திருவரங்க நீலாம்பிகை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
திருவரங்க நீலாம்பிகை |
---|---|
பிறப்புபெயர் | நாகை நீலாயதாட்சி |
பிறந்ததிகதி | 6. ஆகத்து. 1903 |
பிறந்தஇடம் | பல்லாவரம் |
இறப்பு | 1945 |
தேசியம் | பிரித்தானியாவின் இந்தியர் |
குடியுரிமை | பிரித்தானிய இந்தியர் |
அறியப்படுவது | தமிழறிஞர், எழுத்தாளர், அகராதி தொகுப்பாளர் |
பெற்றோர் | மறைமலை அடிகள் |
துணைவர் | திருவரங்கனார் |
பிள்ளைகள் | சுந்தரத்தம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை, பிச்சம்மை, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு |
திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) [1] என்பவர் ஒரு தமிழறிஞரும், தமிழாசிரியரும், மொழிப்போர் வீராங்கனையும் ஆவார். இவர் தமிழுடன் வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். மறைமலை அடிகளாரின் மகளாகிய இவர், அவரைப் போன்றே மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந்து கலந்து இருந்த பிறமொழிச் சொற்களைத் தவிர்த்த தனித்தமிழ் நடையைப் பரப்பினார். இதற்கு உதவியாக வடசொற்றமிழ் அகரவரிசை என்ற நூலையும் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் வெளியிட்டார்.
இவர் ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் என்ற தலைப்பில் 601 தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கிலப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார்.[2]
வாழ்க்கை
நீலாம்பிகை அம்மையார் 1903 ஆகத்து 6 அன்று சென்னை பல்லாவரத்தில் பிறந்தார்.[3] இவருக்கு நாகை நீலாயதாட்சி என்ற பெயர் சூட்டப்பட்டது.[3] நீலாம்பிகை அம்மையாராருக்கு இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களை தந்தை மறைமலை அடிகள் கற்பிக்கத் தொடங்கினார். இவர தன் 13 வயதில் தந்தையார் எழுதித் தந்த பெற்றாள் கடமை என்ற கட்டுரையைக் கொண்டு மேடையில் சொற்பொழிவாற்றி பாராட்டுகளைப் பெற்றார். தன் 42 ஆண்டு கால வாழ்வில் 15 இக்கும் மேற்பட்ட நூல்களை படைத்தார்.[3]
பெரியார் பட்டம் அளித்தல்
சென்னையில் 1938- நவம்பர் 13 இல் ஒற்றை வாடை நாடக அரங்கில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் தலைமைதாங்கினார். தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையுரையாக தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.[3] அந்த மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமிக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.[4]
குடும்பம்
இவரின் கணவர் சைவ நெறியாளரான திருவரங்கனார் ஆவார். திருவரங்கனார் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவி பல நூல்களைப் பதிப்பித்தவர் ஆவார். மறைமலை அடிகள் மீது மிகுந்த பற்று கொண்ட திருவரங்கனார், நீலாம்பிகை அம்மையாரை 10 ஆண்டு காலம் விரும்பி மணந்தார். இந்த இணையருக்கு 11 பிள்ளைகள் பிறந்தனர்.[3] அவர்களில் சுந்தரத்தம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை, பிச்சம்மை, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு ஆகியோரின் பெயர் தெரிய வருகிறது. இவரது மகள்களில் ஒருவரான சுந்தரத்தம்மாளை புலியூர்க் கேசிகனுக்கு மணம் செய்துவித்தனர்.[5] 1944 ஆம் ஆண்டு இவரது கணவர் திருவரங்கனார் இறந்தார். அதற்கு அடுத்த ஆண்டு 1945 ஆம் ஆண்டு நீலாம்பிகை அம்மையார் இறந்தார்.[3]
எழுதிய நூல்கள் சில
- ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
- வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்
- வடசொல் தமிழ் அகராதி
- பிழை நீக்கி எழுதும் முறை
- மக்கட் பெயர் அகரவரிசை
- இல்லப் பெயர் அகரவரிசை
- முப்பெண்மணிகள் வரலாறு
- பட்டினத்தார் பாராட்டிய மூவர்
- மேனாட்டுப் பெண்மணிகள்
மேற்கோள்கள்
- ↑ http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29166-2015-09-15-01-59-46
- ↑ தினமலர், தமிழ்ப் புத்தகங்கள்
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "தனித்தமிழ்த் திருவாட்டி நீலாம்பிகை அம்மையார், கட்டுரையாளர் கலைச்செல்வி புலியூர்கேசிகள்" (in ta). https://www.hindutamil.in/news/supplements/penn-indru/1155648-neelambikai-ammaiyar.html.
- ↑ மரு. க. சோமாஸ்கந்தன் (ஆகத்து 2018). "வீரத் தமிழன்னை டாக்டர் எஸ். தருமாம்பாள்". சிந்தனையாளன்.
- ↑ "புலியூர்க் கேசிகன் நூற்றாண்டு: நினைவுகூரப்பட வேண்டிய பெருஞ்செயல்!" (in ta). https://www.hindutamil.in/news/literature/880128-buliyurg-kessian.html.
வெளி இணைப்புகள்
- "தந்தை- மகள் - தமிழ் உறவு". 26 திசம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305153524/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60812252&edition_id=20081225&format=html.
- வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்