திரிசிரபுரம் ரா. பஞ்சநதம் பிள்ளை
திரிசிரபுரம் ரா. பஞ்சநதம்பிள்ளை (1893 - 1968) தமிழகத் திருக்கோயில்கள் பற்றிய முறையான வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டவர்.
பிறப்பும் இளமையும்
திரிசிரபுரத்தில் 1893 ஆம் ஆண்டு இராசரத்தினம் காந்திமதி அம்மைக்கு மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலைக் காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். திருச்சி மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் எழுத்துப் படிகள் தயாரிக்கும் அலுவலராகப் பணியாற்றினார். ஆனாலும் தமிழ் படிக்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. ந. மு. வேங்கடசாமி நாட்டார், சிவப்பிரகாசம் பிள்ளை ஆகியோரிடம் சென்று தமிழ் கற்று வந்தார். ஆழ்ந்த தமிழ்ப் பற்றினால் தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பினார். வேங்கடசாமி நாட்டாரின் பரிந்துரையால் திருச்சி ஆயர் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார்.
படைப்புகள்
திருச்சியில் 'தமிழ் ஆராய்ச்சிக் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கினார். திருச்சி வானொலியில் தொடர்ந்து அற்புதத் திருவந்தாதி, திருமுருகாற்றுப்படை பாடல்களுக்கு இவரது விளக்க உரைகள் ஒலிப்பரப்பாயின. 'தமிழகத் திருக்கோயில் வரலாறு, அற்புதக்கனி, திருமுருகாற்றுப்படை விளக்கம்' ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.
பெற்ற பட்டங்கள்
நாகர்கோவில் சைவசித்தாந்த சபை இவருக்கு 'தென்தமிழ்ச் செல்வர்' எனும் பட்டம் வழங்கியது. காஞ்சி காமகோடிபீட சுவாமிகள் 'ஆராய்ச்சி மணி' என்ற பட்டத்தையும், மதுரை திருஞானசம்பந்தர் ஆதீன மடாதிபதி 'புலவர் மாமணி' பட்டத்தையும் சென்னை சைவசித்தாந்த சமாசத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில் வரலாற்றுச் செம்மல் என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
மறைவு
தமிழுக்காகவும் சமயத்திற்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த பிள்ளையவர்கள் தமது 76 வது வயதில் 1968 இல் மறைந்தார். இவரது நூற்றாண்டு விழாவை குடந்தைத் தமிழ்ப் பேரவை சிறப்பாக நடத்தியது. விழா கருத்தரங்கில் தஞ்சாவூர் பேராசிரியர் இரா. வேங்கடாசலம் ர.பஞ்சநதம் பிள்ளையின் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைப் படித்தார். விழா மலராக பேராசிரியர் அ ம சத்தியமூர்த்தி தமிழுலகம் நினைக்க மறந்த தமிழர்கள் எனும் நூலும் வெளியிடப்பட்டது.
உசாத்துணை
- பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் மதி நிலையம்