திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை |
---|---|
பிறந்ததிகதி | செப்டம்பர் 29, 1926 |
இறப்பு | நவம்பர் 4, 1981 |
திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை (செப்டம்பர் 29, 1926 – நவம்பர் 4, 1981) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.
பிறப்பும், இசைப் பயிற்சியும்
நடராஜசுந்தரம் பிள்ளை, திருமெய்ஞானம் எனும் சிற்றூரில் 29 செப்டம்பர் 1926 அன்று பிறந்தார். பெற்றோர்: பக்கிரிசுவாமி பிள்ளை – மீனாக்சிசுந்தரம் அம்மையார். தனது சித்தப்பா நாராயணசுவாமி பிள்ளையிடம் நாதசுவரத்தில் பயிற்சி பெற்றார்.
இசை வாழ்க்கை
தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளையுடன் இணைந்து நாதசுவரம் வாசிக்க ஆரம்பித்த நடராஜசுந்தரம், இந்தக் காலகட்டத்தில் பல்லவி வாசிப்பில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். சிறிது காலத்துக்கு தனது தங்கையின் கணவரான திருவாரூர் வைத்தியநாத பிள்ளையுடன் இணைந்து நாதசுவரம் வாசித்து வந்தார். அதன்பிறகு தனியாக ஒரு குழு அமைத்து கச்சேரிகளை வழங்கினார்.
தவில் கலைஞர்கள் திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை, நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, நீடாமங்கலம் சண்முக வடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, ஹரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல், திருவாளப்புத்தூர் கே. ஏ. கலியமூர்த்தி, திருப்பதி முனிராமய்யா ஆகியோர் நடராஜசுந்தரம் பிள்ளைக்கு தவில் வாசித்துள்ளனர்.
திருவையாறு ஜோதிராமலிங்கம், பெருஞ்சேரி பத்மநாபன், ஆந்திராவைச் சேர்ந்த கோபால் ஆகியோர் நடராஜசுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் ஆவர்.
பெற்ற பட்டங்களும், சிறப்புகளும்
- நாதசுதா
- ஏழிசை முகில்
- நாகசுவரக் கலைமாமணி
மறைவு
நடராஜசுந்தரம், 4 நவம்பர் 1981 அன்று காலமானார்.
உசாத்துணை
- பக்கம் எண்கள்:215 - 223, பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.)