தாயம்மாள் அறவாணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தாயம்மாள் அறவாணன்
தாயம்மாள் அறவாணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தாயம்மாள்
அறவாணன்
பிறந்ததிகதி மே 23 1944


தாயம்மாள் அறவாணன் (பிறப்பு: மே 23 1944 தமிழக எழுத்தாளர், சேந்தன்புதூர் எனுமிடத்தில் பிறந்த இவர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், பெண்ணியம் தொடர்பாக பல நூல்களை எழுதி மகளிர் பல்கலைக்கழகத்துக்குப் பெருமை சேர்த்து வருபவரும், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவருமாவார். மேலும் இவர் 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து 685 பக்க நூலாக, பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கியுள்ளவருமாவார்.

ஆசிரியர் பணி

பாபநாசத்தில் ச.வே. சுப்பிரமணியம், நண்பர்கள் தந்தையுடன் இணைந்து தொடங்கிய திருவள்ளுவர் கல்லூரியில் விரிவுரையாளராக பத்து மாதங்கள் பணியாற்றினார். 1969 முதல் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றினார். 1970-ல் சென்னைப் பச்சையப்பன் அறக்கட்டளையில் அறவாணருக்கும் கடலூர் கந்தசாமி கல்லூரியில் தாயம்மாளுக்கும் பணி கிடைத்தது. சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரிக்கு தாயம்மாள் பணிமாற்றம் பெற்றார். ச.வே.சு. வழியாக பகுதி நேர ஆய்வாளராகச் சேர்ந்து 'குழந்தை இலக்கியம்-ஒரு பகுப்பாய்வு’ தலைப்பில் முனைவர் பட்டத்தை பெற்றார். களப்பணிகளை மேற்கொண்டு பெண் மொழி, உறவு முறை நூல்களை உருவாக்கினார். 1970-ல் கடலூர் கந்தசாமி கல்லூரிக்கு மாற்றம் பெற்றார். 1998-ல் தாயம்மாள் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தாயம்மாள் அறவாணன் இருபத்தியைந்து நூல்களை எழுதினார். அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர். 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து அவர்களின் வரலாற்றையும், பாடல்களையும் "மகடூஉ முன்னிலை" என்ற பெயரில் 685 பக்க நூலாக, பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கினார். சங்கப்பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மொத்தம் 473. அவர்களில் பெண் புலவர்கள் எண்ணிக்கை நாற்பத்தியைந்து என்று குறிப்பிட்டு பெண் புலவர்களின் பாடல்களில் காணப்படும் சிறப்புச் செய்திகளையும், அவர்களின் பெயர்க்காரணத்தையும், வரலாற்றையும் தொகுத்தார். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மகளிருக்கான கருத்தரங்கங்களில் பங்கேற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் வாசித்தல், கற்பித்தல் தலைப்பில் ஆசிரியப் பணிப்பட்டறையை நடத்தினார். அக்டோபர் 27, 2010-ல் உலகச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்று "அறியப்படாத பெண்புலவர்" என்னும் தலைப்பில் கட்டுரை அளித்தார். உலக நாடுகள் பலவற்றிலும் கருத்தரங்கங்களில் கட்டுரையாளராகப் பங்கேற்றார். மாநாடுகளிலும் நூல்கள், இதழ்களிலும் கட்டுரைகளை எழுதினார்.

ஆய்வுகள்

செனகால் அதிபர் லியோ போல்ட் செதார் செங்கோரின் (Leopold Sedar Senghor) அழைப்பில் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகால் நாட்டிற்கு அறவாணன் திராவிட ஆப்பிரிக்க ஆராய்ச்சிக்காகப் பயணம் செய்த போது தாயம்மாளும் உடன் சென்றார். அங்கு "திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு" என்ற நூலை எழுதினார். உரல், உலக்கை, முருங்கக்கீரை, சட்டிப்பானை செய்தல், சுடுதல், மருதோன்றி அணிதல், கோலா பாக்கு வாயில் மெல்லுதல், சில்லுக்கோடு ஆடுதல், அரிசி உணவு உண்ணுதல், போன்ற பல பண்பாட்டு நிகழ்வுகளைத் தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வோடு ஒப்பிட்டு இந்நூலை எழுதினார்.

