சங்ககாலப் பந்தாட்டம்
பந்து சங்க கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சங்க கால மகளிர் பந்தாடுவதில் பெரிதும் விருப்பம் காட்டினர். பல பந்துகளை மேலே தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்க கால மகளிரின் பந்தாட்டம். (Jugglery). அப்பந்தாட்டம் பற்றி சங்கப்பாடல்களில் வரும் செய்திகள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.
பந்தின் பருமன்
ஆட்டம் தவறியபோது கீழே விழும் பந்து போல விளாம்பழம் விழுந்தது எனக் கூறப்படுவதிலிருந்து பந்தின் பருமனை உணரமுடிகிறது. [1]
பந்து வகை
வரிப்பந்து, வரிபுனை-பந்து, வரியணி-பந்து ஆகியவை பந்தாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. [2]
ஊர், இடம்
திருப்பரங்குன்றம், நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப்பட்டினம், அருவிக்கரை முதலான இடங்களில் பந்து விளையாடியது பற்றிய குறிப்புகள் உள்ளன. [3] [4]
மாடம்,[5] மணல்-முற்றம் [6][7] போன்ற இடங்களில் அவர்கள் பந்தாடினர்.
- பந்நாடும்போது குதிரையின் குளம்படிச் சத்தம்போல் ஒலி கேட்டது. [10]
- தினைக்கதிர் அறுத்த தட்டையில் அமர்ந்து எழுந்து குருவி பறப்பது ஆடும் பந்து தவ்வுவது போல் இருந்தது. [11]
- புன்னைப் பூக்கள் வண்டின் கால்பட்டு உதிர்வது பந்து தாவுவது போல் இருந்ததாம் [12]
- நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப் பட்டினத்தில் கொன்றைப்பூ பனியில் அசைவது போலவும், மயில் ஆடுவது போலவும் சிலம்பும் மேகலையும் ஒலிக்க உயர்ந்த மாடத்தின்மீது மகளிர் பந்தாடினர். [13]
- விருப்பம்
- தலைவனுடன் ஓடிப்போகும் தலைவி தன் சிலம்பைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்லும்போதும் “வரிபுனை பந்து” கொண்டுசென்றாள்.[14]
- கிளியும், பந்தும், கழங்கும் வெய்யோள் [15]
- பிறந்த வீட்டில் அவள் பந்தாடும் காட்சி இல்லையே எனத் தாய் கவலைப்பட்டாள். [16]
- பந்து, பாவை, கழங்கு ஆகியவற்றையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாளே (நற்றாய் கலக்கம்)[17][18]
- வளர்த்த வயலைக் கொடியை கன்று போட்ட பசு தின்றுவிட்டதென்று தான் விளையாடிய பந்தையும், பாவையையும் நிலத்திலே எறிந்துவிட்டு ஒரு சிறுமி வயிற்றில் அடித்துக்கொண்டான். [19]
- வளங்கெழு திருநகர் பந்து சிறிது எறியினும் (உயங்கின்று என்று அன்னையைத் தழுவுவாள்) [20]
- கொற்றவைக்குப் பாவை, கிளி, கானக்கோழி, மஞ்ஞை, பந்து, கழங்கு ஆகியவற்றைப் படையலாகத் தந்து பரசினர். [21]
- பூப்பந்து
- இலையோடு கூடிய பூக்களைச் சுருட்டிக் கட்டிச் செய்த பூப்பந்து எறிதல் ஒருவகைத் திளைப்பு விளையாட்டு. திற-விளையாட்டு அன்று[22]
- கோதை-வரிப்பந்து என்பது பூப்பந்து. இதனை எறிந்து விளையாடுவர். [23]
- வயலைக்கொடிப்-பந்து
- வயலைக் கொடியைப் பந்தாகச் சுற்றி எறிந்து திளைத்து விளையாடுவர். [24]
- மைந்தர் குறும்பு
- மைந்தர் மகளிரின் பந்தும், கழங்கும் பலகளவு கொண்டு ஓடி அந்தண் கரைநின்று பாய்வார் [25][26]
பந்தாட்டப் பாடல்
பந்தாடும்போது பாட்டும் உண்டு.[27]
சங்ககாலத்து இந்தப் பந்தாட்டம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதை என்னும் நூலில் "பந்தடி கண்டது" என்னும் காதையில் விரிவாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பந்தாட்டம் தனித்திறன் விளையாட்டு. இதுவே மூவர், ஐவர் எனக் கூடி விளையாடும்போது அம்மானை எனப் பெயர் பெறும்.
