டி. ஆர். நாகராஜ்
முனைவர் டி.ஆர்.நாகராஜ் ( (1954-1998) ஒரு இந்திய கலாச்சார விமர்சகரும், அரசியல் வர்ணனையாளரும் மற்றும் இடைக்கால மற்றும் நவீன கன்னட கவிதைகளைப் படைக்கும் எழுத்தாளரும் ஆவார். இவர் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வந்தார். தலித் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் ஆவார். சாகித்யா கதனா என்ற படைப்புக்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார். தலித் மற்றும் பகுஜன் அரசியலில் புதிய வெளிச்சம் போட்ட சில இந்திய சிந்தனையாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். சாதி அமைப்பு மற்றும் தீண்டாமைப் பிரச்சினை குறித்த காந்தி - அம்பேத்கர் ஆகியோரிடையேயான விவாதத்தை 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான சமகால விவாதமாக அவர் கருதினார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
டோடபல்லபுரா ராமையா நாகராஜ் பிப்ரவரி 20, 1954 அன்று இந்தியாவின் மைசூர் மாநிலத்தில் (இன்றைய கர்நாடகா ) டோடபல்லாபூரில் ராமையா மற்றும் அக்கையம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது குடும்பம் நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தது ஆகும். அவரது தந்தை ஒரு ஆசிரியர். நாகராஜ் தனது சொந்த ஊரில் கல்வி பயின்றார், அதன் பிறகு பெங்களூரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்றார். அவர் கல்லூரியில் ஒரு சிறந்த விவாதக்காரராக அறியப்பட்டார். இந்த காலகட்டத்தில் கல்லூரிகளுக்கிடையேயான விவாதங்களின் போது தான் அவருக்கு தலித் மற்றும் பகுஜன் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது.
நாகராஜ் தனது உயர் கல்விக்காக பெங்களூர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு அவர் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1975 ஆம் ஆண்டில், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையில் (முன்னதாக கன்னட அத்யாயனா என்று அறியப்பட்டது) முறையான ஆய்வு மாணவராக சேர்ந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றதோடு அங்கேயே கன்னட கல்விப்புலத்தில் பணியில் சேர்ந்தார். [2]
தொழில் மற்றும் எழுத்து வாழ்க்கை
நாகராஜ் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் விரைவாக உயர்ந்த நிலையை அடைந்தார். அங்கு அவர் வாசகர் என்ற நிலையை அடைந்து, பின்னர், 1998 ஆம் ஆண்டில் இறப்பதற்கு சற்று முன்பு, புதிதாக நிறுவப்பட்ட கைலாசம் என்ற இருக்கைக்கு அவர் பெயரிடப்பட்டது.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கன்னடத் துறையுடன் தான் கொண்டிருந்த முதன்மையான பணியிணைப்பைத் தவிர, நாகராஜ் சிம்லாவின் இந்திய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தில் (1993–4) கூட்டாளராகவும் இருந்தார்; வளரும் சமூகங்களிற்கான ஆய்விற்கான மையத்தில் (சி.எஸ்.டி.எஸ்), டெல்லி (1994–6) மூத்த கூட்டாளராகவும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் (1997 மற்றும் 1998) தெற்காசிய மொழிகள் மற்றும் நாகரிகங்கள் துறையில் கெளரவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.
நாகராஜ் கன்னடத்தில் பல கட்டுரைகளையும், ஆறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். உருது இலக்கியத்தின் ஒரு தொகுப்பு உட்பட 15 கன்னடப் புத்தகங்களையும் அவர் திருத்தியுள்ளார். பிளேமிங் ஃபீட் என்பது இவரால் எழுதப்பட்ட இந்திய தலித் இயக்கம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும். அதன் தலைப்புக் கட்டுரை "பிளேமிங் ஃபீட்" என்பது மகாத்மா காந்தி மற்றும் பி. ஆர். அம்பேத்கார் ஆகியோர் தலித்திய விடுதலை அறிவிப்பு தொடர்பான தமது மாறுபட்ட தத்துவங்களை விவாதிக்கிறது. இந்தப் புத்தகத்தின் திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு இவரது மரணத்திற்குப் பின் 2011 ஆம் ஆண்டில் (தி ஃபிளேமிங் ஃபீட் மற்றும் பிற கட்டுரைகள்) இந்தியாவில் தலித் இயக்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
1998 ஆம் ஆண்டில் அவரது இறப்பின் போது அவர் சப்தானாவின் (மொழிபெயர்ப்புக்கான மையம், இந்திய சாகித்ய அகாதெமியின் ஒரு திட்டம்) இயக்குநராகவும், எக்கோடுவினுடைய அக்சர பிரகாசன அமைப்பினால் பதிப்பிக்கப்பட்ட ஒரு திறனாய்வுப் பணித் தொடரான அக்சர சிந்தனா என்பதன் தொகுப்பாசிரியராகவும் இருந்தார். அவருடைய இறப்பிற்கு முந்தைய மாதங்களில்,"தலித் இலக்கிய விமர்சனத்திற்கான ஒரு புதிய வடிவமைப்பாக பெண்ணியத்தின் தன்மையை ஆராய்தல்" என்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ Vajpeyi, Ananya. ""Let Poetry Be a Sword!"" "let-poetry-be-sword" இம் மூலத்தில் இருந்து 28 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150928052511/http://www.caravanmagazine.in/books/%E2%80%9Clet-poetry-be-sword%E2%80%9D. பார்த்த நாள்: 30 September 2015.
- ↑ Nagaraj, D.R. (2012). Prithvi Datta Chandra Shobi. ed. The Flaming Feet & Other Essays : The Dalit Movement in India. Permanent Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1906497804. https://archive.org/details/liang.flamingfeetorher0000drna.
- ↑ Pollock, Sheldon; Breckenridge, Carol (2000). In Honor o D . R. Nagaraj. 12. Project MUSE. பக். xiv. https://muse.jhu.edu/login?auth=0&type=summary&url=/journals/public_culture/v012/12.3pollock01.html. பார்த்த நாள்: 28 September 2015.