ஜோன் பெர்கசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜோன் பெர்கசன் (John Ferguson, 1842 - 1913) இலங்கை ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கையில் வெளியான சிலோன் ஒப்சர்வர் பத்திரிகையின் ஆசிரியராகவும், பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

ஜோன் பெர்கசன் இசுக்கொட்லாந்து, ஈஸ்டர் ரொசு பிரதேசத்தில் டெயின் என்ற ஊரில் 1842 ஆம் ஆண்டில் பிறந்தவர். டெயின் ரோயக் அக்காதமியில் கல்வி கற்ற இவர் இன்வெர்னெசு, இலண்டன் ஆகிய இடங்களில் ஊடகவியலாளராகப் பயிற்சி பெற்றார். பின்னர் 1861 ஆம் ஆண்டில் இலங்கை சென்றார். இலங்கையில் கொழும்பு ஒப்சர்வர் பத்திரிகையின் உரிமையாளரும், அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்த அலிஸ்டர் மெக்கன்சி பெர்கசன் (1816 - 1892) ஜோன் பெர்கசனின் மாமாவாவார். அவரிடம் உதவி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். இப்பத்திரிகையில் இவர் 50 ஆண்டு காலம் பணியாற்றினார். 1867 இல் இப்பத்திரிகையின் பெயர் சிலோன் ஒப்சர்வர் என மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் அலிஸ்டர் மெக்கன்சிக்கு உதவி ஆசிரியராக இருந்து, படிப்படியாக உயர்ந்து, அப்பத்திரிகையில் உரிமையாளரானார். 1892 இல் அலிஸ்டர் மெக்கன்சி இறந்ததை அடுத்து ஒப்சர்வர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார்.[1]

ஜோன் பெர்கசன் இலங்கையில் அரசியல், வர்த்தக, மற்றும் கலாசாரத் துறைகளில் பெரிதும் ஆர்வம் காட்டினார். குறிப்பாக, இலங்கையில் தொடருந்து சேவை அபிவிருத்திக்கு ஆதரவாக நிறைய எழுதினார். அத்துடன், தேயிலை, கோப்பி, தென்னை போன்ற வேளாண்மை வணிகங்களில் ஆர்வம் காட்டினார். ஆண்டு தோறும் Directory of Ceylon என்ற பெயரில் ஆண்டுதோறும் கையேடுகளை எழுதி வெளியிட்டு வந்தார்.[1][2] இவற்றின் தொகுப்பு 1930 ஆம் ஆண்டில் கொழும்பு கொமர்சல் கம்பனி Ferguson's Ceylon Directory – 1930 என்ற பெயரில் வெளியிட்டது. இந்நூல் 1595 பக்கங்களில் 48 விடயங்களை விரிவாக விளக்கி எழுதப்பட்டது.[3]

1881 ஆம் ஆண்டு முதல் 1904 அம் ஆண்டு வரை "ட்ரொப்பிக்கல் அக்ரிகல்ச்சரிஸ்டு" (Tropical Agriculturalist) என்ற ஆங்கில இதழை வெளியிட்டு வந்தார். கொழும்பு கறுவாத் தோட்டத்தில் அமைந்திருந்த பாப்டிசத் தேவாலயத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து செயலாற்றினார். இலங்கையில் இருந்த காலத்தில் ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, வட அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்திருந்தார்.[1]

இறுதிக் காலம்

ஜோன் பெர்கசன் 1903 ஆம் ஆண்டில் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் உறுப்பினராக இருந்த காலத்தில் இலங்கையின் தொடருந்து சேவைகளை விரிவாக்குவதில் பெரும் பங்காற்றினார். 1908 ஆம் ஆண்டில் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார். 1912 ஆம் ஆண்டில் பிரித்தானியா திரும்பினார். அங்கு அவர் 1913 ஆம் ஆண்டில் காலமானார். ஜோன் பெர்கசன் இரண்டு தடவைகள் திருமணம் புரிந்தார். 1871 ஆம் ஆண்டில் சார்லொட் ஏடன் (இறப்பு: 103) என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருந்தனர். 1905 இல் எல்லா சிமித் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1]

விருதுகள்

ஜோன் பெர்கசனுக்கு பிரித்தானிய அரசின் செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் விருது (Order of St Michael and St George) வழங்கப்பட்டது.[1] இலங்கையில் இவரது நினைவாக கொழும்பு, மட்டக்குளியில் வீதி ஒன்றிற்கு பெர்கசன் வீதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "FERGUSON, John (1842-1913)". AIM25 - Archives in London and the M25 area. http://www.aim25.ac.uk/cgi-bin/vcdf/detail?coll_id=4625&inst_id=16&nv1=search&nv2=. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Ferguson's". John Ferguson. http://historyofceylontea.com/Fergusons. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 
  3. 3.0 3.1 "இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றைக் கூறும் ஆவணம்". வீரகேசரி. 13 டிசம்பர் 2015. 
"https://tamilar.wiki/index.php?title=ஜோன்_பெர்கசன்&oldid=24834" இருந்து மீள்விக்கப்பட்டது