க. சு. நவநீதகிருஷ்ண பாரதி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
நவநீதகிருஷ்ண பாரதி |
---|---|
பிறந்ததிகதி | 1 மார்ச்சு 1889 |
பிறந்தஇடம் | கரவட்டங்குடி, கிருஷ்ணாபுரம், தமிழ்நாடு |
இறப்பு | திசம்பர் 22, 1954 | (அகவை 65)
பணி | தமிழாசிரியர், புலவர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
பெற்றோர் | சுப்பிரமணிய பாரதி |
துணைவர் | சௌந்தரநாயகி |
பிள்ளைகள் | பத்மாவதி பூர்ணானந்தா |
க. சு. நவநீதகிருஷ்ண பாரதி (1 மார்ச் 1889 - 22 திசம்பர் 1954)[1] ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் இயற்றிய தனிச் செய்யுள்களின் தொகுப்பாகிய உலகியல் விளக்கம் என்னும் நூலின் பதிப்பாசிரியராய் விபுலாநந்த அடிகள் பணியாற்றியுள்ளார். அடிகளின் பதிகத்தினையும், கடவுள் வாழ்த்தினையும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட முன்னுரையினையும் கொண்டு 1922 இல் இந்நூல் வெளியிடப்பட்டது.[2] திருவாசகம், நன்னூல், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பாராட்டுப் பெற்றார்.[3]
வாழ்க்கைச் சுருக்கம்
நவநீதகிருஷ்ண பாரதி தமிழ்நாடு, கிருஷ்ணாபுரம், கரவட்டங்குடியில் சுப்பிரமணிய பாரதி, தைலம்மை ஆகியோருக்குப் பிறந்தார்.[4] இராமசாமிப் புலவரிடம் தமிழ் மொழியைக் கற்றார். இளம் வயதில் இலக்கணம், இலக்கியம், தருக்கம் ஆகியவற்றைக் கற்றார். நாராயணசாமி ஐயரிடம் சங்க இலக்கியங்களையும், அரசஞ்சண்முகனாரிடம் தொல்காப்பியத்தையும் கற்றுத் தேர்ந்தார்.[5] தனது பதினெட்டாவது வயதில் பாலைக்காடு விக்டோரியாக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளின் பின் திருவாவடுதுறை அம்பலவாணதேசிக சுவாமிகளுக்குத் திருமுறை ஆய்வுத் துணைவராகவும்,[4] தொடர்ந்து திருவாரூர்க் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும், இராமநாதன் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்ற 1917 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார்.[2][4] மாவிட்டபுரத்தில் இவர் வாழ்ந்த வீடு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மேற்கு வீதிக் கரையில் அமைந்திருந்தது. தேசநேசன் இதழில் இவர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[4] இவரது மனைவி பெயர் சவுந்தரநாயகி. சமூகசேவகி காலஞ்சென்ற பத்மாவதி பூர்ணானந்தா இவர்களது மகள் ஆவார்.[6]
எழுதிய நூல்கள்
- உலகியல் விளக்கம் (செய்யுள் தொகுப்பு), 1922
- பாரதீயம் (3 பாகங்கள், இலக்கண நூல்), 1949
- திருவாசகப்பேறு: சிவபுராணமும் கீர்த்தித்திருவகவலும், நாவலர் அச்சுக்கூடம், 1953
- திருவாசகம் ஆராய்ச்சிப் பேருரை, தெல்லிப்பழை, 1954
- பறம்புமலைப் பாரி (செய்யுள்கள்)[2]
- புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம் (செய்யுள்கள்)[4]
- திருவடிக் கதம்பம் (செய்யுள்கள்)[2]
- காந்தி வெண்பா (அச்சில் வெளிவரவில்லை)[2]
பட்டங்கள்
- பண்டிதர்
- புலவர்மணி - யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் 1952 திசம்பர் 1 இல் பொற்கிழியளித்து இப்பட்டத்தை வழங்கியது.[5]
மேற்கோள்கள்
- ↑ தமிழ்ப் புலவர் வரிசை ஒன்பதாம் புத்தகம், சு. அ. இராமசாமிப் புலவர், பக். 134, 1955
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 ஈழகேசரி வெள்ளிவிழா மலர். யாழ்ப்பாணம்: ஈழகேசரி. 1956. pp. பக். 209.
- ↑ "உரையாசிரியர்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். Archived from the original on 27 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2022.
- ↑ 5.0 5.1 கலாநிதி, திசம்பர் 1952, பக். 7
- ↑ "இறைபதமடைந்த சமூகசேவகி பத்மாவதி பூரணானந்தா". தினக்குரல். 10 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2011.[தொடர்பிழந்த இணைப்பு]