சி. கே. சுப்பிரமணிய முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. கே. சுப்பிரமணிய முதலியார்
சி. கே. சுப்பிரமணிய முதலியார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சி. கே. சுப்பிரமணிய முதலியார்
பிறந்ததிகதி (1878-02-20)20 பெப்ரவரி 1878
பிறந்தஇடம் கோவை
இறப்பு சனவரி 24, 1961(1961-01-24) (அகவை 82)
பணி வழக்கறிஞர்
கல்வி கோவை அரசினர் உயர்நிலைப் பள்ளி, அரசினர் இடைநிலைக் கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி (தமிழ், இளங்கலை)
அறியப்படுவது பெரிய புராணத்திற்கு உரை எழுதியவர்
பெற்றோர் கந்தசாமி முதலியார், வடிவம்மையார்
துணைவர் மீனாட்சி கனகசபை, மீனாட்சி

சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் (20 பெப்ரவரி 1878 – 24 சனவரி 1961), தமிழறிஞரும், வழக்கறிஞரும் ஆவார். பெரிய புராணத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர். சிவக்கவிமணி [1]என்று அறிஞர்களால் போற்றப்பட்ட இவர் கோவை நகர்க்கனி, சைவக் குலமணி, வித்துவமணி, திருத்தொண்டர் புராணமணி, சேக்கிழார்செய் சேவையினை மக்களுணர்ந் துய்யவழி காட்டுமணி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

தொடக்கக் கல்வி

இவரது பெற்றோர் கந்தசாமி முதலியார் – வடிவம்மையார் ஆவர். சி.கே.சுப்பிரமணிய முதலியார் தனது இளவயதில் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்திலிருந்து கோவைக்குக் குடிபெயர்ந்த வைத்தியலிங்கம் ஆசிரியர் என்பவரிடம் பயின்றார். மேலும் கோவை அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். கல்லூரிக் கல்வியை அரசினர் இடைநிலைக் கலைக் கல்லூரியிலும் பயின்றார். பயின்ற காலத்தில் எல்லா வகுப்புகளிலும் முதல் மாணவராக விளங்கினார். இவருடன் பயின்றவர் டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார் ஆகியோர் ஆவர்.

குரு பக்தியும் பெரிய புராண ஈடுபாடும்

சிறந்த தமிழ் இலக்கணக் கல்வியை, சிவஞான முனிவரிடம் பயின்ற பரம்பரையைச் சேர்ந்த, திருச்சிற்றம்பலம் பிள்ளையிடமிருந்து பெற்றார். சிவஞான முனிவர் கச்சியப்ப முனிவருக்கும், கச்சியப்பர் -  கந்தப்பையருக்கும், கந்தப்பையர் – சரவணப் பெருமாளையருக்கும், சரவணப் பெருமாளையர் – சந்திரசேகரம் பிள்ளைக்கும், சந்திரசேகரன் பிள்ளை –கந்தசாமி முதலியாருக்கும், கந்தசாமி முதலியார் – திருச்சிற்றம்பலம் பிள்ளைக்கும் தமிழிலக்கணம் புகட்டிய சிறப்புக்குரிய ஆசிரிய சீட பரம்பரை உடையவர்கள். சிவக்கவிமணி 1894 முதல் 1906 வரையிலும் திருச்சிற்றம்பலம் பிள்ளையிடம் தமிழ் இலக்கண நுட்பங்களைக் கற்றார். ‘சேக்கிழார்’ என்னும் தலைப்பிலமைந்த தன் நூலில் “எனது மூதாதையர்கள் செய்த சிவபுண்ணியங்கள் காரணமாக எனக்கு வாய்த்த நற்றமிழாசிரியரான பண்டித ச. திருச்சிற்றம்பலம் பிள்ளையவர்கள் காற்கீழிருந்து இலக்கண இலக்கியங்கள் கற்கப் புகுந்த இளம்பிராயத்திற்றானே, அவரது பேருபகாரத்தின் பயனாகப் பெரிய புராணத்திலே என்னை அறியாமலேயே எனக்கு ஓர் ஆசையும் அன்பும் அற்புதமும் தோன்றி மேன்மேல் வளர்ந்து வருவதாயிற்று” (ப.3) என்று தனது குருவின் சிறப்பினையும், கற்பித்தல் திறனையும், பெரியபுராண ஈடுபாடு தோன்றியதற்கான காரணத்தையும் பதிவு செய்துள்ளார். அவரிடத்து மட்டுமின்றி, தில்லைச் சிவஞான தனிவாழ்வடிகள், இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான் ஆகியோரிடத்தும் இவர் பாடம் பயின்றவர் என்று திருத்துறையூர் கு.ஆறுமுக நாயனார் குறிப்பிடுகிறார்.

