தி. க. ராமானுச கவிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர்/
அறியும் பெயர்
தி. க. இராமானுசக் கவிராயர்
பிறந்ததிகதி (1905-12-25)திசம்பர் 25, 1905
இறப்பு நவம்பர் 4, 1985(1985-11-04) (அகவை 79)
பணி வழக்கறிஞர்
தேசியம் இந்தியர்
கல்வி பி.ஏ.,பி.எல்.
அறியப்படுவது புலவர், காந்தியவாதி, எழுத்தாளர்
பெற்றோர் கள்ளபிரான்-அரசாழ்வார்

கவித்தென்றல் தி. க. இராமானுசக் கவிராயர் (T. K. Ramanuja Kavirajar, 25 திசம்பர் 1905 – 4 நவம்பர் 1985) பெரும் புலவர்களுள் ஒருவர். வைணவத் திருத்தொண்டராகவும் செந்தமிழ் அறிஞராகவும் விளங்கியவர். பாடலாசிரியர், பனுவலாசிரியர், காப்பிய ஆசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர், நாடக எழுத்தாளர், வழக்குரைஞர், காந்தியவாதி, மனிதநேயம் மிக்கவர் எனப் பன்முகம் கொண்டவர்.[1][2]

இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புலமை பெற்று விளங்கினார். இவர் தமிழ் மொழியில் 14 நூல்களையும், ஆங்கில மொழியில் 5 நூல்களையும் எழுதியுள்ளார். அவரின் படைப்புகளில் கையாண்ட தேர்ந்த மொழி ஆளுமை, கவிதைத்திறன் ஆகியவற்றால் அறியப்படுகிறார்.[2]

அவர் மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றினார். தன் வாழ்நாள் முழுவதும் சத்தியம் மற்றும் உண்மையாக இருப்பதைக் கடைப்பிடித்தார்.[2] அவர் பல நூல்களை எழுதினாலும், 12285 பாக்களால் எழுதப்பட்ட மகாத்மா காந்தி காவியம்[3] என்னும் நூல் அவர் எழுதிய பிற பக்தி நூல்களை விட மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. மேலும். நாமக்கல் கவிஞர் விருதுக் குழு அவருக்குக் "கவித்தென்றல்" என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. கவிராஜர் அந்த நூலை ஆங்கிலத்தில் பாரத் ரீபார்ன் (Bharath reborn) என்கிற பெயரில் மொழிபெயர்த்தார். அவர் பக்தியுடனும், எளிமையாகவும் வாழ்ந்து தனது 80-ஆம் வயதில் காலமானார்.

இளமைப்பருவம்

தி. க. ராமானுச கவிராயர், திருநெல்வேலியில் கள்ளபிரான்-அரசாழ்வார் தம்பதிக்கு 28 திசம்பர், 1905-ஆம் ஆண்டு பிறந்தார். தனது 12-ஆம் வயதிலேயே பாடல்களை எழுதினார். அவர் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இலக்கியங்களைக் கற்றுத் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புலமை பெற்றுத் திகழ்ந்தார். சிறு வயதிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு வர்ணணை செய்யும் அளவிற்கு அவர் புலமை பெற்றிருந்தார். கற்றதோடு நில்லாமல், தமக்குப் பாடமாக வைத்திருந்த நாடகத்துக்கு, மற்ற மாணவர்களுக்காக விளக்கவுரையும் எழுதித்தரும் அளவுக்கு புலமை வாய்க்கப் பெற்றிருந்தார். அவரின் தாயார் மறைந்ததால், தாய்மாமன் மூலம் தத்து எடுக்கப்பட்டு வளர்ந்தார். வைணவ பக்தி இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த இவர், ஆரம்பக் கல்வி பயின்ற காலத்திலேயே கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் இரண்டையும் கற்றுத் தெளிந்தார். உயர்நிலைக் கல்விக்குப் பிறகு பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்று வழக்குரைஞரானார். பின்னர், வழக்குரைஞரான தந்தை கள்ளபிரானுக்கு உதவியாளராகப் பணியாற்றினார். ஆனால், அங்கு உண்மைக்குப் புறம்பாக வாதாட வேண்டிய சூழ்நிலையைப் புரிந்துகொண்ட கவிராயர், தந்தையாரின் அலுவலகத்தைத் தொடர்ந்து நடத்த மறுத்துவிட்டார்.[2]

குடும்ப வாழ்க்கை

கவிராயர் இளமையில் தனது முறைப்பெண்ணான செல்லம்மாள் என்பவரை மணந்தார். அவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சில வருடங்களுக்குப் பிறகு, செல்லம்மாள் மறைந்ததும் விசாலாட்சி என்பவரை மணந்தார். இரண்டாவது மனைவியும் மற்றும் இரு மகள்களும் இறந்துவிட்டதால் அவர் தனது வாழ்நாளில் தனது கடமைகளை ஒரு துறவி போலவே செயல்படுத்தி, உயர் மதிப்பு, மெய்யியல் மற்றும் உண்மையை உள்ளடக்கிய இலக்கிய படைப்புகளை உருவாக்கினார்.

