சின்னத்தம்பி ரவீந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சின்னத்தம்பி ரவீந்திரன்
சின்னத்தம்பி ரவீந்திரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சின்னத்தம்பி ரவீந்திரன்
பிறந்ததிகதி அக்டோபர் 25, 1953
பிறந்தஇடம் சாவகச்சேரி
தேசியம் இலங்கைத் தமிழர்
பெற்றோர் வ. சின்னத்தம்பி, சீ. றோசம்மா

சின்னத்தம்பி ரவீந்திரன் (', பிறப்பு: அக்டோபர் 25, 1953) வதிரி. சி. ரவீந்திரன், வானம்பாடி, குளைக்காட்டான் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஓர் இலங்கை எழுத்தாளராவார்.

வாழ்க்கைக் குறிப்பு

வ. சின்னத்தம்பி, சீ. றோசம்மா தம்பதியினரின் புதல்வராக வடமாகாணத்தைச் சேர்ந்த சாவகச்சேரியில் பிறந்த ரவீந்திரன் தனது கல்வியினை யா/சாவக்கச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின்பு யாழ்/ வதிரி-வடக்கு மெ.மி. பாடசாலை, யா/கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார். இவரின் மனைவி சிவராணி. பிள்ளைகள் சஞ்சயன், சிவானுஜா, குபேரன், ஆதவன் ஆகியோராவர்.

தொழில் முயற்சிகள்

ஆரம்ப காலங்களில் காவல்துறையில் பணியாற்றிய இவர், பின்பு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது கொழும்பு மாவட்டத் திருமணப் பதிவாளராகச் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இலக்கிய ஈடுபாடு

இவரின் கன்னியாக்கம் 1969ஆம் ஆண்டில் ‘பூம்பொழில்’ எனும் சஞ்சிகையில் ‘எங்கள் எதிர்காலம்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 150இற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 3 சிறுகதைகளையும், 40இற்கும் மேற்பட்ட நேர்காணல்களையும், 200இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

எழுதியுள்ள ஊடகங்கள்

  • இலங்கை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளான பூம்பொழில், நான், மல்லிகை, ஞானம், ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், தினகரன், தினபதி, சிந்தாமணி, தினமுரசு, நமது ஈழநாடு
  • இந்திய சஞ்சிகைகளான பொறிகள், அக்னி, சுவடுகள், ஏன்
  • இலங்கை வானொலியில் ஒலிமஞ்சரி, வாலிபவட்டம், கலைப்பூங்கா, பாவளம், வானொலிக் கவியரங்குகள்
  • இலங்கை ரூபவாஹினியில் உதயதரிசனம், நான்காவது பரிமாணம்

நேர்காணல்கள்

ரவீந்திரனின் எழுத்துத்துறைப் பங்களிப்பில் இவரால் மேற்கொள்ளப்படும் நேர்காணல்கள் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றன. இலங்கையிலுள்ள கலைத்துறை, அரசியல் துறை சார்ந்த பல முக்கிய பிரமுகர்களை இவர் நேர்கண்டு எழுதியுள்ளார். குறிப்பாக இலங்கையின் பிரபல பாடகரான மொஹிதீன்பேக் அவர்கள் மரணிப்பதற்கு முன் இறுதி நேர்காணலை எழுதியவரும் இவரே.

வெளிவந்த நூல்

  • மீண்டு வந்த நாட்கள் (கவிதைத் தொகுப்பு), 2011, வெளியீடு-எஸ். கொடகே சகோதரர்கள்

நாடகத்துறை

இளைஞர் பராயத்தில் இவர் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டிருந்தார். கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளையின் ‘சாஸ்திரியார் (1968)' நாடகத்திலும், இளவரசு ஆழ்வாப்பிள்ளையின் ‘காலவாவி’ நாடகத்திலும், கோவிநேசனின் ‘நவீன சித்திரபுத்திரன்’ நாடகத்திலும் நடித்துள்ளார். கலாவினோதன் பே. அண்ணாசாமியின் நாடகப் பட்டறையிலும் இணைந்து செயல்பட்டுள்ளார். இவரின் தொழில்துறை நிமித்தமாக நாடகத்துறையில் தொடர்ந்தும் ஈடுபாடுகொள்ள முடியாவிடினும் கூடத் தற்போது நாடக விமர்சகராக இவர் திகழ்கின்றார்.

தேசிய நாடகவிழாவில்

2006ஆம் ஆண்டில் தேசிய நாடகவிழாவில் நடுவர்களில் ஒருவராக இவர் பணியாற்றியுள்ளார். இலங்கைக் கலைக் கழகத்தின் தேசிய நாடகசபை உறுப்பினராக 2006ஆம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகின்றார்.

வெளி இணைப்புகள்