தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் | |
---|---|
படிமம்:Sri Kailasanathar Temple gopuram in Tharamangalam, Tamil Nadu, India.jpg | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | தாரை மங்கலம் |
பெயர்: | தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | தாரமங்கலம் |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | கற்பகாம்பாள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவார வைப்புத்தலம் |
தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை.
வரலாறு
இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. பொ.ஊ. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 × 164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது.
சிறப்புகள்
மாசி 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் அடியவர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் கோயிலின் நுழைவாயிலில் படிக்கல்லாக உள்ளது.
தாரமங்கலம் கோயில் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இப்படிப்பட்ட கதைச் செய்தி கலைநூட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.[1]
பாதாள லிங்கம்
இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் வழிபாடு செய்தால் திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது.
சுரகேசுவரர்
இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்
- ↑ கொங்கு மண்டல சதகம், பாடல் 76, முனைவர் ந. ஆனந்தி விளக்கம், பக்கம் 119, நூல் சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008