ச. முருகானந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ச. முருகானந்தன்
Dr muruhanandan.jpg
முழுப்பெயர் சண்முகம்
முருகானந்தன்
பிறப்பு 14-01-1950
பிறந்த இடம் கரணவாய்,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
மருத்துவர்
பெற்றோர் சி. சண்முகம்,
ச. இராசம்மா

மருத்துவர் சண்முகம் முருகானந்தன் (பிறப்பு: சனவரி 14, 1950) சிறுகதைகள், குறுநாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், நலவியற்கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதிவரும் இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவரது கதைகளில் சமுதாய நோக்கும், தேசியப் பிரச்சினைகளும் கருக்களாக அமைந்துள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், கரணவாய் கிழக்குப் பிரதேசத்தில் சி. சண்முகம், ச. இராசம்மா தம்பதியினரின் புதல்வராக பிறந்த முருகானந்தன் கரணவாய் அமெரிக்கன் மிசன் ஆரம்பப் பாடசாலை, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியினைப் பெற்றார். யாழ் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்ற இவர், கொழும்பு மருத்துவக் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் தொழில்சார் கல்வியைப் பெற்றுள்ளார். தற்போது ஒரு வைத்தியராகத் தொழில்புரிந்து வரும் இவர், தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார். இவரின் மனைவி;: சந்திரகாந்தா முருகானந்தன். பிள்ளைகள்: அகல்யா, அனுசியா.

இலக்கியத்துறை ஈடுபாடு

கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்துறையிலும், இலக்கியத்துறையிலும் ஈடுபாடுமிக்கவராக இருந்த இவர் தனது 26வது வயதில் மிகவும் இளமை பொருந்திய வேளையில் கதை உலகில் பிரவேசித்தார். இவரின் கன்னி ஆக்கம் 1976 ஆம் ஆண்டு ஆகத்து திங்களில் 'தினகரன்' பத்திரிகையில் ‘கண்களின் வார்த்தைகள் தெரியாதோ’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, நகைச்சுவை, பக்தி, வீரம் என்பன போன்ற உணர்வு நிலைகளின் கருப்பொருள்களில் நின்று இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200ற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 10 குறுநாவல்களையும், பல விமர்சனங்கள், நாடகங்களையும் எழுதியுள்ளார்.

ஆக்கங்கள் பிரசுரமான ஊடகங்கள்

இலங்கையில் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, தினக்குரல், ஈழநாடு, சுதந்திரன், சுடர்ஒளி, தினமுரசு, ஈழநாதம், முரசொலி, வெள்ளிநாதம், நவமணி, கொழுந்து, தமிழ்அலை, ஈழமுரசு, மித்திரன், சரிநிகர், சங்குநாதம், மல்லிகை, சிரித்திரன், சுடர், மூன்றாவது மனிதன், கதம்பம், ஞானம், இருக்கிறம், இலங்கை விகடன், தாரகை போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் முற்போக்கு இலக்கிய சஞ்சிகைகளான தீபம், கணையாழி, சிகரம், தாமரை, செம்மலர் மற்றும் குங்குமம், ராணி புலம்பெயர் நாட்டின் இலக்கிய சஞ்சிகைகளான எரிமலை, பிரான்ஸ் ஈழநாடு, சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது ஆக்கங்கள் வெளி வந்துள்ளன.

புனைப்பெயர்கள்

ச. முருகானந்தன் என்ற பெயரில் சிறப்படைந்துள்ள இவர், பிரகவாதஆனந்த, வன்னேரிஐயா, வன்னியன், தமிழ்ப்பித்தன், கந்தமகிழ்னன், கருணைமுருகு ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

எழுதிய நூல்கள்

சிறுகதைத் தொகுதிகள்

  1. மீன்குஞ்சுகள்,
  2. தரைமீன்கள்,
  3. இது எங்கள் தேசம்,
  4. இனி வானம் வசப்படும்,
  5. ஒரு மணமகனைத் தேடி,
  6. நாம் பிறந்த மண்.

கட்டுரைத் தொகுதிகள்

  1. நாளை நமதே,
  2. எயிட்ஸ் இல்லாத உலகம்;

கவிதைத்தொகுதிகளும், குறுநாவல்களும்

  1. நீ நடந்த பாதையிலே,
  2. துளித்தெழும் புதுச் செடிகள்,
  3. நெருப்பாறு,
  4. அது ஓர் அழகிய நிலாக்காலம்.

தற்போது தேயிலைப் பெண், காணாமல் போனவர்கள் ஆகிய நூல்கள் அச்சிலுள்ளன.

விருதுகள்

  • தமிழ் நாட்டில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் சஞ்சிகையில் இவரது மீன்குஞ்சுகள் சிறுகதை வெளியாகியது. சென்னை இலக்கியச் சிந்தனையின் 1979 ஆண்டு, ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாகவும் தெரிவு செய்யப்பட்டது..
  • 2003இல் வெளியான தரைமீன்கள் சிறுகதைத் தொகுதிக்கு 2004 சிறுதைக்கான சாகித்திய மண்டலம் பரிசு கிடைத்தது.
  • மீரா பதிப்பக வெளியீடான 'எயிட்ஸ் இல்லாத உலகம்' என்ற இவரது மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது.

இவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசில்களை வென்றுள்ளார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ச._முருகானந்தன்&oldid=2586" இருந்து மீள்விக்கப்பட்டது