சவரிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சவரிராயர்  (20 சனவரி 1859 - 24 ஆகத்து 1923) தமிழ் அறிஞரும் மொழி ஆராய்ச்சியாளரும் ஆவார். தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், இலத்தின் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் பண்டிதர் சவரிராயர் என அறியப்பட்டார்.

இளமைக் காலம்

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில் பிறந்தார். இவர் தந்தை தேவசகாயம் ஒரு மருத்துவர் தாய் ஞானப்பிரகாசி அம்மாள். கொப்பன்பட்டியைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் செபாசுத்தியன் பிள்ளையிடம் தமிழ் படித்தார். கொல்லம் குருமடத்தில் சேர்ந்து இலத்தின் மொழியையும் மத சாத்திரங்களையும் கற்றார். 1878 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

ஆசிரியர்ப் பணி

பண்டிதர் சவரிராயர் தம் ஆசிரியர் பணியைத் தூத்துக்குடி தூய சவேரியார் தொடக்கப் பள்ளியில் தொடங்கினார்.பின்னர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பித்தார். 1894 ஆம் ஆண்டில் திரிசிரபுர தூய சூசையப்பர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் சில ஆண்டுகளில் துறைத் தலைவராகவும் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தார்.

ஆராய்ச்சிப் பணிகள்

இந்திய நாடு,  திராவிட இந்தியா,  தமிழ் மன்னர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள தொடர்பு, ஆரியர் தமிழர் கலப்பு ஆகியன பற்றிய பல கட்டுரைகளை சவரிராயர் எழுதினார்.

தமிழ் மொழியின் தொன்மை பற்றி ஆராய்ந்தார். தமிழ்த் தொன்மை ஆராய்ச்சிக் கழகம் நிறுவினார். இந்தக் கழகத்தின் சார்பாகத் தமிழ்த் தொன்மை ஆராய்ச்சி என்ற ஆங்கில இதழை வெளியிடத் தொடங்கினார். சித்தாந்த தீபிகை போன்ற அந்தக் காலத்து ஆங்கில இதழ்களில் பல கட்டுரைகள் எழுதினார்.

தமிழில் உள்ள சொற்கள் பலவற்றை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். ஆர். சி. டட்  என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய பிழையான கருத்துக்கள் சிலவற்றை மறுத்து சவரிராயர் எழுதினார். பாரதவம்ச விளக்கம் முதலிய நூல்களை எழுதினார்.

பிற பணிகள்

  • சவேரியார் துத்துக்குடியில் வாழ்ந்த போது உழவர் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி உழவர்களின் நன்மைக்காக செயல்பட்டார்.
  • திருச்சிராப்பள்ளி நகர சபையில் இரு முறை உறுப்பினராக இருந்தார்.
  • கூட்டுறவு வங்கி ஒன்றை நிறுவினார்
  • ஏழை மாணவர்களுக்கு  பண உதவி செய்தார்.

சான்றாவணம்

டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ஆய்வு நூல்கள் தொகுதி-2, தமிழ்க்  குடியரசுப் பதிப்பகம், சேப்பாக்கம், சென்னை-600005

"https://tamilar.wiki/index.php?title=சவரிராயர்&oldid=27706" இருந்து மீள்விக்கப்பட்டது