சக்கரவர்த்தி நயினார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சக்கரவர்த்தி நயினார் (மே 17 1880-பிப்பிரவரி 12.1960) தத்துவத் துறையில் புகழ் பெற்று விளங்கிய பேராசிரியர். திருக்குறள் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். சமணத் தத்துவ அறிஞர் எனவும் போற்றப் படுகிறார்.

பிறப்பும் கல்வியும்

திண்டிவனம் அருகில் வீடூரில் பிறந்தார். சமண சமயத்தைச் சேர்ந்தவர். இளம் அகவையிலேயே கல்வியில் நாட்டம் கொண்டவராக இருந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்று மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறி தங்கப் பதக்கம் பெற்றார்.முதுகலைப் பட்டமும் கல்வியியலில் பட்டமும் பெற்றார். தத்துவம்,சமயம்,இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அவ்வத்துறை நூல்களைப் படிக்கலானார்.தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றார்.

பணி

தொடக்கத்தில் சென்னை கணக்காயர் அலுவலக எழுத்தராகப் பணி புரிந்தார். பின்னர் கீழ்க் காணும் கல்லூரிகளில் தத்துவத் துறை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

  • சென்னை மாநிலக் கல்லூரி (1906-1908)
  • குடந்தை அரசுக் கல்லூரி (1908-1912)
  • இராச முந்திரி அரசுக் கல்லூரி (1912-1917)
  • சென்னை மாநிலக் கல்லூரி தத்துவத் துறைத் தலைவர் (1917-1930)
  • இராசமுந்திரி அரசுக் கல்லூரி முதல்வர் (1930-1932)
  • குடந்தை அரசுக் கல்லூரி முதல்வர் (1932-1938)

படைப்புகளும் பதிப்புகளும்

சக்கரவர்த்தி நயினார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.இந்நூல் 'திருக்குறள் வழியில் செய்தி' என்று தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரையை இவர் பதிப்பித்தார். இதுமட்டுமல்லாது நீலகேசி திவாகர வாமன முனிவர் உரை, மேரு மந்திரப் புராண உரை ஆகியவற்றையும் பதிப்பித்தார். நீலகேசிக்கு முதன் முதல் உரையை வெளியிட்டவர் சக்கரவர்த்தி நயினாரே ஆவார்.சமண மதம் பற்றி அறிய விரும்பிய திரு.வி.க.அவர்கள் சக்கரவர்த்தி நயினார் இல்லம் வந்து பாடம் கேட்டார்.

பிற செய்திகள்

குடந்தைக் கல்லூரியில் பணி புரிந்த போது ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்ப்பொதுமக்கள் எனப் பலரிடம் செல்வாக்குடன் விளங்கினார். குடந்தையில் மக்கள் மன்றம் ஒன்றை ஏற்படுத்தினார். டென்னிசு விளையாட்டில் ஆர்வம் கொண்டார். இவரைப் பாராட்டி ஆங்கிலேய இந்திய அரசு இந்தியக் கல்விப் பணி (ஐ.இ.எசு ) என்னும் பட்டத்தையும் இராவ் பகதூர் பட்டத்தையும் வழங்கியது.

உசாத்துணை

  • செம்மொழிச் செம்மல்கள், ஆசிரியர்: முனைவர் பா. இறையரசன் தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17
"https://tamilar.wiki/index.php?title=சக்கரவர்த்தி_நயினார்&oldid=27701" இருந்து மீள்விக்கப்பட்டது