாட்டுதலில் பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டங்களைப் பெற்றுப் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பேராசிரியர்களாகத் திகழ்கின்றனர்.

இலக்கியப் பணிகள்

இந்திய அரசின் சாகித்ய அகாடெமியின் பொதுக்குழு உறுப்பினராக ஆறு ஆண்டுகள் (1999-2005) பணியாற்றியவர். அதன் தொடர்ச்சியாக ஞானபீட விருதுத் தேர்வுக்குழுவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ள தி.சு.நடராசன் மகாநதி என்ற இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் காந்தள் என்னும் திறனாய்வுக்கான இதழ் ஆசிரியப் பொறுப்பிலும் பணியாற்றியவர். சென்னையிலிருந்து வெளிவரும் சமூக விஞ்ஞானம் இருமாத இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்

வெளியிட்டுள்ள நூல்கள்

  • திறனாய்வுக் கலை
  • கவிதையெனும் மொழி
  • தமிழின் பண்பாட்டு வெளிகள்
  • தமிழகத்தில் வைதீக சமயங்கள்- வரலாறும் வக்கணைகளும்
  • தமிழ் அழகியல்

மொழிபெயர்ப்புகள்

  • ரோமன் யாக்கப்சனின் மொழியியலும் கவிதையியலும் (Roman Jakobson's Linguistics and Poetics)
  • மாயகாவ்ஸ்கியின் எழுத்துக்கலை (Mayakovsky's Craft of writing)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தி._சு._நடராஜன்&oldid=4487" இருந்து மீள்விக்கப்பட்டது