மேற்கல்வி

சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் மேற்படிப்புக்குச் சேர்ந்தார். அவ்வகுப்பில் தமிழில் சென்னை மாநிலத்தில் முதல் மாணவராகவும் வெற்றி பெற்றார். இவ்வெற்றிக்குப் பாராட்டாக இவருக்கு, ‘பிராங்கிளின்’ பொற்பதக்கம் அளிக்கப் பெற்றது. கல்வியில் மட்டுமின்றி மொழிபெயர்ப்பு, செய்யுள் யாத்தல், கட்டுரை வரைதல் உள்ளிட்ட பல திறன்  போட்டிகளிலும் பணப்பரிசுகளை வென்றுள்ளார்.

இல்லற வாழ்வு

சிவக்கவிமணி சென்னையில் இளங்கலைப் படிப்பு மேற்கொண்டிருந்த வேளையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கங்கைவல்லிப் பெருஞ்செல்வராக விளங்கிய கனகசபை முதலியாரின் மகள் மீனாட்சியம்மையைத் திருமணம் செய்து கொண்டார். இவர் இடைக்கல்லூரியில் பயின்ற காலத்திலேயே இவரது தந்தையார் மறைந்து விட்டார். இவரது திருமணத்தின் பின்னர் ஒருமாத காலத்திலேயே தாயாரும் மறைந்து விட்டார். இதனால் குடும்பப் பொறுப்பு முழுவதையும் இவரே கவனிக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி, தாயாரின் தமக்கையாரான கரூர் மீனாம்பாள் குடும்பத்தையும் இவரே பேணிக்காக்க வேண்டிய பொறுப்புக்கும் உள்ளானார். இவருடைய மனைவியார் மீனாட்சியம்மை தான தருமங்களில் சிறந்து விளங்கினார் என்றாலும் இளவயதிலேயே இயற்கை எய்தினார். அதன்பின்னர் சிவக்கவிமணி மீனாட்சியம்மையின் உறவினராகிய மீனாட்சி என்பவரை மணந்து கொண்டார். இவருக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

வழக்கறிஞர் தொழில்

சிவக்கவிமணி தன் தந்தையாரைப் போலவே சட்டம் பயின்று தேறி வழக்கறிஞரானார். பல்வேறு வழக்குகளில் வெற்றியும் கண்டுள்ளார். பொள்ளாச்சி வட்டத்திலுள்ள தென்சித்தூர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இவர்களுக்கான குலதெய்வக் கோயிலாகும். இக்கோயில் தொடர்பான ஒரு வழக்கில் சிவக்கவிமணி வெற்றி பெற்றுத் தந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்ற வ. உ. சிதம்பரம் பிள்ளை கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலத்தின்போது சிறைக்காவலர் அவர்மீது மேற்கொண்ட கொடுமைகளைக் கண்டு போராட்டக் கைதிகள் அவரைத் தாக்க முற்பட்டனர். இதனால் அவர்கள் தண்டனைக்கு உள்ளாயினர். அவர்களுக்காக வாதாடுவதற்கு வ.உ.சி. சிவக்கவிமணி உள்ளிட்ட ஒரு வழக்கறிஞர் குழுவை நியமித்தார். இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது சுயசரிதையில் (ப.125) குறிப்பிட்டுள்ளார். இதனைக் குறித்த அவருடைய கடிதச் சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