மகாத்மா காந்தி காவியம்

கவிராயர், 1975 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளுக்கிடையில் தனது சிறந்த படைப்பான 'மகாத்மா காந்தி காவியம்' என்னும் நூலை நான்கு தொகுதிகளாகத் தமிழ் மொழியில் வெளியிட்டார்.[3] 12,285 பாடல்களைக் கொண்டது காந்தி காவியம். காந்தியக் கோட்பாடுகளை வலியுறுத்தும் இந்நூலில், காந்தியடிகளின் மறைவை, ஏசுநாதரின் மறைவுடன் ஒப்பிட்டு, அண்ணல் காந்தியடிகளும் உயிர்த்தெழுவார் என்பதை மறைமுகமாக உணர்த்தி, காப்பியத்தை நிறைவு செய்திருக்கிறார் கவிராயர். இந்தப் படைப்பு கம்ப ராமாயணத்திற்குப் பிறகு கவிராயரின் காவியம் என்று வல்லுநர்களால் பாராட்டப்பட்டது. அனைத்து முக்கிய இந்திய பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலிருந்தும் இந்தப் படைப்பிற்காகக் கவிராயர் பல வெளிப்படையான விமர்சனங்களைப் பெற்றார்.[4] இன்றும், இப்படைப்பில் மன்றங்கள், போட்டிகள் மற்றும் இலக்கிய மதிப்பீடுகள் நடைபெறுகின்றன.

பிற படைப்புகள்

இதைத் தொடர்ந்து, கவிராயர் பல ஆங்கில நூல்களை எழுதினார். 1979-ஆம் வருடம் லிரிக்ஸ் ஆஃப் லைஃப் என்ற கவிதை தொகுப்பையும், 'முதின்' என்கிற நாடகத்தையும் எழுதி வெளியிட்டார். அதற்கடுத்த வருடத்தில் மகாத்மா காந்தி காவியத்தை 'பாரத் ரீபார்ன்' அல்லது 'த ஸ்டோரி ஆஃப் மகாத்மா காந்தி என்கிற பெயரில் மொழி பெயர்த்தார். பல்துறை வித்தகரான கவிராயர் மேலும் மூன்று ஆங்கில நூல்களை எழுதினார். அவை மாத்தமேட்டிக்ஸ் அன்ட் மேன், அ டிரீட்டிஸ் ஆன் ஹிண்டூயிசம், மற்றும் கம்பராமாயணம் இன் இங்கிலீஸ் வெர்ஸ் ஆகும். 1989-இல் மகாத்மா காந்தி என்கிற தலைப்பில் ஆங்கில நாடகத்தை எழுதினார். இதைத் தவிர பல்வேறு பிரிவுகளில் கவிதை மற்றும் உரைநடைகளை எழுதியுள்ளார். இயேசுவின் பிறப்பை ஆங்கிலத்தில் மிக அழகாகப் போற்றிப் பாடியுள்ளார். இந்து மதத்தில் சீரிய ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும் பிற மத நூல்களான விவிலியம், திருக்குர்ஆன் முதலியவற்றையும் படித்தார். தம் அச்சகத்தில் திருக்குர்ஆனை அச்சிட்டும் கொடுத்திருக்கிறார்.

மனிதநேயம்

பெருமளவு வசதி படைத்தவராக இருந்தாலும், கவிராயர் எளிமையாக வாழ்ந்தார். இவர் தனது 100 ஏக்கர் நிலத்தை ஆச்சார்யா வினோபாவேயின் பூமிதான இயக்கத்திற்கு நன்கொடையாக அளித்தார். தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகக் தாய்-சேய் நல விடுதி ஒன்றினை ஏற்படுத்தினார். தகுதியான குழந்தைகளுக்குக் கல்வி உதவி அளித்தார். இந்த உண்மையான காந்தியவாதி 1985-இல் மறைந்தார்.

இயற்றிய நூல்கள்

  • காந்தி காவியம் - 12,285 பாடல்கள்
  • பூகந்த வெண்பா - 1,019 பாடல்கள்
  • அராவகன் காதை - 1,692 பாடல்கள்
  • துளவன் துதி - திருமால் புகழ்பாடும் தோத்திர இசைப் பாடல்களின் தொகுப்பு, பல்வகை யாப்பமைதியுடன் விளங்குவது இதன் சிறப்பு.
  • கோவிந்த பஜனை - 45 கீர்த்தனைகள் அடங்கியது.
  • கட்டபொம்மன் கதை - 1,127 பாக்களைக் கொண்டது.
  • Mathem​ati​cs and Man - சூரியக் கதிர்கள், கோள்களின் அமைப்பு, தொலைவு, கோணம் இவற்றால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதியது
  • Mudin - அரிச்சந்திரன் கதையை, "வாய்மையே வெல்லும்" என்ற கருத்தை வலியுறுத்தி இயற்றிய ஆங்கில நாடகம்
  • ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு விரிவுரை
  • நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரை
  • இந்துசமய நூல் - A TR​E​A​T​I​SE ON HI​N​D​U​I​SM, இலங்கையில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டுக்கு எழுதிய சிறுநூல்
  • தனிப்பாடல் திரட்டு
  • அராவகன தளம்
  • தத்துவ தரிசனம்
  • Lyri​cs of Life
  • Mah​athma Gandhi
  • Kam​ba Ram​ay​an​am
  • Bh​ar​ath Re​born

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தி._க._ராமானுச_கவிராயர்&oldid=4473" இருந்து மீள்விக்கப்பட்டது