சி. எஸ். ராவ்
சித்தஜல்லு சீனிவாச ராவ் (1924 - 8 டிசம்பர் 2004) ஓர் இந்திய நடிகரும், எழுத்தாளரும் மற்றும் இயக்குனரும் ஆவார். [1] இவர் திரைப்பட இயக்குனர் சித்தஜல்லு புல்லையாவின் மகன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒரியா மொழிகளில் 65 படங்களை இயக்கியுள்ளார். [2] [3] லவகுசா (1963) மற்றும் தேசமன்டே மனுஷுலோயி (1970) ஆகிய படங்களை இயக்கியதற்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். முக்தா சீனிவாசன், கே. எஸ். சேதுமாதவன் உள்ளிட்ட இயக்குநர்கள் இவரிடம் உதவியாளர்களாக பணியாற்றினர். [4]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரியில் உள்ள காக்கிநாடாவில் 1924 இல் பிறந்தார். இவர் குழந்தை நடிகராக திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தந்தை சித்தஜல்லு புல்லையா இயக்கத்தில் 1936 இல் வெளியான அனுசுயா மற்றும் துருவா என்ற இரண்டு படங்களில் தோன்றினார். பின்னர் ஒளிப்பதிவாளர் கே. ராம்நாத், கலை இயக்குனர் வி. ஏ. கே.சேகர் மற்றும் உதய் சங்கர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டு பக்கிண்டி அம்மாயி திரைப்படத்தில் நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார்.
இவர் பொன்னி (1953) என்ற தமிழ்த்திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் (1955) என்ற படத்துடன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒரியா மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கியுள்ளார். லவ குசா (1963), மஞ்சி மனசுக்கு மஞ்சி ரோஜுலு (1958), சாந்தினிவாசம் (1960), அபிமானம் (1960), டைகர் ராமுடு (1962), வால்மீகி (1963), கஞ்சு கோட்டா (1967), கோவுலா கோபண்ணா (1968) , ஏகவீர (1969), ஜீவிதா சக்ரம் (1971), ஸ்ரீ கிருஷ்ணாஞ்சநேய யுத்தம் (1972), தனமா? தெய்வமா? (1973), யசோதா கிருஷ்ணா (1975), மற்றும் மகாகவி க்ஷேத்ரய்யா (1976). ஆகியவை இவரது பிரபலமான தெலுங்கு திரைப்படங்கள். பெல்லி சந்ததி (1959), இண்ட்லோ ராமையா வீதிலோ கிருஷ்ணய்யா (1982), ஜேபுதொங்கா (1987), மற்றும் கோகிலா (1989) உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவர் நடித்தார்.
சொந்த வாழ்க்கை
கண்ணாம்பா மற்றும் கடாரு நாகபூஷணம் ஆகியோரின் மகளை மணந்தார். தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, இவர் நடனக் கலைஞரும் நடிகையுமான ராஜசுலோச்சனாவைக் காதலித்து மணந்தார். இவர்களுக்கு திருமணமாகி இரட்டை மகள்கள் இருந்தனர். சி. எஸ். ராவ் 8 டிசம்பர் 2004 அன்று சென்னையில் இறந்தார்.