தாயங்கண்ணியார்
தாயங்கண்ணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புலவர் தாயங்கண்ணனாரின் மனைவி இவர். தாயங்கண்ணியாரின் பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது புறநானூறு 250 எண் கொண்ட பாடல்.
புறநானூறு 250 சொல்லும் செய்தி
- தாபத நிலை
கணவன் இறந்த பின் அவனது மனைவியும், மக்களும் அவனை எண்ணி நோனபிருத்தலை இந்தப் பாடல் கூறுகிறது.
- 'காதலன் இழந்த தாபத நிலை'
தொல்காப்பியம் இதனை இவ்வாறு குறிப்பிடுகிறது (1025)
இரவலர் ஒருவர் வழக்கம் போல் வள்ளலின் வீட்டுக்குச் செல்கிறார். அவனது வீடு இரவலர்களின் கண்ணீரைத் தடுத்து நிறுத்திய வாயிலைக் கொண்டது. இப்போது அங்கு அவன் இல்லை.
அவன் மனைவி கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் இருக்கிறாள். அவளது கைகளில் வளையல்கள் கழற்றி எறியப்பட்டுவிட்டன. அல்லி இலையில் சோற்றைப் போட்டுக் கணவனுக்குப் படையல் செய்துவிட்டுச் சாப்பிடுகிறாள்.
அவனது புதல்வர்கள் முனிவர் போன்ற தலையுடன் காணப்படுகின்றனர். தாய் நோன்பு இருப்பதால் அவர்களுக்குப் போதிய பால் இல்லை. வானம் சென்ற அவர்களது தந்தைக்குப் படைத்த 'வான்சோறு'தான் அவர்களுக்கு உணவு. அவர்களில் ஒருவன் வான்சோறு வேண்டாம் தீம்பால் வேண்டும் என அடம் பிடிக்கிறான்.
இதுதான் அந்த வீட்டு வாயிலின் இன்றைய நிலைமை.
தாயங்கண்ணனார் பாடலோடு ஒப்பீடு
தாயங்கண்ணனார் சோழப் பெருவேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் வாழ்ந்த காலத்தில் அவனைப் பாடிப் பரிசில் பெற்று மீளும் செய்தியைப் பாடியுள்ளார். - புறம் 397
- காடு வாழ்த்து - புறம் 356
கணவனின் உடலைச் சுட்டெரித்த தீயின் சூடு எலும்பில் இருக்கும்போது மனைவி அழுது தன் கண்ணீரால் அந்த எலும்பின் சூட்டைத் தணிப்பாளாம். இப்படிச் சுடுகாட்டைப் பாடியதால் இது காடு வாழ்த்து ஆயிற்று.