விடுதலைப் போராட்டத் தொடர்பு

வ.உ.சி.யும் சிவக்கவிமணியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் விடுதலைப் போராட்ட காலத்தின் நடவடிக்கைகள் குறித்து இருவருக்கும் தொடர்பு இருக்கும் என்று ஆங்கில அரசு ஐயமும் அச்சமும் கொண்டிருந்தது. இந்த வேளையில் ஆஷ் துரை கொலை வழக்கில் சிறைப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரி தனக்கு சிவக்கவிமணி முன்னர் செய்த உதவிகளைக் காவல்துறையில் தெரிவிக்க நேரிட்டது. இதனால் ஆங்கில அரசு சிவக்கவிமணியின் வீட்டைச் சோதனையிட்டது. ஆனால் சிவக்கவிமணியின் அரசியல் தொடர்பான கடிதங்களையும் தகவல் பதிவுகளையும் முன்னரேயே அவருடைய மனைவியர் தீயிட்டு எரித்து விட்டார். இதனால் அவர் தப்பித்தார். வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலையான பின்னர் தனக்கு உதவி செய்த சிவக்கவிமணிக்கு நன்றி செலுத்துவதற்காகக் கோவைக்குக் குடும்பத்துடன் சென்றிருக்கிறார். இதனை, வ.உ.சி.யின் பிள்ளைகள் அவருடைய சுயசரிதையின் பின்னுரையில் (ப.155) குறிப்பிட்டுள்ளனர்.

வ.உ.சி.யின் நன்றியறிதல்

சிவக்கவிமணி தனக்கு உதவியதைப் பெரிதும் போற்றிய வ.உ.சிதம்பரனார் அதனைப் புலப்படுத்தும் விதமாக, தன்னுடைய இரண்டாவது மகனுக்கு சுப்பிரமணியன் என்ற பெயரையும் தன்னுடைய புதல்விக்கு சிவக்கவிமணியின் மனைவியான மீனாட்சியின் பெயரையும் சூட்டினார். வ.உ.சி.சுப்பிரமணியன் பின்னாளில் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

படைத்துள்ள நூல்கள்

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வகையில் அயராது உழைத்த சிவக்கவிமணி பல நூல்களை இயற்றித் தந்துள்ளார். அவற்றுள்,

செய்யுள் நூல்கள்

  • திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்
  • கந்தபுராணப் போற்றிக் கலி வெண்பா
  • திருப்பேரூர் இரட்டை மணிமாலை
  • மருதங்கோவை

உரைநடை நூல்கள்

  • நீத்தார் பெருமை அல்லது ஸ்ரீமாணிக்கவாசகர்
  • வாகீசர் அல்லது மெய்யுணர்தல்
  • கருவூர்த் தேவர்
  • சேக்கிழார்
  • சேக்கிழாரும் சேயிழையார்களும்
  • செம்மணித் திரள்
  • அர்த்தநாரீசுவரர் அல்லது மாதிருக்கும் பாதியான்
  • திருத்தொண்ட புராணத்துள் முருகன்

சிவக்கவிமணி பதினோராம் திருமுறையில் சில நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவை,

  • க்ஷேத்திர திருவெண்பா (பதினோரம் திருமுறை)
  • பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை)

பெரிய புராண உரை

சிவக்கவிமணியின் பெரிய புராணப் பேருரை 1935ஆம் ஆண்டு முதல் இதழ்களாக வெளிவரத் தொடங்கியது. முதல் இதழ் 05.06.1935இல் சேக்கிழார் திருநாளன்று தில்லையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. ‘சிவக்கவிமணி அவர்களின் பெரியபுராணம் பேருரை, உயர்ந்த காகிதத்தில், 160 பக்கங்கள் கொண்டுள்ளது. நாற்பத்து நாலு சஞ்சிகைகளையும், ஆசிரியர் ஏழு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டுள்ளார். கடந்த பத்தொன்பது ஆண்டுகளாகச் சிவக்கவிமணி அவர்கள் இப்பேருரை ஈடுபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்’ எனப் பூ. ஆலால சுந்தரம் கல்கி இதழில் (05.06.1954) பதிவு செய்துள்ளார்.

