சோ. ராமேஸ்வரன்
சோ. ராமேஸ்வரன் | |
---|---|
பிறப்பு | 31-03-1950 |
பிறந்த இடம் | அனுராதபுரம், |
இலங்கை | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
சோ.ராமேஸ்வரன் (மார்ச் 31, 1950, மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். இவர் எஸ்.ராமேஷ், ஆத்தியடியூரான், ஆத்தியடி ராமேஷ், ராமேஷ், செல்வி ராமேஸ்வரன், புஷ்பா தங்கராஜா, ஆர்.பிரசன்னா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது சொந்த ஊர் மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடி ஆக இருந்தாலும் இவர் பிறந்தது அநுராதபுரத்தில்.
கல்வி
இவர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும், இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியிலும் (1995-1997) கல்வி கற்றார். 1958 ஆம் ஆண்டு ஜூன் கலவரத்தின் பின் ஒன்றரை வருடங்கள் பருத்தித்துறையில் கற்றார்.
தொழில்
இவர் வீரகேசரி, மித்திரன் பத்திரிகைகளின் வவுனியா நிருபராக 22 நவம்பர் 1971 தொடக்கம் 5 செப்டெம்பர் 1974 வரை கடமையாற்றியவர். இவர் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட “விஞ்ஞான முரசு" என்ற சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், கொழும்பு கதிர்காமத் தொண்டர் சபையின் பொருளாளராகவும் பணியாற்றியவர்.இவர் தகவல் வெளியிட்டு உத்தியோகராக ( Information and Publication officer) HARTIல 1980ல் இருந்து 2010 வரை தொழில் புரிந்தார்.
கலையுலகில்
இவர் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். நிறையவே எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், நகைச்சுவைக் கதை, நாடகம், சிறுவர் இலக்கியம் என சகல துறைகளிலும் தன் திறமையை நிரூபித்தவர். இவர் தனது 15 வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டார். இவர் எழுதிய நகைச்சுவைத் துணுக்குகள் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்த 'கண்ணன்' என்ற சிறுவர் சஞ்சிகையில் வெளியாகின. இவருக்கு தனது படைப்புக்கள் பிரசுரமாவதில் பெரும் ஆர்வம் இருந்தது. அதனால் 'கண்ணன்' இதழுக்கேற்ற கதைகளை எழுதி அனுப்பினார். அக்கதைகள் பிரசுரமாகவில்லை. ஆனாலும் மனம் தளராமல் எழுதுவதைத் தொடர்ந்தார். நகைச்சுவைத் துணுக்குகளை 'சிந்தாமணி' பத்திரிகைக்கு எழுதியனுப்பினார். அவை வெளியாகின. அவற்றில் ஒன்று பரிசுக்கும் தெரிவாகியிருந்தது. அடுத்து அவரது கவனம் சிறுகதைத் துறைக்குத் திரும்பியது. முதலில் சிறுகதையொன்றை எழுதி அதை 'வீரகேசரி வார வெளியீட்டின்' ஆசிரியராகத் திகழ்ந்த அமரர் பொன். இராஜகோபாலிடம் கையளித்தார். அவரது சிறுகதையின் பாணி பொன். இராஜகோபாலுக்குப் பிடிக்காததால் அக்கதையை மூன்று முறையாக திருப்பி, திருத்தி எழுத வைத்தார். மூன்றாவது முறை எழுதியதும் பிரசுமாகவில்லை. மனம் சலித்த ராமேஸ்வரன் அக்கதையை 'சிந்தாமணிக்கு' அனுப்பினார். அச் சிறுகதை 1969, டிசம்பர் 19ஆம் திகதி சிந்தாமணியில் பிரசுரமானது. 'அப்பா வரமாட்டார்' என்ற அச்சிறுகதையே இவரது முதற் சிறுகதை. இவை தவிர தொலைக்காட்சி நாடகங்களின் தயாரிப்பிலும் இவர் பங்காற்றியுள்ளார். இவரது முதலாவது நாவல் "யோகராணி கொழும்புக்கு போகிறாள்" 1992 இல் வெளிவந்தது. இவரது முதலாவது தொடர்கதை 'விமலா என்றொரு பெண் தெய்வம்'. இது 'மித்திரன்' பத்திரிகையில் 1972இல் 28 அத்தியாயங்களில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை இவர் 44 நூல்கள் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நூல்களின் பட்டியலில் ஏழு சிங்கள நூல்களும், இரு ஆங்கில நூல்களும் அடங்குகின்றன. மேலும் கண்நோய் பற்றி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.
மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தினால் 1996இல் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ராமேஸ்வரன் எழுதிய "வடக்கும், தெற்கும்" என்ற நாவல் முதல் பரிசு பெற்றதுடன், இதே நாவல் அரச கரும மொழிகள் திணைக்களம் இன ஐக்கியத்தையும், மொழி வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு அகில இலங்கைரீதியில் ஏற்பாடு செய்திருந்த போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது. அத்துடன் இவர் எழுதிய "திசை மாறிய பாதைகள்" என்ற சிறுவர் நவீனம் 1998 இலும், 'வாழ நினைத்தால் வாழலாம்" என்ற சிறுவர் நவீனம் 2005 இலும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய போட்டியில் முதற் பரிசுகளைப் பெற்றன. தமிழ் இலக்கிய உலகுக்கு இவர் நல்கிய பங்களிப்பினைக் கௌரவப்படுத்துமுகமாக 15 டிசம்பர், 2012 இல் இவருக்கு 'கலாபூஷணம்' என்ற பட்டத்தை இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. இது தொடர்பான விழா கொழும்பு ஜோன் டீ சில்வா அரங்கில் நடைபெற்ற போது அவருக்கு விருதும், சான்றுப்பத்திரமும் வழங்கப்பட்டன. 1998இல் அமைச்சுக்கிடையிலான அரச உத்தியோகத்தர்களின் ஆக்கப் படைப்புக்களில் இவர் எழுதிய "நியாயம், தர்மம்.." என்ற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது.
1994 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களினுள் ராமேஸ்வரன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகள் சர்வதேசரீதியிலும், இலங்கையிலும் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்பது கதைகளைத் தொகுத்து "முகவரியைத் தேடுகிறார்கள்" என்ற மகுடத்தில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கு 2005ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டல விருது கிட்டியது. அத்துடன் இவர் எழுதி வெளியிட்ட "கானல் நீர் கங்கையாகின்றது" என்ற நாடகம் 2006இல் சாகித்திய மண்டல விருதைப் பெற்றுள்ளது.
வவுனியாவில் வாழ்ந்த போது ராமேஸ்வரன் மூன்று நாடகங்களைமேடையேற்றினார். நாடகங்களின் கதை, வசனம், இயக்கம்,தயாரிப்பு என முக்கிய பொறுப்புக்களை சுமந்த ராமேஸ்வரன், தனதுஒரேயொரு நாடகத்திலேயே நடித்திருக்கிறார். மூன்றுமே முழு நீளநகைச்சுவை நாடகங்களாகும்.
இவற்றில் “சிங்கப்பூர் மாமா" என்ற நாடகம் முதல் தடவையாகவவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயக் கட்டிடநிதிக்காக வவுனியா தமிழ் மகா வித்தியாலய அரங்கில்25.9.1973இலும், இரண்டாவது தடவையாக இலங்கைக்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வவுனியா கிளை நகர சபை திறந்தவெளி அரங்கில் நடத்திய காப்புறுதி வார இறுதி நாள்கொண்டாட்டத்தில் 15.10.1973இலும் மேடையேற்றப்பட்டது. இதன் பின்னர் “மலேஷியா மாமி" என்ற நாடகம் 06.02.1974இல்வவுனியா நகர சபை திறந்த வெளி அரங்கில் மேடையேற்றப்பட்டது. ராமேஸ்வரனின் மூன்றாவது நாடகம் “ஓ! யோஜனா". இது26.03.1974இல் இதே அரங்கில் மேடையேற்றப்பட்டது. இதன்கதாநாயகனாக நடித்தவர் கல்வி அமைச்சின் மேலதிகச்செயலாளராக விளங்கிய எஸ். (உடுவை) தில்லைநடராஜா.
மேடை நாடகங்கள் மட்டுமன்றி, தொலைக்காட்சி நாடகங்களிலும்ராமேஸ்வரன் தனது பங்களிப்பினைச் செய்துள்ளார். 1992-93ஆம்ஆண்டுகளில் நான்கு தடவைகள் தேசிய தொலைக்காட்சிகளில் 22வாரங்கள் ஒளிபரப்பான “சுர அசுர" என்ற சிங்கள நாடகத்தில்ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார். அதில் ஓரிருகாட்சிகளிலும் நடித்துள்ளார். வீணா ஜயக்கொடி தமிழ்பாத்திரமொன்றை இதில் ஏற்றிருந்ததுடன், அவர் தனது சொந்தக்குரலிலேயே தமிழும் பேசினார். அத்துடன் 1994இல் “சக்தி"யில்ஒளிபரப்பான “சூரிய உதயம்" என்ற தொலைக்காட்சி நாடகத்தில்உதவி இயக்குனராகச் செயற்பட்டார். தேசிய சமாதானப்பேரவையின் தயாரிப்பில் “நண்பன்" என்ற தொலைக்காட்சிநாடகத்தில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டதுடன், ஓரிருகாட்சிகளிலும் நடித்தார். துரதிர்ஷ்டவசமாக இதுஒளிபரப்பப்படவில்லை.
