தமிழர் எண் விளையாட்டுகள்
சிறுவர் முதல் பெரும்புலவர்கள் வரை எண்களைக் கொண்டு விளையாடி மகிழ்வதற்கெனச் சில பாடல்கள், விடுகதைகள் போன்றவற்றை அமைத்திருக்கின்றனர். இவற்றை எண் விளையாட்டு என்கின்றனர்.
சிறுவர் விளையாட்டு
“ஒரு குடந் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது” என்று ஒன்று முதல் பத்து வரை இருவர் எதிரெதிராக இடைவெளிவிட்டு நின்று கைகளை மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள அதன் இடைவெளியில் மற்றவன் புகுந்து சொல்லிச் செல்லும் போது பத்தாவது எண் சொல்லப்படும் போது நுழைபவன் பிடித்துக் கொள்ளப்படுவான். பிடிபடாமல் தப்புவது அவன் திறமையைப் பொருத்தது. இப்படி எண்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டு இன்றும் உள்ளது.
பள்ளிச் சிறுவர் மறை விளையாட்டு
- எண் விளையாட்டு (39)
- இது ஒரு ஊழ்வலி வேடிக்கை விளையாட்டு.
- ஒருவர் பத்துக்குள் ஓர் எண்ணை மறைவாக எழுதி வைத்துக்கொள்வார்.
- அது எத்தனை என்று மற்றவர் ஆறு வாய்ப்புகளுக்குள் சொல்லவேண்டும்.
- சொல்லிவிட்டால் அவர் எழுதலாம்.
- சொல்லாவிட்டால் மீண்டும் எழுதியவரே எழுதுவார்.
- சரியாகச் சொன்னதற்கு மட்டும் வெற்றிப்புள்ளி.
- கூடிய வெற்றிப்புள்ளிகளை ஈட்டியவர் வெற்றி.
தலையில் எட்டு, இடையில் ஐந்து, கடையில் மை
சிறுவர்கள் எண்ணைக் கொண்டு புதிர் அமைத்து விளையாடும் முறையும் முன்பு இருந்திருக்கிறது.
- “டா டா டா டா டா டா அது
- டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை”
என்று சொல்லி விளையாடுவார்கள். இதில் டா எனும் எழுத்து பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு புதிருக்கு விடை காண வேண்டும். அதாவது “ஆறுடா அது பத்துடா மாட்டை” என்று சரியான விடையைக் கணிக்க வேண்டும்.
விடுகதை விளையாட்டு
விடுகதை வழியாகவும் எண் விளையாட்டு இருந்துள்ளது. இதன் மூலம் சிறுவர் சிறுமியர்க்கு எண் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
- ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை, அஃது என்ன?
- விடை: பல்லாங்குழி
ஏழும் ஏழுமாகப் பதினான்கு குழிகள் பல்லாங்குழியில் இருக்கும். இதைக் கொண்டு இந்த விடுகதை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் எண் விளையாட்டு
தமிழ் எண்களை நினைவில் கொள்ளும் விதமாகவும் சில விடுகதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
- “தலையில் எட்டு
- இடையில் ஐந்து
- கடையில் மை”
எல்லாம் சேர்ந்தால் மேன்மை. அஃது என்ன?
- விடை: அருமை
தமிழ் எண் வடிவத்தில் எட்டாவது எண் வடிவம் ௮, ஐந்தாவது எண் வடிவம் ௫, இவற்றுடன் கடைசியாக மை சேர்த்து விடை காணப்பட்டுள்ளது.
ஊர் பெயர் விளையாட்டு
ஊரின் பெயரை எண்களைக் கொண்டு விடுகதை வடிவில் அமைத்து விடை காணச் சொல்லும் விளையாட்டும் இருந்திருக்கிறது.
- “எட்டெழுத்தில் ஓர் ஊரின் பெயர்
- ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
- மூன்றும் நான்கும் சேரில் குளம்
- மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
- மூன்றும் ஆறும் சேரில் பெருமை
- ஏழும் எட்டும் சேரில் பருகு
- அஃது என்ன?”
எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து விடை காண வேண்டும். அதாவது திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் திருவாவினன்குடி என்று விடை காண வேண்டும்.
இலக்கியத்தில் எண் விளையாட்டு
பழந்தமிழ்ச் சிலேடைப் பாடலொன்றில் பின்வருமாறு வருகிறது.
- "பூனக்கி ஆறு கால்
- புள்ளினத்திற்கு ஒன்பது கால்
- ஆனைக்குக் கால் பதினாறு ஆனதே"
இங்கு
- பூனக்கி - பூ + நக்கி = பூச்சியினம்.
- ஒன்பது கால் = 9 x 1/4= 2 1/4 = இரண்டு கால்.
- கால் பதினாறு = நாலு கால் என விளக்கம் பெறலாம்.