திருத்தொண்டர் புராணப் பேருரையைத் தொகுத்து விரி/வரையாக்கிய சிவக்கவிமணி, பின்னாளில் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனைச் சுருக்கியும் எழுதித் தந்தார். அவை சிறு சிறு நூல்களாகப் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றில் திருவருட் செல்வரின் சரிதமும் கற்பனையும் என்னும் நூல் முதல் பகுதியாக வெளிவந்தது.

உரைச்சிறப்பு

முதன்முதலில் பெரியபுராணம் முழுமைக்குமான உரை கண்டவர் என்னும் பெருமைக்குரியவர் சிவக்கவிமணியேயாவார். இவருடைய படைப்புகளில் மிகச்சிறந்ததாகப் போற்றப்படுவது பெரிய புராண உரையே என்பது அறிஞர்களின் கருத்தாகும்.இதனை,

போற்றுந்திருத் தொண்டர் புராணத்தின் பேருரையை
வேற்றுமை இன்றி விரித்துரைத்தான் நீற்றணிசெய்
கோவையுறை சுப்ரமணிக் கோமான் குறுமுனியாத்
தேவைநிகர் அண்ணல் சிறந்து

என்று திருமுருக கிருபானந்த வாரியார் சிறப்பித்துப் பாடுகிறார்.

திருத்தொண்டர் புராணத்திற்கு அரும்பத உரையும் குறிப்புரையும் மட்டும் வெளிவந்திருந்த நாளில் ஆறுமுக நாவலரால் எழுதப்பட்ட உரை காரைக்கால் அம்மையார் புராணம் வரை மட்டுமே கிடைத்த நிலையில் பெரிய புராணம் முழுமைக்கும் உரை எழுதிய பெருமைக்குரியவர் சிவக்கவிமணி என்று செட்டிநாடு இதழ் (29.04.1954) சுட்டிக்காட்டுகிறது.

பெரியபுராண உரைப்பணித் தொடக்கம்

சிவக்கவிமணி 1917இல் முறையான பெரியபுராண வாசிப்பைத் தொடங்கினார். 1918இல் திருப்பேரூரில் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவிற்குத் தலைமைப் பொறுப்பேற்ற கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் பொழிந்த பெரிய புராண உரையைக் கேட்க நேரிட்டது. அதனைத் தொடர்ந்து அவரிடமே கோவையில் தங்கியிருந்து நேர்முகமாகப் பெரியபுராண விளக்கம் கேட்டுப் பயின்றதோடு பெரியபுராணக் கையேடு படிக்கவும் செய்து வந்தார். அவ்வேளையில் அவர் எடுத்துக் கொண்ட அருங்குறிப்புகளே பின்னாளில் விரிவான அளவில் பெரியபுராண உரை எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது.

பிற பணிகள்

சி. கே. சுப்பிரமணிய முதலியார் 1922 முதல் 1925 வரை கோவை நகரசபை உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1926 முதல் 1929 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி ஆணையாளராகவும் பணியாற்றினார். தூத்துக்குடி சித்தாந்த சபையின் தலைவராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்.

பட்டங்கள்

  • சிவக்கவிமணி - சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், 1940
  • திருமுறை ஞான பாநு - மதுரை ஆதீனம், 1954

தன்வரலாறு

சிவக்கவிமணி தன் வரலாற்றை ‘ஒரு பித்தனின் சுயசரிதம்’ என்னும் தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார். இந்நூல் 270 பக்கங்களில் கையெழுத்துப் பிரதியாக உள்ளது. இதுவரையிலும் அச்சாகவில்லை. இந்நூல் அவரால் 1956ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

மறைவு

சிவக்கவிமணி 1961ஆம் ஆண்டு சனவரி 24ஆம் நாள் தை மாதம் செவ்வாய்க்கிழமை பரணி நாளில் தன் 83ஆம் அகவையில் திருப்பேரூரில் காலமானார்.

மேற்கோள்கள்

  • சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார், பதிப்பாசிரியர்கள் - முனைவர் சா.கிருட்டின மூர்த்தி, முனைவர் ச. சிவகாமி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு - 2004