விருதுகள்/பரிசுகள்/பட்டங்கள்
- வவுனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா - கமலநாயகி தமிழியல் விருது (2013)
- கலாபூஷணம் - இலங்கை அரசாங்கம் (15.12.2012)
- சாகித்திய மண்டல விருது (கானல் நீர் கங்கையாகின்றது - நாடகம் - 2007)
- அரச இலக்கிய விருதை (சாகித்திய மண்டல விருது) முகவரியைத் தேடுகிறார்கள் - சிறுகதைத் தொகுப்பு 2005
- வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (வாழ நினைத்தால் வாழலாம் - சிறுவர் இலக்கியத் துறை - 2005)
- வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (திசை மாறிய பாதைகள் - சிறுவர் இலக்கியத் துறை - 1998)
- கனடா பத்திரிகை விளம்பரம் நடத்திய குருநாவல் போட்டியில் 3வது பரிசு (யாழ்ப்பாணத்தில் ஓரு கனடா )
எழுதிய நூல்கள்
நாவல்கள்
- யோகராணி கொழும்புக்கு போகிறாள் (1992)
- இவர்களும் வாழ்கிறார்கள் (1993)
- இலட்சியப் பயணம் (1994)
- அக்கரைக்கு இக்கரைப் பச்சை (1995)
- மௌன ஓலங்கள் (1995)
- வடக்கும் தெற்கும் (1996)
- இன்றல்ல, நாளையே கலியாணம் (1996)
- சத்தியங்கள் சமாதிகளாவதில்லை (1996)
- இந்த நாடகம் அந்த மேடையில் (1997)
- உதுர சஹ தகுண (சிங்களம்) (1998)
- சிவபுரத்து சைவர்கள் (1998)
- நிலாக்கால இருள் (2000)
- சிவபுரத்து கனவுகள் (2000)
- கனகு (2003)
- மணமாலிய வீ ஹெற்ற தவஸே (சிங்களம்) (2006)
- யாழினி (2007)
- பண்டார சஹ சசி (சிங்களம்) (2008)
குறுநாவல்
- நிழல் (1998)
சிறுகதை
- "முகவரியைத் தேடுகிறார்கள்" (சிறுகதைத் தொகுப்பு)
- சுதந்திரக் காற்று (1994)
- பஞ்சம் (1995)
- நிதாஸே வா ரலி (சிங்களம்) (1996)
- புண்ணிய பூமி (1997)
- புண்ய பூமி (சிங்களம்) (1998)
- புதிய வீட்டில் (2000)
- போராட்டம் (2001)
- முகவரியைத் தேடுகிறார்கள் (2004)
- ஒரு விடியல் பொழுதில் (2006)
- திவய உதேஸா திவி புதன்னோ (சிங்களம்) (2007)
- கலாசார விலங்குகள் (2008)
நாடகம்
- கானல் நீர் கங்கையாகின்றது (2006)
- கறுப்பும் வெள்ளையும் (2008)
சிறுவர் இலக்கியம்
- படித்து மகிழ பயன்மிகு பத்துக் கதைகள் (1997)
- திசை மாறிய பாதைகள் (நவீனம்) (1998)
- சதியை வென்ற சாதுரியம் (2001)
- அந்த அழகான பனை (2002)
- வாழ நினைத்தால் வாழலாம் (2005)
- மவ ரக்ககென் வீர புத்தா (சிங்களம்) (2006)
- தாயைக் காத்த தனயன் (2007)
மொழிபெயர்ப்பு - ஆங்கிலம்/தமிழ்
- துயரத்தில் வருந்துவது ஏன்?
- ஆரோக்கியமான கண்கள் செயற்பாட்டு நூல்
வெளி இணைப்புகள்
- சுதந்திரக் காற்று நூலகம் திட்டத்தில்
- https://thaiveedu.com/magazine/index.php/158-ராமேஸ்வரன்-சோமசுந்தரம்.html