தகடூர் யாத்திரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தகடூர் யாத்திரை என்பது, சேரமன்னன் ஒருவனுக்கும் தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த குறுநில மன்னன் ஒருவனுக்கும் நிகழ்ந்த போர் பற்றிக் கூறும் ஒரு சங்ககால நூல் ஆகும். இது புறப்பொருள் சார்ந்தது. இது ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அரிசில் கிழார், பொன்முடியார் ஆகிய சங்கப் புலவர்கள் சேர மன்னனைச் சார்ந்து நின்றவர்கள். சேரன் படையெடுத்துச் சென்றபோது அவனுடன் சென்று நேரடியாக நிகழ்வுகளைக் கண்டு கூறுவது போலவே பாடல்கள் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. உ. வே. சாமிநாதையர், என் சரித்திரம் என்னும் தனது தன்வரலாற்று நூலில் எழுதியுள்ள குறிப்புக்களில் இருந்து தகடூர் யாத்திரை நூல் அவர் காலத்துக்குச் சற்று முன்னர்வரை இருந்தது தெரியவருகிறது.

பல்வேறு மூலங்களில் இருந்தும் இதுவரை 48 பாடல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. பல நூல்களிலிருந்தும் எடுத்துத் தொகுத்த பாடல்களைக் கொண்ட நூலாகிய "புறத்திரட்டு" என்னும் தொகுப்பில் இருந்து தகடூர் யாத்திரைப் பாடல்கள் சில கிடைத்தன. இது தவிர "நீதித் திரட்டு என்னும் இன்னொரு நூலிலிருந்தும் சில பாடல்களைப் பெற முடிந்தது. நச்சினார்க்கினியர், பேராசிரியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஆகியோர் தமது உரைகளில் தகடூர் யாத்திரையில் இருந்து பாடல்களை மேற்கோளாகக் கொடுத்துள்ளனர்.

இவ்வுரை நூல்களில் இருந்து பாடல்கள் மட்டுமன்றி இந்நூலின் அமைப்பு பற்றிய சில தகவல்களும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பாக்களுக்கு இடையே உரைநடைச் சொற்கள் பயின்றுவருவது குறித்த தொல்காப்பியச் சூத்திரத்துக்கு விளக்கமளிக்கும்போது எடுத்துக்காட்டுக்காகத் தகடூர் யாத்திரையைக் குறிப்பிட்டுள்ளதால் இந்நூலில் பாடல்களுடன் உரைநடைச் சொற்களும் விரவிக் காணப்பட்டது என்பது பெறப்படுகின்றது. அத்தோடு "பழமையான கதை பொருளாகச் செய்யப்படுவது" என்பதற்கு எடுத்துக் காட்டாகப் பெருந்தேவனாரின் பாரதமும், தகடூர் யாத்திரையும் தொல்காப்பிய உரை நூலில் கூறப்பட்டிருப்பது, முன்னர் நிகழ்ந்து வாய்வழியாக வந்த ஒரு நிகழ்வைப் பிற்காலத்தில் பாடியதே தகடூர் யாத்திரை என்று பொருள்படுவதாகவும், சேரமான், அதியமான் போர் குறித்த வாய்வழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் தகடூர் யாத்திரை எழுதப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுவர் இதனை மறுப்போரும் உளர்.

சங்கப் பாடல் சான்று

அஞ்சியத்தை மகள் நாகையார் என்னும் புலவர் தம் பாடல் ஒன்றில் அஞ்சி புகழைப் பாடும் நூலைப் பாணன் ஒருவன் புதிய பண்ணிசை கூட்டிப் பாடியதாகவும், அந்த இசைப்பாடல் இன்பம் தருவது போலத் தலைவன் தந்த இன்பம் தனக்கு இனிமையாக இருப்பதாகத் தலைவி ஒருத்தி தன் தோழியிடம் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[1] [2]

மேற்கோள்

  1. கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
    நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
    தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
    எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், 15
    புதுவது புனைந்த திறத்தினும்,
    வதுவை நாளினும், இனியனால் எமக்கே. (அகநானூறு 352)
  2. பாடலும் விளக்கமும்
"https://tamilar.wiki/index.php?title=தகடூர்_யாத்திரை&oldid=14173" இருந்து மீள்விக்கப்பட்டது