பதினான்குழி/பல்லாங்குழி என்னும் தமிழர் விளையாட்டுபோல் ஆப்பிரிக்கர்களிடமும் உள்ளது(Mancala) என்பதைக் கண்டார். விளையாட்டு முறையை ஒப்பிட்டு 'பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற நூலை எழுதினார். ஆப்பிரிக்க அதிபர் செங்கோர், ஆப்பிரிக்கர்களுக்குத் தமிழ் கற்பிக்க தக்கார் பல்கலைக்கழகத்தில்(Dakar Bourguiba University) தாயம்மாள் அறவாணனுக்கு மொழி ஆசிரியராக நியமன ஆணை வழங்கினார். 1978 முதல் 1982 வரை அங்கு இலக்கியத்துறையில் பணியாற்றினார்.

சொற்பொழிவாளர்

பெண்ணியம், இலக்கியம் சார்ந்த உரைகளை கல்லூரிகளில் ஆற்றினார். 1970 முதல் சென்னை, மதுரை, தூத்துக்குடி வானாலிகளில் எழுத்துரை ஆற்றி வருகிறார். வெளிநாட்டுப் பண்பலை வானொலிகளுக்காகவும் தமிழ் இலக்கியத்தில் தன்மானம், காலமாற்றத்தில் கற்பு, பூப்பு நிகழ்ச்சி முதலான பல தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினார்.

விருதுகள்

  • 1987-ல் தமிழக அரசு வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு ’திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ நூலுக்குக் கிடைத்தது.
  • ’ஒளவையார் அன்று முதல் இன்று வரை’ நூலுக்குத், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புதுநூற்றாண்டுப் புத்தக மனையும் (NBH) இணைந்து இலக்கியப் பரிசு வழங்கின.
  • 'தமிழ்ச் சமூகவியல் ஒரு கருத்தாடல் என்னும் மன்பதையியல்' நூலுக்கு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியது.
  • சிறந்த கல்வியாளர் எனச் சிறப்பித்து ’வாரியார் விருது’ வழங்கப்பட்டது.
  • 2009-ல் தமிழக அரசின் கி.ஆ.பெ. விருது பெற்றார்.

பதிப்புத்துறை

தாயம்மாள் அறவாணன் 1982-ல் கணவருடன் இணைந்து 'தமிழ்க் கோட்டம்’ நூற்பதிப்பகத்தை நிறுவினார். பல நூல்களை இப்பதிப்பகத்தின் வழி வெளியிட்டு வருகிறார்.

நூல் பட்டியல்

  • திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு
  • பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு
  • மகடுஉ முன்னிலை (ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை: 2004)
  • புதிய கோலங்கள்
  • பெண்ணறிவு என்பது
  • பெருமையே பெண்மையாய்
  • தையல் கேளீர்
  • தையலை உயர்வு செய்
  • தடம் பதித்தோர்
  • குழந்தை இலக்கியம் – ஒரு பகுப்பாய்வு
  • தமிழ்ச் சமூகவியல்- ஒரு கருத்தாடல்
  • பெண்ணெழுத்து இகழேல்
  • கண்ணகி மண்ணில்
  • பெண் இன்று நேற்று அன்று
  • ஒளவையார் அன்று முதல் இன்று வரை
  • பெண் பதிவுகள்
  • தமிழ்ப்பெண்
  • தமிழ்க்குடும்பம்-1919
  • ஒளவையார்
  • பெண்ணின் பெருந்தக்கது இல்

வெளி இணைப்புகள்

உசாத்துணை

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • இந்தியப் பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர்மன்றம் வழங்கும் நூல்கள், கட்டுரைகளுக்கான பரிசில்கள்
  • 2016 ஆம் ஆண்டில் தாயம்மாள் அறவாணனின் ‘அவ்வையார் படைப்பு களஞ்சியம்’ என்ற நூலுக்கு சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசை தினத்தந்தி செய்தித் தாள் நிறுவனம் வழங்கிச் சிறப்பித்தது.[1]
"https://tamilar.wiki/index.php?title=தாயம்மாள்_அறவாணன்&oldid=4420" இருந்து மீள்விக்கப்பட்டது