சாருகேசி (எழுத்தாளர்)
சாருகேசி என்ற புனைபெயரைக் கொண்ட எஸ். விஸ்வநாதன் (1938 - சனவரி 30, 2019) தமிழக எழுத்தாளரும், இசை விமர்சகரும் ஆவார். பிரபலமான வார, மாத இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கீத, நாட்டிய, நாடக விமர்சனங்கள் எழுதி வந்தார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
சாருகேசியின் இயற்பெயர் சுப்பிரமணியன் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்தார். எழுத்தாளர் எழுத்தாளர் தேவனின் உறவினர்.[1] இவரது முதல் கட்டுரை 1955 ‘கண்ணன்’ இதழில் வெளியானது.[1] முதல் சிறுகதை 1960 இல் கல்கி இதழில் வெளியானது.[1] அகமதாபாதில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பின்னர் சென்னை திரும்பி இந்து, வீக்எண்ட் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்சு போன்ற நாளிதழ்களில் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார்.[1] சுதா மூர்த்தியின் மூன்று ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்.[1]
பின்னாட்களில் தனது கர்நாடக இசை அறிவைப் பெருக்கிக் கொண்டார். 1980-களில் சமூக ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர் என பலர்காணல்களை கல்கியில் எழுதினார்.[2] உலக மாமியார்களே ஒன்று சேருங்கள் என்ற இவரது சிறுகதை கல்கியில் முதல்பரிசை வென்றது.[2] 28 இளம் கலைஞர்களின் நேர்காணல்கள் 'இயல் இசை நாடகம்' என்ற பெயரிலேயே நூலாக வெளிவந்தது.[1]
சமூகப் பணி
புத்தக நண்பர்கள் சங்கத்தில் இவரது பங்களிப்பு முக்கியமானது. தேவன் அறக்கட்டளையிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தார்.[1]
மறைவு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில்[1] சாருகேசி சென்னையில் அபிராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 2019 சனவரி 30 இல் தனது 80-வது அகவையில் காலமானார்.[2] இவர் திருமணம் செய்யாதவர். இவருக்கு 4 சகோதரிகள், 2 சகோதரர்கள் உள்ளனர். மஞ்சரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய லெமன் என்கிற லெட்சுமணன் இவரது மூத்த சகோதரர்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "மூத்த எழுத்தாளர் சாருகேசி காலமானார்". இந்து தமிழ். 30 சனவரி 2019. https://tamil.thehindu.com/tamilnadu/article26127302.ece. பார்த்த நாள்: 31-01-2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "காலமானார் எழுத்தாளர் சாருகேசி...". தினமணி. 30 சனவரி 2019. https://www.dinamani.com/tamilnadu/2019/jan/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-3086221.html. பார்த்த நாள்: 31-01-2019.
- ↑ "இசைவிமர்சகரும் இதழாளருமான சாருகேசி காலமானார்". தினசரி. 30 சனவரி 2019. https://dhinasari.com/local-news/chennai-news/69843-writer-charukesi-passed-away-today-morning.html. பார்த்த நாள்: 31-01-2019.