ச. அ. தர்மலிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ச. அ. தர்மலிங்கம்
9வது யாழ் மாநகர முதல்வர்
பதவியில்
28 மே 1962 – 04 ஏப்ரல் 1963
முன்னவர் எம். யேக்கப்
பின்வந்தவர் பி. எம். யோன்
தனிநபர் தகவல்
பிறப்பு (1908-03-23)23 மார்ச்சு 1908
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி தமிழீழ விடுதலை முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) சுந்தரவல்லி
இருப்பிடம் யாழ்ப்பாணம், ஐக்கிய இராச்சியம்
தொழில் மருத்துவர்
சமயம் இந்து

சண்முகம் அப்பாக்குட்டி தர்மலிங்கம் (S. A. Tharmalingam 23 மார்ச் 1908 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரும், அரசியல்வாதியும், முன்னாள் யாழ் நகர முதல்வரும் ஆவார். இவரது அரசியல் வாழ்வின் பிற்பகுதியில், தீவிர தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

இளமைக்காலம்

தர்மலிங்கம் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத்துறையைச் சேர்ந்த சண்முகம் அப்பாக்குட்டி.[1] யாழ் பரி யோவான் கல்லூரி, யாழ் சம்பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் பள்ளிக்கல்வியை முடித்துக்கொண்ட தர்மலிங்கம், பின்னர் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு 1933ல் மருத்துவரானார். யாழ்ப்பாணம் கட்டுவனைச் சேர்ந்த மருத்துவர் சரவணமுத்து என்பவரின் மகளான சுந்தரவல்லியை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தர்மாம்பாள், தர்மவல்லி, தர்மசோதி, தர்மராணி என நான்கு பெண்பிள்ளைகள் பிறந்தனர்.[2] தர்மலிங்கத்தின் தமையனார் ச. அ. வெற்றிவேலு யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற மருத்துவர்களில் ஒருவராக விளங்கினார். வெற்றிவேலுவின் மகனும், தர்மலிங்கத்தின் பெறாமகனுமான வெற்றிவேலு யோகேஸ்வரன் இலங்கை நாடாளுமன்றத்துக்கான யாழ்ப்பாணத் தொகுதி உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டர்.

தொழில்

மருத்துவக் கல்வியை முடித்துக்கொண்ட தர்மலிங்கம், இலங்கை அரசாங்கத்தின் கீழ் மருத்துவ அலுவலராக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றினார். 1950ல் பணியில் இருந்து ஓய்வுபெற்ற இவர், யாழ்ப்பாணத்தில் தனியாக மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். இக்காலத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த தர்மலிங்கம், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 28 மே 1962 - 4 ஏப்ரல் 1963 காலப்பகுதியில் யாழ்ப்பாண மாநகர முதல்வராகவும் பணியாற்றினார்.[3] எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி, பின்னர் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த தர்மலிங்கம், பிற்காலத்தில் இக்கூட்டணியில் இருந்து பிரிந்து உருவான தமிழீழ விடுதலை முன்னணி என்னும் கட்சியில் இணைந்து பணியாற்றினார். இவரது அரசியல் செயற்பாடுகள் காரணமாகப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தர்மலிங்கம் பிற்காலத்தில் ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 246.
  2. 2.0 2.1 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 229.
  3. "யாழ் மாநகர சபை இணையத்தளம் - முன்னைய முதல்வர்கள்". Archived from the original on 2016-04-30. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=ச._அ._தர்மலிங்கம்&oldid=24317" இருந்து மீள்விக்கப்பட்டது