மேலும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ ஆட்டொழி பந்துபோல் விளாம்பழம் விழும் - நற்றிணை 24-3,
- ↑ வரியணி பந்து - நற்றிணை 305-1,
- ↑ திருப்பரங்குன்றம் - வரிப்புனைப் பந்தொடு பாவை தூங்க - திருமுருகாற்றுப்படை 68
- ↑
- விண்தோய் வரைபந்து எறிந்த அயா வீடத்
- தண்தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே - கலித்தொகை 40-22,
- ↑ பெரும்பாணாற்றுப்படை 333 நுந்தை தொல் வியனகர் இளமையான் எறிபந்தோடு இகத்தந்தாய் - கலித்தொகை 57-7
- ↑
- தந்தை
- நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்து
- பந்தொடு பெயரும் பரிவிலாட்டி - நற்றிணை 140-7,
- ↑
- தந்தை இடனுடை வரைப்பின்
- ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி - நற்றிணை 324-7
- ↑ ஆயமொடு கெழீஇப் பந்துவழிப் படர்குவள் - அகநானூறு 153-3,
- ↑ ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் (தாய் வள்ளத்தில் பால் ஊட்டுவாள் - அகநானூறு 219-2,
- ↑ பந்து புடைப்பு அன்ன பாணிப் பல் அடிச் சில்பரிக் குதிரை - அகநானூறு 105-9,
- ↑ ஐங்குறுநூறு 295,
- ↑ நற்றிணை 249-7,
- ↑
- கூழுடை நல்லில் கொடும்பூண் மகளிர்,
- கொன்றை மென்சினை பனி தவழ்பவை போல்,
- பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க,
- மால்வரைச் சிலம்பில் மகிழ்சிறந்து ஆலும்,
- பீலி மஞ்ஞையின் இயலிக், கால
- தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை
- உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇ - பெரும்பாணாற்றுப்படை 333
- ↑ நற்றிணை 12-6,
- ↑ அகநானூறு 49-1,
- ↑ பந்துடன் மேவாள் - குறுந்தொகை 396
- ↑ ஐங்குறுநூறு 377
- ↑
- பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்
- ஆயமும் ஒன்றும் இவை நினையாள் - ஐந்திணை ஐம்பது 33-1
- ↑ நற்றிணை 179-2,
- ↑ அகநானூறு 17-1,
- ↑ சிலப்பதிகாரம் 12-1-35,
- ↑
- புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
- மலரா மாலைப் பந்து கண்டன்ன
- ஊன் சோற்று அமலை பாண்கடும்பு அருத்தும் - புறநானூறு 33-13,
- ↑ கோதை வரிப்பந்து கொண்டு எறிவார் - பரிபாடல் 9-47,
- ↑ பந்தர் வயலைப் பந்து எறிந்து ஆடி - அகநானூறு 275-3,
- ↑ பரிபாடல் 10-107
- ↑
- வரிப்பந்து கொண்டோடி
- நோதக்க செய்யும் சிறுபட்டி - கலித்தொகை 51-3,
- ↑
- சிலப்பதிகாரம் 29 கந்துகவரி என்னும் தலைப்பின் கீழ் 3 பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று.
- பொன்னி லங்கு பூங்கொ டி-பொ லஞ்செய் கோதை வில்லிட
- மின்னி லங்கு மேக லைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
- தென்ன்ன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த டித்துமே
- தேவ ரார மார்பன் வாழ்க வென்று பந்த டித்துமே.