க. அருணாசலம்
க. அருணாசலம் | |
---|---|
முழுப்பெயர் | கனகசபை |
அருணாசலம் | |
பிறப்பு | 14-01-1946 |
பிறந்த இடம் | அல்லாரை, |
யாழ்ப்பாணம் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
மறைவு | 27-04-2015 |
மீசாலை | |
யாழ்ப்பாணம் | |
பணி | பேராசிரியர் |
பெற்றோர் | கனகசபை |
காசிப்பிள்ளை |
கனகசபை அருணாசலம் (14 சனவரி 1946 - 27 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ்ப் பேராசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
அருணாசலம் யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி, அல்லாரை என்ற ஊரில் கனகசபை, காசிப்பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகப் பயின்று 1971 இல் இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் தொடர்பாக ஆராய்ந்து 1974 இல் முதுகலைப் பட்டமும் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் தொடர்பாக ஆராய்ந்து 1979 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டமும் பெற்றார். 1996 இல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1995 முதல் 1998 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். மலையகத்தில் நீண்ட காலம் பணியாற்றியதன் காரணமாக, மலையக இலக்கியத்தில் இவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். "மலையகத் தமிழ் இலக்கியம்" என்ற ஆய்வு நூலை எழுதினார். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது நூல்கள்
- பாரதியார் சிந்தனைகள் (1984)
- சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள் (1992)
- காலக்கண்ணாடி - இளங்கதிர் (1994)
- இலங்கையின் மலையக தமிழர் (1994)
- மலையகத் தமிழ் இலக்கியம் (1994)
- இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள் - ஓர் அறிமுகம்
- இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் (1997)
- இளங்கதிர்
- சாதனையாளர் சாரல்நாடன் (2005)
விருதுகளும் பரிசுகளும்
- தமிழ் வரலாற்றுப் புதினம் தொடர்பான தமது கலாநிதிப்பட்ட ஆய்வேட்டுக்காகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முதன் முதலாக வழங்கப்பட்ட பொன்னம்பல முதலியார் பரிசு.
- சாகித்திய ரத்தினா (2012, இலங்கை அரசு)