சி. பன்னீர் செல்வம்
சி. பன்னீர் செல்வம் (எழுத்தாளர்) | |
---|---|
முழுப்பெயர் | சின்னச்சாமி |
பன்னீர் செல்வம் | |
பிறப்பு | 13-10-1948 |
பிறந்த இடம் | புதுக்கோட்டை, |
தமிழ்நாடு | |
அறியப்படுவது | எழுத்தாளர் |
கல்வி | கண்டி / உடிஸ்பத்துவை |
அரசினர் முஸ்லிம் | |
கலவன் வித்தியாலயம் | |
பெற்றோர் | சின்னச்சாமி |
கருப்பாயி | |
அம்மாள் |
சின்னச்சாமி பன்னீர் செல்வம்(பிறப்பு: அக்டோபர் 13, 1948 இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய மலையக எழுத்தாளர்களில் ஒருவராவார். தற்போது தமிழ்நாட்டில் வசித்து வருகின்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
சின்னச்சாமி - கருப்பாயி அம்மாள் தம்பதியினரின் புதல்வராக இந்தியாவில் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் (அன்றைய தஞ்சை மாவட்டம்), குளமங்கலம் கிராமத்தில் பன்னீர் செல்வம் பிறந்தார். 1948ம் ஆண்டில் கைக்குழந்தையாக பெற்றோரால் இலங்கை மலைநாட்டின் தலைநகரான கண்டி, மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட இவர் தனது இருபத்தைந்து வயதுவரை இலங்கையிலே வசித்தார். பின்பு 1973ம் ஆண்டு ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழ்நாடு திரும்பி தற்போது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் தனது குடும்பத்தினருடன் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.
அரசியல் விஞ்ஞானத்தில் முதுமாணிப்பட்டம் (M.A) பெற்றுள்ள பன்னீர் செல்வம் தனது ஆரம்பக்கல்வியை கண்டி / உடிஸ்பத்துவை அரசினர் முஸ்லிம் கலவன் வித்தியாலயத்தில் கற்றார். இந்தியாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றார். மக்கள் கண்காணிப்பகத்தின் பத்திரிகை, மற்றும் நூல்கள் வெளியீட்டுத் துறையின் (தனியார்) செயலாளராகப் பணியாற்றும் இவர் ருக்மணிதேவியின் கணவராவார். இத்தம்பதியினருக்கு ஜெகன், விமல் ஆகிய இரண்டு பிள்ளைகள் உளர்.
இலக்கியத்துறையில்
1964ம் ஆண்டில் கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபடத் தொடங்கிய இவரின் முதல் ஆக்கம் இலங்கை சாகித்திய மண்டல சிறுகதைப்போட்டியில் முதற்பரிசாக பொற்பதக்கம் வென்று 1965ம் ஆண்டு 'தாயின் மடியில்' எனும் தலைப்பில் 'வீரகேசரி' பத்திரிகையில் இடம்பெற்றது. வான் அலைகளில் இவரது முதலாவது ஆக்கம் 1970ம் ஆண்டு இலங்கை வானொலியில் ஒலித்தது. இதுவரை 75 சிறுகதைகளையும், 60 கவிதைகளையும், 20 கட்டுரைகளையும், 2 குறுநாவல்களையும், 2 நாடகங்களையும், 1 நாவலையும் எழுதியுள்ளார்.அச்சில் வராத பல சிறுகதைகளும், இரண்டு நாவல்களும், மலையக மக்கள் வாழ்வை மையமாகக் கொண்ட காவியமும் கைவசமுள்ளன.
இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையில் வீரகேசரி, செய்தி, அஞ்சலி, சுதந்திரன், குன்றின்குரல், மித்திரன், தேசாபிமாணி போன்ற பத்திரிகைகளிலும், வானொலியிலும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், சாவி, ராணி, அமுதசுரபி, கலைமகள், தினமணி, ரத்னபாலா, தாமரை உள்ளிட்ட சுமார் 35க்கும் மேற்பட்ட பத்திரிகைகளிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வென்றுள்ள பரிசில்கள்
- 1965ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலம் நடத்திய மாணவர்களுக்கான சிறுகதைப்போட்டியில் முதல் பரிசான 'தங்கம்'
- 1968ம் ஆண்டில் இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டியில் முதலாமிடம்.
- 'வீரகேசரி' பத்திரிகை அகில இலங்கை ரீதியில் நடத்திய மலைநாட்டு சிறுகதைப் போட்டியில் 1967ம் ஆண்டிலும் 1970ம் ஆண்டிலும் பரிசு.
- 1971ம் ஆண்டிலும் சாகித்திய மண்டல சிறுகதைப் போட்டியில் முதலிடம்.
* சிறுகதைகளுக்கான பரிசில்கள், பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (1990)Association of Tamil Writers in Europe 'தனிநாயகம் அடிகளார்' நினைவாக அகில உலக ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலாமிடம்
அதேபோல குங்குமம், தினமணிக்கதிர், ராணி, ஆனந்தவிகடன், அமுதசுரபி,ரத்னபால உள்ளிட்ட பத்திரிகைகளினால் அவவப்போது நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளின் போதும் பரிசு.
* நாடகத்துறைக்கான பரிசு:- தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றப் பரிசுகள். வானொலி நாடகப் பரிசுகள்.
குறுநாவலுக்கான பரிசுகள்:- சாவி, சுபமங்களா ஆகிய இதழ்கள் நடத்திய குறுநாவல் போட்டிகளின் பரிசுகள்.
கவிதைக்கான பரிசுகள்:- இலண்டன் 'சுடரொளி' வெளியீட்டுக் கழகம் நடத்திய இரண்டாவது உலகக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு, பல சிற்றிதழ்கள், ஆண்டு மலர்களின் பரிசுகள்.
நாவல் கி.வா.ஜ. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இந்தியாவில் முன்னணி இலக்கியச் சஞ்சிகைகளில் ஒன்றான 'கலைமகள்' நடத்திய நாவல் போட்டியில் இவரால் எழுதப்பட்ட நாவலான 'விரல்கள்|' முதல் பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டது.
தொகுப்பு நூல்கள்
இவரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ள தொகுப்பு நூல்களை பின்வருமாறு
- இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் (முதல் தொகுதி - வெள்ளிப்பாதரசம்)
- மலையகச் சிறுகதைகள்
- கதைக் கனிகள் (சிறுகதைத் தொகுதி)
- பசி (இலக்கியச் சிந்தனை வெளியீடு)
- சுதந்திரன் சிறுகதைகள்
- Dream Boat ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் இரண்டு கதைகள்.
- கீழைநாட்டு கவிதை மஞ்சரி
- எங்கெங்கும் அன்னியமாக்கப்பட்டவர்கள்
- பொன்விடியல் (ஆய்வு நூல்கள்)
- புதுயுகத் தமிழர் (கவிதைத் தொகுதி)
நூல்கள்
இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- திறந்த வெளிச் சிறைகள் (சிறுகதைத் தொகுதி)
- ஒரு சாலையின் சரிதம் (கவிதைத் தொகுதி)
மனித உரிமைக் கங்காணி
'திண்டுக்கல் இலக்கிய வீதி' என்ற அமைப்பை உருவாக்கி மாத இதழொன்றை வெளியிட்டார். ஆனால், பல காரணங்களினால் அம்முயற்சி தொடரவில்லை. தற்போது 'மனித உரிமைக் கங்காணி' மாத இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார்.