தாண்டகம்
தாண்டகம் என்பது தமிழ்ச் செய்யுள் வகையில் ஒன்று. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த இலக்கியங்களிலே இச்செய்யுள் வகையைக் காணலாம்.
அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால் ஆடவரையோ கடவுளரையோ பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்). அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும் எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் பகருகிறது. பல்காயனார், மாபூதனார், சீத்தலையார் என்போரும் இக் கருத்தினையே ஏற்றுக் கொண்டுள்ளனர்[மேற்கோள் தேவை]. இவ்விருவகை தாண்டகச் செய்யுள்களும் பிற்காலத்துப்பெருகிய அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பனவற்றிற்கு முன்மாதிரிகள் என மொழியலாம்.
- பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.
- திருநாவுக்கரசர் திருத்தாண்டகமும், திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகமும் ஒரே வகையான பாடல்கள்.
திருத்தாண்டகம்
- கூற்றுவன்காண் கூற்றிவனைக் குமைத்த கோன்காண்
- குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
- காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
- கணபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
- நீற்றவன்காண் நிலாவூரும் சென்னி யான்காண்
- நிறையார்ந்த புனல்கங்கை நிமிர்ச டைமேல்
- ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
- ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. [1]
திருநெடுந்தாண்டகம்
- மின்னுருவாய் முன்னுருவாய் வேதம் நான்கில்
- விளங்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
- பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
- பிறப்பிலியாய் இறப்பதற்கை எண்ணா(து) எண்ணும்
- பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
- புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி
- தன்னுருவாய் என்னுருவில் சின்ற எந்தை
- தளிர்புரையும் திருவடிஎன் தலைமே லவ்வே. [2]
திருக்குறுந்தாண்டகம்
- நிதியினைப் பவளத் தூணை
- நெறிமையால் சினைய வல்லார்
- கதியினைக் கஞ்சன் மாளக்
- கண்டுமுன் அண்டம் ஆளும்
- மதியினை மாலை வாழ்த்தி
- வணங்கிஎன் மனத்து வந்த
- விதியினைக் கண்டு கொண்ட
- தொண்டனேன் விடுகி லேனே. [3]
அழகிய வரதராசன் திருக்குறுந்தாண்டகம்
அழகிலே சிறந்த பெண்கள் அரம்பையர் முதலோர் வெட்கும்
அழகினை ஒருங்கே பெற்று மோகினி வடிவம் கொண்ட
அழகிய வரத ராசன் புகழினை மகிழ்ந்து பாடி
வழிவழி யாக வந்து அருளினைப் பெற்று வாழ்வோம்[4]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ திருநாவுக்கரசர் தேவாரம், திருவேகம்பம், திருத்தாண்டகம், பாடல் 1
- ↑ திருமங்கையாழ்வார், திருநெடுந்தாண்டகம், பானல் 1
- ↑ திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
- ↑ "அழகிய வரதராசன் திருக்குறுந்தாண்டகம்", இரட்டணை நாராயணகவி (முனைவர் க. அரிகிருஷ்ணன்), பார்க்கப்பட்ட நாள் 2024-05-19